உத்தரி மாதாவும் யுத்த காலமும்

536

வயவையூரில் எனக்கு மிகவும் பிடித்தமான கோவில்கள் கண்ணகை அம்மன் கோவிலும் வட மூலை உத்தரி மாதா கோவிலும்.

எல்லாக் கடவுளரும் கோவில்களில் குடி இருக்க மக்கள் கோவிலை நாடி வருவதுதான் வழக்கம். ஆனால் கண்ணகை அம்மா மட்டும் ஆண்டுக்கொருமுறை தன் மக்களைத் தேடி ஊருக்குள் உலா வருவார்.

கடவுளைக் காண சாதியைக் கடந்து உள்ளே வர இயலாது மனம் வெதும்பிய மக்களையும் தேடிப்போகும் கண்ணகை அம்மாவைக் கண்டு நெக்குருகும் அம்மக்களைக் காண்கையில் ஆன்மீகத்தின் அர்த்தம் புரியும்.

கண்ணகை அம்மன் இந்த மாதிரி என்றால் உத்தரிமாதா இன்னொரு மாதிரி.

உத்தரி மாதா முன்றலில் ஆடிய அன்றில் என்பதையும் தாண்டி உத்தரி மாதாவுடனான பந்தம் வலுவான பிணைப்பாக இருக்க முக்கிய காரணம் ஒன்று உண்டு.

நவாலியூர் தேவாலயம் மேல் கொண்டு வீசி சிறு மொட்டுகளைக் கருக்கிய மிலேச்சத் தனத்துக்கு முன்னதாக சண்டை என்றாலே கோவில்களும், பள்ளிகளும் பாதுகாப்பான இடங்கள் என எண்ணியதுண்டு.

அந்த வகையில் சண்டை தொடங்கியதும் இரண்டு மூன்று நாளைக்குத்தானே என்ற எங்கள் காவல் தெய்வங்கள் மீதான நம்பிக்கையுடன் தற்காலிகமாக நாங்கள் அடைக்கலம் புகுந்த இடம் உத்தரி மாதா ஆலயம். 

இங்கே நாங்கள் என்பது ஒரு குடும்பம் அல்ல. எவ்வித பாகுபாடும் இல்லாமல் ஒரு குடும்பமான பல குடும்பங்கள்.  வழக்கத்துக்கு மாறாக ஒரு கிழமைக்கு மேல் அங்கே தங்கி இருந்ததாக ஞாபகம்.

அந்த தங்கலில் மாதாவின் மண்டபம் அத்தனை பேருக்கும் வீடானது. ஒழுக்கம் ஒவ்வொருவருக்கும் தடுப்புச் சுவரானது. பனங்கிழங்கு அடுக்கினாற்போல் வரிசையில் படுத்துறங்கினாலும், ஒவ்வொருவரும் கற்போடு இருந்தார்கள். 

கிடைத்த உணவை பகிர்ந்துண்டனர். சிரங்கு போன்றதொரு தொற்று நோய் பரவிய காலம் என்பதால் மற்றவரின் சுக சக சுகாதாரத்தில் அக்கறை காட்டினர். 

அக்குறுகிய காலப்பகுதியில் சாதி செத்துச் சனம் மட்டும் வாழ்ந்தது. ஆண், பெண் பாலினம் மறைந்து மனிதம் மட்டும் உலவியது. மொத்தத்தில் சமரசம் அங்கே மகிழ்ந்தாடியது.

அந்த இடந்தைப் பற்றி இந்த இடத்தில் எண்ணுகிறேன். அங்கே தங்கிய குறுகாலத்தில் பசி, பட்டினி, பிணி போக்கிக் காத்த கருணை மாதா மீண்டும் தன் இருப்பிடம் வந்து விட்டாள். அன்று போல் என்றுன் எமைக் காப்பாள்.