உழைப்பாளர் நாளென்றால் தாயகத்தில் வீதி உலாவரும் காட்சிப்படுத்துகை ஊர்திகள் (அலங்கார வாகனங்கள்) ஞாபகத்துக்கு வரும்.
உழைக்கும் வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் நிலைத்தகவலை காவியபடி பவனிக்கும் அவ்வூர்திகள் சொல்லும் கதைகள் நெஞ்சில் பாரத்தையும் ஆரத்தையும் புகுத்திச் செல்லும் விசித்திரமானவை. அவை ஒரு வகை அனுபவம் எனில் வசிப்பிட ஊர்வலம் இன்னொரு வகை அனுபவம்.
பிரெஞ்சு உழைப்பாளர் நலச் சங்கங்கள் தலைமையில் துருக்கிய, ஈழ இனம் உள்ளிட்ட பல்லினக் குழுக்கள் அணிவகுக்கும் உழைப்பாளர் நாள் அணிவகுப்பில் தமிழ் அணியை இணைக்கும் நிகழ்வு சிரத்தையான ஒன்று.
அணிவகுப்பின் இறுதியில் இடம்பிடித்தால் மக்கள் கவனம் ஈர்க்கப்படுவது குறையும். எனவே இடையில் இணைக்க வேண்டிய தேவை உண்டு. தமிழணியின் கட்டுக்கோப்பை நன்கறிந்த பிரெஞ்சு அணி அவர்களுக்கு அடுத்த நிலையில் நம் அணி தொடர்வதை விரும்பும். சமத்துவம் கருதி அதனை அவர்கள் பொதுவில் வெளிக்காட்டுவதில்லை. ஆனாலும் அவர்கள் குறிப்புணர்ந்து தமிழ் அணி செயல்படும்.
துல்லியமான திட்டமிடலுடனும் திடமான களப்பணியுடனும், இரண்டாம் இடத்தை பிடிக்க முண்டியடிக்கும் பல்லணிகளை ஊடறுத்து இரண்டாம் நிலை அணியாக தன்னை நிலைநிறுத்தும் பணியை தமிழணி செவ்வனே முடிக்கும். களக் கட்டளைகள் ஏதுமின்றி கண்ணசைவோ கையசைவோ இன்ன பிற சமிக்கைகளோ இன்றி, இரண்டாம் நிலை அணி எனும் இலக்கை மட்டும் கொண்டு இயங்கி, நேர்த்தியான ஒருங்கிணைப்பிலும் ஒழுங்கமைப்பிலும் இயைந்து செயல்பட்டு இரண்டாம் அணியாக நிலை நிறுத்துவதை மற்ற அணிகள் வியந்து நோக்குவர். அடுத்த ஆண்டு இதை முறியடிப்போம் எனச் சொன்னாலும் இயலாத ஒன்றாகவே அவர்களுக்கு அது இன்று வரை உண்டு.
நிற்க, அத்தகு மகிழ்வூட்டு அனுபவம் தரும் மே 1 இந்த ஆண்டு சற்றே வேறுபடுகிறது.
வன்முறையாளர்கள் புகுந்திடக் கூடும் என்பதால் பாதுகாப்பு இறுக்கப்பட்டுள்ளது. வழக்கத்துக்கு மாறாக 7000 வரையான கலகம் அடக்கும் அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். கெடுபிடிகள் துன்புறுத்துகின்றன. கைதுகள் அரங்கேறுகின்றன.
அண்மைக் காலமாகத் தொடர்ந்து இடம்பெற்று வரும் மஞ்சளாடைப் போராட்டத்தினைப் பயன்படுத்தி வன்முறையாளர்கள் அழிவுகளை ஏற்படுத்தியதால் கிடைத்த படிப்பினையின் பலன்கள் இவை.
வன்முறையாளர்களிடமிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை என்கிறது அரச தரப்பு..
போராட்டங்களை நசுக்க, மக்ககை அச்சுறுத்தலுக்குள் வைத்திருக்க வன்முறையாளர்களை ஏவி விடுவதே அரசின் அரசியல்தானே என்கிறது இன்னொரு தரப்பு.
எது எப்படியோ, உரிmay யின் தொண்டை யாரோ எவராலோ நன்கு திட்டமிடப்பட்டு திருகப்படுவதாக நெஞ்சில் படுகிறது.