பகுத்தறிவு கொண்டு மெய்ப்பொருள் காணத் தவறுவோமேயானால் முதலாளி-தொழிலாளி, வெள்ளை-கறுப்பு, ஆண்-பெண் ஏற்றத் தாழ்வுகளை முற்றாக அழிக்க முடியாது.
ஆண் பெண் ஏற்றத்தாழ்வு.. முதலாளி தொழிலாளி வர்க்க வேறுபாடு.. கறுப்பு வெள்ளை நிறவெறி.. இனவெறி என அபாயகரமான விடயங்களின் நீளம் அதிகம். இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் புரிந்துணர்வின்மை மிக முக்கிய காரணியாகும்.
முதலாளி எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும், ஏற்றத்தாழ்வு மனப்பாங்கற்றவராக இருந்தாலும், தொழிலாளி “முதலாளி என்பவன் கசக்கிப் பிழிபவன். தொழிலாளியை அடிமையாக நினைப்பவன்” என்ற பழைய பஞ்சாங்கத்தை விடுவதில்லை..
வெள்ளைக்காரன் எவ்வளவுதான் சமத்துவத்துடன் பழகினாலும், அவன் நிறவெறி மிக்கவனெனும் தப்பபிப்பிராயம் கொண்டு இருவருக்கும் இடையிலான உறவு கெடுப்பதையும் விடுவதாக இல்லை..
ஆண் எவ்வளவுதான் மதிப்புடன் நடந்தாலும், ஆண் என்றாலே பெண்ணை அடிமைப்படுத்துபவன் என்ற கண்ணோட்டத்தை விட்டுவிடாமல், ஏட்டிக்குப் போட்டியாக நடப்பது; கதைப்பது; இன்னபிற எல்லாம் செய்து உறவைச் சீர்குலைத்து அல்லல்படுவதும் உண்டு..
மறுதலையாக முதலாளி தொழிலாளியையும் வெள்ளைக்காரன் கறுப்பர்களையும், ஆண் பெண்ணையும் தப்பாகப் புரிந்துகொண்டு “இவர்கள் பழைய நினைப்பில் இருந்துகொண்டு பிரசைனை செய்கிறார்கள்” என கற்பிதம் கொண்டு ஆடுவதும் உண்டு.
பட்டறிவுகள் நல்லாசாந்தான்.. ஆனால் அதை சரிவரப் பயன்படுத்தும் திறன் தேவை. அதான் பகுத்தறிவு. பட்டறிவு பட்டறிவு என்று கூறி சந்தேகித்தால் சந்தோசம் காணாமல் போய்விடும். விட்டுக்கொடுப்பு அற்று விடும். அதனால் நிம்மதி தொலைந்து விடும்.
அடக்குமுறையை இனங்கண்டு அழிக்க வேண்டியது எந்தளவு முக்கியமோ, அதே போல சமத்துவவாதிகளை அடையாளங்கண்டு அவர்களுடன் சுமுகமாகவும் சினேகமாகவும் விட்டுக்கொடுப்புடனும் பழகி உறவை வாசனையுடன் மலரச் செய்ய வேண்டியதும் முக்கியம் ஆகும்.
ஒவ்வொருவரும் இதைச் செய்வோம்.. உலகை அழகானதாக்குவோம்.