உணவை விரும்பு.. உணவே இரும்பு..

555

இறைச்சிக்கறிக்கு தேசிக்காய்ப்புளி விட்டிறக்குவது ஊர்ச்சமையல் முறை.. மச்சச்சாப்பாடு.. தேசிப்புளி விட்டுச் சாப்பிடு.. செமிக்குமென பெரிசுகள் சொல்லக் கேட்டிருக்கின்றோம். இதன் காரணங்களை நாம் அறிந்திருந்தால் பெரியோர் சொல் கேட்கும் குணம் எல்லாருடத்திலும் வந்திருக்கும்.

நல்லிரத்தம் குறைச்சு போச்சு. எமது இரத்தத்தில் உள்ள செவ்வணுக்கள் (செங்குருதிச் சிறுதட்டுகள்) குறைவதை அல்லது வலு இழப்பதையே இவ்வாறு சொல்வார்கள். இந்த செவ்வணுக்களின் விருத்தி ஈமோகுளோபினில் தங்கி உள்ளது. ஈமோ குளோபினில் உள்ள இரும்புச் சத்து செவ்வணுக்கள் விருத்தியடைய இன்றி அமையாதவை. 

அதனால்தான் நல்லிரத்தம் குறைஞ்சு போச்சு.. மீன் சாப்பிடு என்பார்கள். மீன், இறைச்சி வகைகளில் இரும்புச் சத்து அதிகம். கருணைக்கிழங்கு, பீன்ஸ், சோயா, புரூன்பழம் போன்ற காய்கனிகளிலும் இரும்புச் சத்து அதிகம் உண்டு.

தானியங்கள், செரியல்களில் இரும்புச் சத்து அதிகம். காலை உணவுக்கு இவற்றைப் பரிந்துரைக்க இதுவே காரணம்.

பசுப்பாலிலும், குங்குமப் பூவிலும் இரும்புச் சத்து நிறைய உண்டு. கர்ப்பிணிகளுக்கு ஈருயுருக்குத் தேவையான இரும்புச் சத்து தேவை. இதனால்த்தான் பாலில் குங்குமப் பூக் கலந்து கொடுக்கிறார்கள். இதைச் சொன்னால் பயபிள்ளைகள் கேட்காது என்பதால், வெள்ளை மேல் உள்ள கொள்ளை அன்பைக் கொண்டு குங்குமப் பூவைப் பாலில் கரைச்சுக் குடித்தால் வெள்ளைப் பிள்ளை பிறக்கும் என்று சொன்னார்கள்.

இங்கே ஞாபகத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில், தேயிலை, கோப்பிகளில் உள்ள கஃபின் மூலக் கூறு இரும்புச் சத்தை அழிக்க வல்லது. எனவே இவை ஏதும் கலக்காது பாலைக் குடிக்க வேண்டும். அன்றாடம் நாம் குடிக்கும் தேனீர், கோப்பிகளின் அளவையும் குறைக்க வேண்டும்.

ஈரல் சாப்பிடு.. இரத்தம் ஊறும் எனச் சொல்லவும் கேட்டதுண்டு. ஈரலிலும் அதிக செறிவில் இரும்புச் சத்து உண்டு. அதனாக்தான் இவ்வாறு சொன்னார்கள்.

இரும்புச்சத்தை இலகுவாகப் பிரித்தெடுக்க விட்டமின் சீ உதவும். அதனால்தான் மச்ச, மாமிச உணவோடு விட்டமின் சீ நிறைந்த தேசிப்புளி சேர்த்தார்கள் எமது முன்னோடிகள். 

 

அதைவிட காலை பால் குடித்தவுடன் தோடம்பழச் சாறு அருந்தும் பழக்கம் பிரெஞ்சியர்களிடம் உண்டு. அதற்கான் காரணமும் இதுவே..

எங்கள் பண்டை உணவு முறை ஒவ்வொன்றும் பயனுள்ள ஆரோக்கிய அர்த்தம் கொண்டவை. அவற்றை நாம் கடைப்பிடித்தாலே நோய் நொடி அண்டாமல் வாழலாம்.