வாலிவதமும் கர்ணவதமும் ஒரு ஒப்பீடு

இராவணன் அட்டகாசம் அதிகரித்த காலம். இராவணன் கதை முடிக்க தேவர்கள் விஷ்ணுவுடன் வேண்டியபோது தன்னுடைய அவதாரம் பற்றிச் சொல்லி, தேவர்களை வானரராய் பிறக்கும்படியும் விஷ்ணு சொல்கிறார்.
இதனால் வாலி – சுக்ரீவன் ஜனனம் நிகழ்கிறது. வாலி – இந்திரனின் அம்சம். இந்திரன் அவனுக்கு ஒரு வரமும் தருகிறான். வாலியுடம் யார் மோதினாலும் அவரின் பலத்தில் பாதி வாலியைச் சேரும்.
சுக்ரீவன் சூரியனின் அம்சம். வாலி மூத்தவன் என்பதால் அரசனாகிறான். அவனுடைய கடமை இராமனுக்காக காத்திருத்தல். ஆனால்…
உலகியல்பின்படி வாலி தன் சுக வாழ்வில் மூழ்குகிறான். அவனை எதிர்த்தோரை எல்லாம் பரலோகம் அனுப்புகிறான். துந்துபி, மாயாவி என அவன் பலி பட்டியல் பெரிது. இராவணனையும் வெல்கிறான். அவனை தன் மகன் அங்கதனனின் தொட்டிலில் விளையாட்டு பொம்மையாக தொங்க விடுகிறான்.
வாலி ஒவ்வொரு போரில் வெல்லும்பொழுதும் ஒவ்வொரு பிரச்சனை உண்டாகிக் கொண்டே இருக்கிறது. ஒரு பெண் காரணத்தால் துந்துபிக்கும் வாலிக்கும் விரோதம் இருந்தது.  அதில் ஏற்பட்ட கைகலப்பில் வாலி, துந்துபியைக் கொன்றுவிட்டான்.  அவனுடைய சகோதரனான மாயாவி, இந்தக் காரணத்தால் வாலியோடு சண்டை போட வந்தான்… என்று வால்மீகியின் சம்பவக் கோர்வை விரிகிறது.
துந்துபியைக் கொன்றபோது மதங்க முனிவரின் சாபத்திற்கு ஆளாகிறான்.
மாயாவியைக் கொன்றபோது சுக்ரீவன் வாலி இறந்து விட்டதாக கருதி, அமைச்சர்களின் வற்புறுத்தலின் பேரில் அரசனாக…
சுக்ரீவனை சதிகாரனாகக் கருதி அடித்து விரட்டியதோடு அல்லாமல் அவன் மனைவி ருமாவையும் கவர்ந்து கொள்கிறான்.
இராவணனை வென்றாலும் இராவணனுடன் நட்பு கொள்கிறான். என்னதான் இராவணன் அவன் வீரத்திற்கு பெயர் பெற்றவன் என்றாலும் அவன் சிறந்த இராஜதந்திரிதான். அவனை வென்ற வாலியையே நண்பனாக பெற்று விடுகிறான்.
ஆக வாலி பலம் மிக்கவன் என்றாலும் அறிவும் தர்ம சிந்தனையும் குறைந்தவன். வாலியே சொல்வான் . இராமன் வாலியிடம் வேண்டியிருந்தால் சிறிது நேரத்திலேயே சீதையை மீட்டுக் கொடுத்திருப்பேன் என.
அனுமனும் ஜாம்பவானும் சுக்ரீவனும் வாலியின் பலம் பற்றி இராமனுக்குச் சொல்லித்தான் இருக்கிறார்கள். அதனால்தான் மறைந்திருந்து கொல்லும் திட்டத்தையே இராமன் உருவாக்குகிறான்.
இது எங்கே மஹாபாரதத்தில் வந்து சேர்கிறது?
துவாரகையில் இருந்து பிரபாஷ சேத்திரம் வரும் கிருஷ்ணன் ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்கும் கிருஷ்ணனின் பாதத்தை மான் என்று எண்ணும் வேடன்  தூரத்தில் இருந்து ஒரு வேடன்  அம்பால் அடித்தான் அந்த அம்பு கிருஷ்ணனின் மேல் பட்டு கிருஷ்ணனின் முடிவுக்கு காரணமானது.
அருகே வந்த வேடன்  கிருஷ்ணன் அடிபட்டதைப் பார்த்து மனம் பதறி  மன்னிப்புக் கேட்டான். அதற்கு கிருஷ்ணன் உன் மேல் தவறில்லை ராமாவதாரத்தில் நீ வாலி , உன்னை நான் மறைந்திருந்து அடித்தேன் அதைத்தானே இப்போது  நீ செய்திருக்கிறாய் என்று சமாதானப்படுத்தி அனுப்பினான் கிருஷ்ணன்.
கர்ம பலன் என்பதை இப்படி இரண்டையும் இணைத்துக் காட்டுகிறது இதிகாசங்கள்.
வாலியைக் கொன்றபின் வாலிக்கும் இராமனுக்கும் மிகப்பெரிய வாக்குவாதமே நடக்கிறது.
செருக் களத்து உருத்து எய்யாதே,
வெவ்விய புளிஞர் என்ன, விலங்கியே மறைந்து, வில்லால் எவ்வியது என்னை…………. ………….. …….?’
வாலியிடமிருந்து கிளம்புகிறது. சரியான இந்தக் கேள்விக்கு முறையாகப் பதில் சொல்ல முடியாமல் மௌனம் காக்கிறான் இராமன். இதுவரை பேசாமல் நின்றிருந்த இலக்குவன் அப்போது குறிக்கிடுகிறான்; வாலி பெற்ற வரத்தை நினைவுறுத்தி, அவன் எதிரே இராமன் வந்திருந்தால் பாதி வலிமை வாலிக்குப் போய் விடும் எனக் கருதியே இராமன் மறைந்திருந்து தாக்கினான் என்று கூறவில்லை இலக்குவன். மாறாக, முழுமுதல் சரணாகதியான சுக்கிரிவனுக்கு இராமன் அடைக்கலம் தந்துவிட்டான் ; அப்படி இருக்க, வாலியும் அடைக்கலம் என்று கேட்டுவிட்டால் மறுக்கவும் முடியாமல் கொடுக்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாவானே இராமன் என்றுதான் மறைந்திருந்து தாக்கினான் என்பது இலக்குவன் விளக்கம்.
இன்னும் சில விவாதங்கள்
1. எப்போது வாலி அடுத்தவன் மனைவியை கவர்ந்தானோ அப்போதே வாலி தர்மத்திலிருந்து வழுவி விட்டான்
2. மிருகங்களை மறைந்திருந்து கொல்லலாம் என்பது விதி. வாலி குரங்கு எனும் மிருக வகையை சேர்ந்தவன்
அதை விட இன்னுமொரு முக்கிய சூட்சமும் உண்டு.
சுக்ரீவன் சூரியனின் மகன். இராமனும் சூரிய வம்சத்தவன். எனில் சுக்ரீவனின் மனைவியும் சூரிய வம்சத்து மருமகளே. ஆக சுக்ரீவனின் மனைவியை மீட்காமல் சீதையை மட்டுமே இராமன் மீட்க முடியாது.
வாலியை இராமன் மறைந்திருந்து அம்பெய்து வீழ்த்தினான் என்ற பழி அவனுக்கு மாறுவதாக இல்லை.
இதை தத்துவார்த்துவமாக இப்படி காணலாம்.
நம் மனதிலேயே வாலியும் சுக்ரீவனும் இருக்கிறார்கள்.
வாலி இந்திரனின் மகன். போகன். அதாவது எதையும் அனுபவிக்க ஆசைப்படுபவன். அவனுக்கு எதாவது கிட்டவில்லை என்றால் அதன் மீதான விருப்பம் இரட்டிப்பாகும். வெறிகொண்டு அடைய ஆசைப்படுவான். ஆக ஆசைதான் வாலி.
சுக்ரீவன் சூரிய புத்திரன். அடக்கமானவன்.  புத்தி என்பதே சுக்ரீவனாகும். ஆசை புத்தியை ஒரு கட்டத்தில் புறந்தள்ளி அழிக்க நினைக்கும்.
ஆங்கிலத்தின் will என்ற பதம் வாலியையேக் குறிப்பதாக கொள்ளலாம். ஆசைக்கு நிகரான பலம் பெற்றது எதுவுமே இல்லை.
புத்தி தனக்கான சரியான துணை கிட்டும் வரை ஆசையால் துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இறை சிந்தனை என்னும் இராம நட்பு கிடைத்த பின்னரே புத்திக்கு ஆசையுடன் போரிடும் திடம் கிடைக்கிறது.
புத்தியால் ஆசை வெல்லப்பட இறை சிந்தனை அதன் பின்னின்று கணை தொடுக்கும். ஆசை அறுக்கப்படும். இறை சிந்தனை ஆசையுடன் நேரிடையாகப் போரிட முடியாது. அது ஞானத்தின் பின் நின்றே போரிட்டு மாய்க்கிறது.
இப்படி ஒரு தர்மம் வாலிவதத்தில் உண்டு. ஆசையை புத்தியால் வெல்ல முடியாது, ஆசையுடன் புத்தியுடன் போரிடும்பொழுது புத்தியின் பின் மறைந்திருந்து ஆசையை இறைசிந்தனை கொல்லும்.
ஆக வாலிவதம் என்பதை ஆசையைக் கொன்று புத்தியை அரசுகட்டிலேற்றி அதன் துணையால் எதிரிகளை வெல்லுதலாம்.
இராமன் ஏன் வாலியுடன் போர்புரியவில்லை?
இராமன் ஒரு தபஸ்வியாகத்தான் இருக்கிறான். அவன் யாருக்கும் அறைகூவல் விடுக்கக் கூடாது. இராவணனைக் கூட அவன் அறைகூவல் விட்டு அழைக்கவில்லை. தவறு செய்பவர்களை தண்டிக்கும் அதிகாரம் மட்டுமே தபஸ்விக்கு உண்டு. இராமன் அரசனாக பதினான்கு ஆண்டும் நடக்கவில்லை.
வாலியை நேருக்கு நேர் சந்தித்து இருந்தால் இராமன் தோற்றிருப்பானா?
சாத்தியம் இல்லை. காரணம் வாலி கதை கொண்டு அடிப்பானென்றாலும் ஒரு பாணத்தில் உயிரிழப்பான் என்பதே உண்மை. வாலியை நேரடியாக இராமன் ஒரு பாணத்தில் அடித்திருந்தால் வாலியைப் பற்றி இனியும் நாம் பேசிக்கொண்டிருக்கப்போவதில்லை.
இன்னும் பேசலாமே…
இன்னும் ஒரு கேள்வி..
இராவணனின் மகன் மேகநாதன் என்னும் இந்திரஜித் இந்திரனை வென்றான்.
இந்திரனின் மகனான வாலி இராவணனை வென்றான்.
ஏன் இந்திரஜித் இந்திரனுடன் போரிட்ட போது இந்திரன் வாலியின் உதவியை கேட்கவில்லை? எது முந்தைய போர் எது பிந்தைய போர்?
 வாலி வதம் ஒரு குற்றம் – ஒரு அம்பு!
வாலி வதம் மட்டுமே தனியாய் எடுத்துக் கொண்டு பார்த்தால் அது குழப்பமாய் இருக்கும்.
இராமாயணத்தில் நான்கு பலவான்கள் உண்டு.
1. வாலி
2. இராவணன்
3. கும்பகர்ணன்
4. அனுமான்
இதில் முதல் மூவரும் பலத்தை எப்படி உபயோகப்படுத்தக் கூடாது என்பதற்கு உதாரணம். அனுமான் பலத்தை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதன் உதாரணம்.
வாலி தன் பலத்தை எண்ணி கொண்ட கர்வம் அவனை அனைவரிடமும் வலுச்சண்டைக்கு போகவைத்தது.
இராவணன் தன் பலத்தை எளியவர்களைக் கொடுமைப்படுத்தி அக்கிரமங்களை அரங்கேற்றவே பயன்படுத்தினான்.
கும்பகர்ணன் அண்ணனின் அத்தனை ஆட்டங்களுக்கும் துணை நின்றான்.
வாலியின் மரணத்தின் போது இராமன் இன்னொன்றையும் சொல்கிறான்.
உலகம் முழுதும் இஷ்வாகு குலத்தினரின் ஆட்சி. அந்த குலத்தைச் சேர்ந்த பரதனின் ஆட்சியில் நடக்கும் தவறுகளை தண்டிக்கும் உரிமை பெற்றவனாக இராமன் தன்னைச் சொல்லிக் கொள்கிறான்.
குற்றவாளியை எந்த அதிகாரியும் துவந்த யுத்தத்திற்கு அழைப்பதில்லை. விலங்குகளை மறைந்திருந்தே வேட்டையாடல் உத்தமம் போன்ற பல வாதங்கள் இங்கே இருக்கின்றன