இச்சொல் தமிழ் இனத்தையே கேவலப்படுத்துகின்றது. இறைவன் அன்பான மனிதர்களை படைத்தது அன்புடனும், பாசத்துடனும் நல்லவர்களாக வாழ அறிவுடன் படைத்தார். மனிதர்கள் அறிவைக் கொண்டு கற்பனைக்கு கூட எட்டாத செயல்களை செய்கிறார்கள்.
வசதி படைத்தோர் தங்கள் பிள்ளைகள் வசதியாக வாழ வேண்டும் என்பதற்க்காக தங்களிடமிருந்தவைகளை கொடுத்தனர். அதுவே காலப்போக்கில் தமிழ் இனத்தையே அழிக்கும் நோயாகியது. எவ்வித வசதியும் இல்லாத அல்லது வசதி குறைந்த எத்தனையோ மனிதர்கள் இதனால் அழிக்கப்பட்டுள்ளார்கள் அல்லது எவ்வளவோ கொடுமைகளை அனுபவிக்கிறார்கள்.
குறிப்பாக பெண்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் அல்லது நல்ல பண்புகளை கொண்டிருந்தாலும் ஆண் கேட்க்கும் சீதனம் கொடுக்க முடியாது தவிக்கின்றனர்.
பிள்ளைகளை பெற்ற பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த வாழ்க்கையை கொடுக்கவேண்டியது அவர்கள் பொறுப்பு; கடமை. படிக்க வைத்து உத்தியோகத்திலோ அல்லது எதாவது வழிகளிலோ அவர்களை முன்னேற்ற வேண்டியது பெற்றோர் பொறுப்பு.
பிள்ளைகள் தன் குடும்பத்தை அமைத்துக் கொள்ள வாழ்க்கைத் துணையைச் சேர்த்துக்கொள்ளும் போது என் பிள்ளையை இப்படி ஆக்கினேன், அப்படி ஆக்கினேன் எனச் சொல்லி அடுத்தவன் சொத்துக்களை அபகரிப்பதுதான் சீதனம். இதை எவ்வித கூச்சமும் இல்லாது பெருமையாக கருதுகின்றனர்.
காலப்போக்கில் பிள்ளையை பெற்று, பாலூட்டி, சோறூட்டி அன்பு, பாசம் காட்டி வளர்த்தோம் அதுக்கு இவ்வளவு தொகை என வாங்கினாலும் ஆச்சரியம் இல்லை. இறைவன் மனிதர்களுக்கு சிந்திக்கும் அறிவை கொடுத்ததே நல்லவை, கெட்டவைகளை சிந்தித்து நீதியான மனச்சாட்சியுடன் வாழத்தான்
தனக்கு வாழ்க்கைத் துணையைத் தேடுபவர், தன் குடும்பத்தை நடத்த இன்னொருவன் உழைப்பை எடுக்கிறார்கள். இது எவ்வளவு கேவலம். சுயநலமாக தப்பித்துக்கொள்ள சொல்வார்கள் நாங்கள் கேட்கவில்லை அவர்கள் தந்தார்கள் என. வேண்டாம் என சொல்லக் கூடாது என எந்த மதத்தில் சொல்லப்பட்டிருக்கு. படித்தோர், படிக்காதோர், சிந்திப்போர், சிந்தனையற்றோர் என்ற வேறுபாடே இல்லை.
காலம் மாறும் என்ற பகல் கனவுடன் முடிக்கிறேன்.
அன்புடன்.
வ.பொ.சு.–வயாவிளான் பொன்னம்பலம் சுகந்தன்