நாள் : 86
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : விருந்தோம்பல்
செய்யுள் :6
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
தன் வீட்டிலிருந்து கிளம்பிச் செல்ல உள்ள விருந்தினரையும் நன்கு கவனித்து வழியனுப்பி, அடுத்து யார் விருந்தினராய் வருவாரோ என ஆவலுடன் காத்திருப்பவன் எப்பொழுது விருந்தினனாய் வருவானோ என வானத்தவர் காத்திருப்பராம்.
பாபர் தன்னுடைய சுயசரிதையான பாபர் நாமாவில் கீழ்கண்டவாறு எழுதி இருக்கிறார்…
“ There is no beauty in its people, no graceful social intercourse, no poetic talent or
understanding, no etiquette, nobility, or manliness.”
இந்தியா அப்படி ஒன்றும் வசீகரமானதல்ல. அங்கிருக்கும் மக்களிடம் அழகில்லை. அவர்களிடம் கௌரவமாகப் பழகும் சமூக வாழ்வியல்பு கிடையாது, கவித்திறனோ கவிதைகளைப் புரிந்து கொள்ளும் அறிவோ கிடையாது, பண்பாடும் கிடையாது, ஆண்மையும் கிடையாது.
பாபருக்கு ஆயுள் ரொம்பக் கம்மி. நான்கே வருடங்களே இந்தியாவில் வாழ்ந்தார். தமிழ்நாட்டுப் பக்கம் வர வாய்ப்பில்லாமல் போனதால் அப்படியெல்லாம் எழுதி விட்டார். திருக்குறள் மட்டும் கற்றிருந்தால் கூட அவர் மனம் மாறி இருக்கலாம்.
அதே சமயம் இன்று பாபர் சொன்னது தமிழ் நாட்டில் உண்மையாகி வருகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
அதனாலேயே பழந்தமிழ் நூல்களில் தமிழன் யார், எப்படி வாழ்ந்தவம் என்ற அடையாளங்களைத் தேடி எடுத்துக் கொடுக்கும் சிலரைப் போற்றத் தோன்றுகிறது.
விருந்தினர்கள் ஒவ்வொரு நாளும் வரும் அன்றாட நிகழ்வு நல்ல இல்லறத்தான் வீட்டில் இருக்கும்.
செல்லுகின்ற விருந்தினனை எப்படி ஓம்புவது? அவனுக்கு பயண வழிக்கு பயன்படுபவனற்றை அளிப்பதால் அவனைப் பேணலாம்.
விருந்தினர் வருவர் என எப்பொழுதும் ஒரு இல்லறத்தான் தயாராக இருத்தலும் வேண்டும்.
ஒரு ஃபோன் பண்ணிட்டு வரக்கூடாதா எனக் கூடப்பிறந்தவர்களையே கேட்கும் காலம் இது. ஆனால் முகம் தெரியாத ஊர் பேர் தெரியாத விருந்தினர் வருவார்கள் என முன்னெச்சரிக்கையாய் வீட்டில் எப்பொழுதும் உணவு வைத்திருந்த காலம் அது.
ஒரு தலைமுறைக்கு முன்னால் கூட வீட்டில் எப்பொழுடும் திண்பண்டம் இருக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை, முறுக்கு, அதிரசம் என குழந்தைகளுக்கான திண்பண்டம் இருந்தே இருக்கும். அனைத்து குழந்தைகளும் ஒன்றாய் விளையாடி உண்டு களிக்கும். இன்று பெற்ற குழந்தை தவிர யாருக்கும் எதுவும் இருப்பதில்லை.
அப்படிப்பட்ட ஒரு விருந்தோம்பல் சமுதாயம் தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்னும் கூக்குரல் வரை இருந்திருக்கிறது.
செல்விருந்து(ம்) ஓம்பி அடுத்து வருவிருந்து எதிர்பார்த்திருப்பவன், தேவர்களால் ஒரு நல்ல விருந்தினனாக மதிக்கப்படுவான் என்கிறார் வள்ளுவர்.
இங்கே தேவர்களுக்கு ஒரு கொட்டும் வைக்க மறக்கவில்லை வள்ளுவர்.
தேவர்கள் விருந்தினர்களில் பாகுபாடு பார்ப்பவர்கள். இவன் நல்ல விருந்தினன். இவன் ஆகாத விருந்தினன் என பாகுபாடு காட்டுவார்கள்.
ஆனால், தமிழ் மண்ணின் இல்லற வாழ்வோன், விருந்தினரை அப்படி பாகுபடுத்தி பார்ப்பதில்லை என சொல்லாப் பொருளாய் வைத்து சொல்லியிருக்கிறார்.
அதாவது, விருந்தோம்பும் இல்லறத்தான், தேவர்களை விட மேலானவன் என்பது சொல்லாப் பொருளாம்.