நாளொரு குறள் 30

நாள் : 30
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : நீத்தார்பெருமை
செய்யுள் :10

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

அந்தணர் யார்? இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல பல விஷயங்களைச் சொல்வார்கள். வேதங்கள் கற்றவர்கள். பிரம்மத்தை அறிந்தவர்கள். ஆறு தொழில் (அதாவது கற்றல், கற்பித்தல், வேள்வி செய்தல், பிறருக்கு வேள்வி செய்வித்தல், தானம் அளித்தல், தானம் பெறுதல் ) செய்பவர்கள், (ஆறு தொழில் என்பதை வழிகாட்டுதலையே தொழிலாக செய்பவர்கள் என்றாலும் தவறில்லை) இப்படி எதையெதையோ சொல்வார்கள். ஆனால் அதெல்லாம் புறத்தோற்றங்கள்.

அந்தணர் என்பவர் யார் என்றால், தருமத்தை முழுக்க அறிந்து அவற்றைக் கடைபிடித்து வாழ்வோராவர். அவர்களின் ஒவ்வொரு செயலும் உலகின் மற்ற உயிர்களுக்கு செழுமையைத் தருவதாகவே இருக்கும் என மிக எளிய வரையறையை வைக்கிறார் வள்ளுவர்.

ஆங்கிலத்தில் “You can learn technology, but not attitude” என்பார்கள். அறிவு மட்டும் கொண்டவன் அந்தணன் ஆவதில்லை. செழுமையான குணமும் கொண்டவனாக இருக்க வேண்டும்.

உயர்ந்த குலம் எனத் தன்னைச் சொல்லிக் கொள்ளுபவனும், தாழ்ந்த குலம் எனப் பிறரைச் சொல்லுபவனும் ஒரு காலத்திலும் அந்தணன் இல்லை என்பதை வள்ளுவர் மிக சிறப்பாக நல்ல மொழியில் சொல்லி இருக்கிறார்.

பிற உயிர்களின் செழுமைக்காக பொது நல உணர்வோடு தர்ம வழியில் வாழ்பவனே சான்றோன், அந்தணன், பெரியோர் எல்லாம்.