நாளொரு குறள் – 73

உலகப் பொதுமறையின் உன்னதப் பெருமை

பால் : அறத்துப்பால்
அதிகாரம் : அன்புடைமை
செய்யுள் :4

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

அன்பினால் நாம் பெறுவது என்ன?

அன்பினால் நாம் ஆர்வத்தைப் பெறுகிறோம். ஆர்வத்தினால் என்ன கிடைக்கிறது?

நட்பு என்னும் அளவற்றச் சிறப்பு கிடைக்கும்.

தம்மீது அன்பு கொண்டவரின் மீது உண்டாகும் அளவற்ற விருப்பமே நட்பை தருகிறது என நட்பின் பிறப்பு இரகசியத்தைப் உடைக்கிறார் வள்ளுவர். ஆக நட்பு என்பது அன்பின் பேரன். மூன்றாம் தலைமுறை.

அன்பின்றி நட்பில்லை. அன்புதான் நட்பின் ஆரம்பமாய் இருக்க முடியும் என்கிறார் வள்ளுவர்.

வெறும் வாய் வார்த்தையால், புகழ் மயக்கத்தால், இலாப நோக்கத்தால் இன்னபிற வழிகளால் உண்மை நட்பு பிறக்க முடியாது என அடித்துச் சொல்கிறார் வள்ளுவர். அப்படி பிறக்கும் போலி நட்புகள் திடீரெனவோ அல்லது மெல்ல மெல்லவோ தங்கள் சுயரூபத்தைக் காட்டி விடும். அன்பினால் பிறக்கும் நட்பு மட்டுமே நட்பாகவே இருக்கும்.