இந்தியாவை ஆங்கிலேயர் வசமிருந்த போது, ஆங்கிலேய ஆட்சியர் ஒருவர் நாளும் அம்பிகையையை தரிசித்து வந்தார். அம்பிகையின் அழகையும் அருளையும் மக்கள் சொல்லக் கேட்டு, ஆவல் மிகுந்து அம்பிகை தரிசனம் கண்டவன், காலப்போக்கில் எதனாலோ ஈர்க்கப்பட்டு அம்பிகையை நாளும் தரிசித்தான்.
ஒரு நாள் அவன் தன் வீட்டில் சற்றுக் கண்ணயர்ந்த போது, அம்பிகையின் உரு ஒத்த பெண்ணொருத்தி அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடுவதாக கனவு கண்டான். சட்டென விழித்த அவன் வீட்டை விட்டு வெளியே ஓடிய சில கணத்தில் வீட்டின் கூரை இடிந்து வீழ்ந்ததாம். தான் தினமும் வணங்கிய அம்பிகையின் மகிமையே அதுவென உணர்ந்த அவன் தங்கக்கட்டில் செய்து அன்னைக்குக் காணிக்கை ஆக்கினானாம்..
அக்கட்டில் உள்ள தலம் தமிழ்நாட்டின் பவானியில் உள்ள திருநணா திருத்தலம். கவேரியும் பவானியும் கைகுலுக்கும் இடத்தில் அமைந்துள்ள இவ்வாலய அன்னையின் திருநாமம் வேதநாயகி. அப்பன் அழைக்கப்படுவது சங்கமேஸ்வரர். ஆதிகேசவப் பெருமாளுக்கும் சந்நிதி உள்ள இத்திருத்தலத்திற்கு அருகில், விசுவாமித்திரரால் காயத்ரி மந்திரம் உச்சரிக்கப்பட்டு பிரதிட்டை செய்யப்பட்ட லிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறான். திருப்புகழ் பாடப்பட்ட இத்தல முருகன் சந்நிதிக்கு அண்மையில் வரகரேஸ்வரர் சந்நிதி உண்டு. இவ்வரகரேஸ்வரர் திருச்சொருபம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகள் கொண்டுள்ளது. சம்மந்தர் இத்தலத்துக்கு வந்த பொழுது, அடியார்கள் பலர் காய்ச்சலால் அவதியுற சம்மந்தர் வரகரேஸவரருக்கு பதிகம் பாடி அவர்களைக் குணமாக்கினார். இப்பதிகங்கள் இரண்டாம் திருமுறையில் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னீ ரிலங்கையர்தங் கோமான் வலிதொலைய விரலாலூன்றி
முந்நீர்க் கடனஞ்சை யுண்டார்க் கிடம்போலு முனைசேர்சீயம்
அன்னீர் மைகுன்றி யழலால் விழிகுறைய வழியுமுன்றிற்
செந்நீர் பரப்பச் சிறந்து கரியொளிக்குந் திருநணாவே
பெருங்கடல் சூழ் இலங்கை வேந்தன் இராவணின் தலையில் விரலூன்றி அவன் வலிமை தொலைத்தவனே, நஞ்சை உண்டவனே, ஒளி குன்றிய சிங்கத்துடன் மோதி அதன் குருதித் துளிகள் முற்றமெங்கும் பரவ வெற்றிக் களிப்புடன் யானை ஓடி ஒளிக்கும் திருநணாவே..