நாளொரு குறள் பொருளுடன் – 85

பால் : அறத்துப்பால்
அதிகாரம் : விருந்தோம்பல்
செய்யுள் :5

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.

விதையிடாமல் பயிர் விளையுமா?

விளையும் என்கிறார் வள்ளுவர். ஆமாம் என்கிறது இயற்கை.

தாவரங்கள், தங்கள் இனத்தைப் பெருக்கிக் கொள்ள ஒரு பொருள் பதிந்த வழியை வைத்துள்ளான் இறைவன்.

கனிகள், தானியங்கள், தேன் என பிற உயிர்கள் உண்பதை அசைய முடியா தாவரங்கள் உருவாக்கும். தேனுன்னும் வண்டுகளால் மகரந்த சேர்க்கை நடக்கும். காய், கனிகள், தானியங்கள் உருவாகும். அதை உண்ணும் பிற உயிரினங்கள், அவற்றின் வித்தை உலகெங்கும் கொண்டு சேர்க்கும்.

பிறர் பசி தீர்ப்பதினால் அசையா தாவரங்கள் உலகெங்கும் பரவின.

பிறர் பசி தீர்ப்பவனுக்கும் அதேதான்.

அவன் கேட்கக் கூட வேண்டியதில்லை. அவனுக்கு தானே முன் வந்து கொடுப்பவர்கள் பல பேர் இருப்பார்கள்.

அவனுக்காக உழைக்கிறோம் என்பதில் பலர் பெருமை கொள்வார்கள்.

அதைத்தான் வித்திடாமலேயே விளையும் நிலம் என்கிறார் வள்ளுவர். அவன் கையால் கொடுக்கப்பட பிறர் விழைந்து கொடுப்பார்கள்.