கழுதைப் புண்ணுக்கு புழுதி மருந்து

எங்கள் மேற்கு நிலமான மன்னாருக்கு கழுதைகளை கொண்டு வந்தவர்கள் அரேபிய வியாபாரிகள் என சொல்லப்படுகின்றது.

காலகாலமாய் எங்கள் சுமைகளையும் சுமந்த கழுதைகள் தொடர்பான பல நூறு பழமொழிகளும் எம் செம்மொழியில் உண்டெனவே உண்டு.

பாமர மக்கள் தங்கள் பட்டறிவு மூலம் படைத்த அந்த பழமொழிகளை ஆராய்ந்து பார்க்கும் போது கழுதைகளுக்கும் எங்களுக்குமான “அன்புறவு” தொன்மையானதென்பதை தெட்டத் தெளிவாக நாம் புரிந்து கொள்ள முடியும்.

ஆம், அது அரேபிய வியாபாரிகளின் வருகைக்கு முந்தியது ஆகும்.

பன்னெடுங்காலமாய் எங்கள் சுமைகளை தாங்கிய கழுதைகளை நாங்கள் கொண்டாடுவதில்லையே எனும் கவலையும் எனைப் போலவே உங்களில் பலருக்கும் உண்டு.

தள்ளுவண்டிகள், சிறிய உழவு வண்டிகள்(Land Master) வந்ததன் காரணமாக எங்கள் சுமைகளை தன் முதுகில் சுமந்த நான்கு நால் நண்பர்களாகிய கழுதைகளை
நாங்கள் கைவிட்டுவிட்டோம்.

நெய்தல் நிலத்தின் உப்பு வியாபரிகளதும்
சலவைத் தொழிலாளிகளினதும் நான்கு கால் நண்பர்களாக உழைத்தவர்களாக ஒரு காலத்தில் எங்கள் கழுதைகள் விளங்கின.

மருதமடு மாதாவும் திருக்கேதீச்சரநாதனும் அருளாட்சி புரியும் அல்லது விக்ரர் எனும் பெருவீரன் அவதாரம் எடுத்த எங்கள்
மன்னார் மாவட்டத்தில் அதிக வீதி விபத்துக்களை ஏற்படுத்தும் காரணியாக ஒருகாலத்தில் கழுதைகளே இருந்தன.

கழுதைகள் உயிர்வாழ்வதற்கான
புறச்சூழல் கொண்ட இடமாக மன்னாரே உள்ளதாக அறிந்துள்ளேன்.

மாவீரன் லெப்.கேணல் சுபன் அவர்கள் மன்னார் மாவட்ட தளபதியாக கடமையாற்றிய காலகட்டத்தில் தலைவரின் உத்தரவுக்கு அமைய மணலாற்றுக்கு சில கழுதைகள் கொண்டு செல்லப்பட்டு பின்னர் அது முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனைப்பகுதியில் விடப்பட்டதாகவும், எனினும் அது சில வாரங்களில் அவை சூழல் காரணிகளுக்கு இயைபாக்கம் அடையாததால் இறந்துவிட்டதாகவும் ஒரு மூத்த போராளி மூலம் அறிந்துள்ளேன்.

தென்னை மரத்தின் குருத்துக்களை தாக்கும் ஒருவகை பெரிய வண்டுகளின் தாக்கமானது, கழுதை உள்ள இடங்களில் குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அண்மையில் அறிந்தேன்.

அந்த நாசகார வண்டுகளின் தாக்கத்தினை குறைப்பதற்காய் புத்தளம், சிலாபம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெரிய தென்னந்தோப்புகளில் மன்னார் மாவட்டத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டு கழுதைகள் வளர்க்கப்படுகின்றன.

அஃதே,

#மருத்துவ_நோக்கங்களுக்காகவும் தற்போது கழுதைகளை எங்கள் மன்னார் மாவட்டத்தில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

#Donkey_Therapy
********************
என்ற ஒருவகை சிகிச்சைமுறை மன்னார் முருங்கனில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கன்னியாஸ்திரிகளால் இயக்கப்படும் இச்சிகிச்சை முறையானது, பிறப்பில் #மூளைவளர்ச்சி_குன்றிய குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றது.

இவ் அரிய தொண்டுக்காக சப்பான் நாட்டிற்கு (Japan 🇯🇵 )சென்று பயிற்சிகள் பெற்று வந்தனர்.

அதே நேரம் சப்பான்( Japan )நாட்டிலிருந்து வந்தவர்களும் எங்கள் மண்ணின் கன்னியாஸ்திரிகளுக்கு Donkey therapy குறித்த பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.

தகவல் மூலம் : திருமிகு ம.பசீலன்!

Kirupaharan Marusaleen

நன்றி! ☀️