உதவும் கரங்களே..! உருவாக்கும் மனங்களே….!

482

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன், ஒருவர் அலைபேசியில் தொடர்பாடினார். “மாஸ்டர் நீங்கள் எனக்குப் படிக்க வேண்டும்” என்பதே தொடர்பாடலின் கரணியம். அதன் தொடர்ச்சியாக நேரில் கண்டு கதைத்தபோது என்னுள் பல்வேறு அலைகள்.

முதலாவது அவருடைய வயது.. இரண்டாவது “நான் இன்ன இடத்தைச் சேர்ந்த இன்ன சாதிக்காரன்” என்ற அவருடைய அறிமுகம். “பொறியியல் தொழில் செய்பவர் தன்னை பொறியியலாளர் என்று பெருமையாகச் சொல்லும் போது, கடற்றொழிலைப் பரம்பரைத் தொழிலாகக் கொண்ட நான், இன்ன சாதி என்று பெருமையாகச் சொல்வதில் பிழை இல்லை” என்றார். “என்னுடைய சாதியை நானே கீழாக நினைத்து சொல்ல வெட்கப்பட்டால் அடுத்தவன் எப்படி என் சாதியை மதிப்பான். சாதி பேதம் எப்படி மறையும்” என முடித்தார்.

சாதிகள் வேண்டாம் என்று சொல்வதில் கூட சாதிபேத மனப்பாங்கு கொஞ்சம் மிச்சமிருக்கும். ஆனால் இவருடைய மனதில் துளி கூட சாதிப்பேதம் இராது என்று உணர்ந்தேன். சட்டென என்மனம் அவரோடு ஒட்டிக்கொள்ள “என் ஐயா வயசுடைய இவருக்கு நான் படிப்பிப்பதா” என்ற தயக்கம் ஏற்பட்டது. முடிவில் நான் என்னிடம் இருந்த வித்தையையும், அவர் அவரிடமிருந்த கூத்துக்கலையையும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டோம். இந்தப் பரஸ்பர பரிமாற்றம்தான் உதவும் கரங்களுக்கு திருப்தி அளிக்கும். எப்படி?

எனக்கு உதவும் ஒருவருக்கு நான் பதிலுக்குக் கொடுக்க வேண்டியது என்ன? அவருடைய உதவியை சரியானபடி உபயோகிப்பது; அதன் மூலம் நான் முன்னேறுவது. இதை நான் செய்தால் மேலும் உதவ வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வரும். உதவி தேவைப்படும் ஒருவரைத் தேடி அவர் போவார். இது படிப்படியாகப் பற்றும். ஆனந்த ஜோதி எங்கும் பரவும்.

மறுதலையாக ஒருவருடைய உதவியை நான் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டால் என்ன நடக்கும்? உதவியவருக்கு சலிப்பு ஏற்படக் கூடும். அவருடைய உதவும் குணம் உறங்கக் கூடும். உதவி தேவைப்படுவோரைத் தேடும் அவருடைய பயணம் முடிவுக்கு வரும்.. இரு எவ்வளவு பாரதூரமான பாவச்செயல்.?

இச்செயலை எனதூர் மக்கள் சிலர் செய்தார்கள் என்கிறார்கள். உண்மை எனில் நாம் ஒவ்வொருவரும் வெட்கித்துப் போக வேண்டும். இப்படியானவர்கள் ஒன்றை நெஞ்சில் கொள்ள வேண்டும். நீங்கள், உங்கள் செயலால் இன்னொருவருக்குக் கிடைக்க வேண்டிய உதவியை நிறுத்துகின்றீர்கள். இதன் சம்பளம் என்ன தேரியுமா?

நீங்கள் செய்த இக்காரியத்தால், கல்விக்கு மட்டும் உதவி என்ற வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது உதவும் கரங்களின் நீட்சி. தொடர்ந்து போனால் உதவும் மனங்கள் முடங்கிப் போகலாம். அதன் பின்….??

உரையாடுவோம்..