அம்மா…
அருகில் நீ இன்று இல்லை
விளை தரும் விருட்சங்களாய்
நீ தந்துவிட்டு சென்ற
அத்தனையும் விரிந்து
நிமிர்ந்து
வானம் தொட்டுச் செல்லும்
நினைவுகளாக
இருக்கின்றது.
நிலவொளியில் நீ காட்டிய
ஒவ்வொரு நிமிடங்களும்
இன்று உன் நிலா முகத்தை
அடையாளமிட்டு காட்டுகிறது

என்ன செய்வோம்?
நீ தந்தவை அனைத்தும்
அருகில் நீ இல்லாது
நினைவாகவே இருக்கிறது.

தாய் என்ற சொல்லுக்கு
இலக்கணமாகிவிட்ட அந்த
நொடிப் பொழுதில் இருந்து
ஒட்டி வாழ்ந்த கருவறையைச்
சுவரில் நாம் வரைந்த
இருட்டு ஓவியங்களை நீ
தினம் ரசித்து மகிழ்ந்ததை
உன் குருதியோட்டத்திலே
நாம் உணர்வோம் அம்மா

ஊர் மகிழ்ந்து தேர் சுமந்த
காலம் ஒவ்வொன்றிலும்
ஒவ்வொரு நாளிகைகளாய்
எமக்கு பூவுலகின் முதல்
தொடுகையை தொடக்கி வைத்தாய்
பூரித்தாய் புன்னகைத்தாய்
பிறந்தது என் வாரிசு என்று
தினமும் அகம் மகிழ்ந்தாய்.
தொட்டுத் தொட்டு
மனம் மகிழ
அத்தனையும் தந்தே
நீ எமை வளர்த்தாய்.

வளர்ந்தோம்…
நீ காட்டிய திசையறிந்து
தளிர்கள் நாங்கள்
விருட்சமாக மாறி நின்றோம்…
எம் நிழலில் நீயாறும்
காலம் வந்த போது
எமை வெறுத்து எங்கு சென்றாய்?

அடி வயிற்றில் வேதனைத்தீ
மூண்டெழுந்து உனை அழைக்க
மார்படித்து நாம் அழுது
அம்மா என விழி கரைய
பேசாமல் மௌனித்து
நீயேனம்மா விட்டுச் சென்றாய்?

நீ கிடந்த கோலம் கண்டு
கருவேலம் முற்கள்
நெஞ்சை எல்லாம் குத்தி
கிழிக்கின்றதம்மா
பாலூட்டி ஆளாக்கி
வளர்த்த இப்பிள்ளைகளை
இறுதிப் பாலூற்ற வைத்து
நெருப்போடு ஏன் போனாயம்மா?

அம்மா அம்மா என்று நாம்
அன்றும் அழுதோமே
விம்மி விம்மி உன் உருவை
தொட்டுத் தொழுதோமே
மீண்டு நீ வா என்று
வேண்டி நெஞ்சை அழைத்தோமே
வர மாட்டாய் என்று
தெரிந்தும் உன்னை
மன்றாடி அணைத்தோமே

நீ சென்று விட்டாய் அம்மா
எம் விழிகள் நெருப்பை சுமக்க
உன் உடலை
தீ தழுவித் தின்ற அந்த
கொடுமையான நிகழ்வை
தந்து விட்டு – எம்
கோலத்தை காணாது
நீ சென்றுவிட்டாய்
நாமோ
உன் விழிகளை மட்டும் தேடிக்கொண்டு
அம்மா அம்மா என
ஓராண்டாய் அலைகிறோம்…

🙏🖌பிள்ளைகள்🖌🙏

-இ.இ.கவிமகன்