மொழிப் பயிற்சி -17:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

666

கவிக்கோ.ஞானச்செல்வன்

அமஞ்சிக்கரை என்ற ஊரைத் திருத்தமாகச் சொல்லுபவர்கள் அமைந்தகரை என்று குறிப்பார்கள். கரை என்பது ஆற்றுக்கோ, குளத்திற்கோ மக்களால் அமைக்கப்படுவது. தானாகக் கரை அமையுமா? அமைந்தகரையோ, அமைக்கப்பட்ட கரையோ எதுவும் அங்கில்லை. அமஞ்சி எனும் சொல் பழைய கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. இந்நாளில் இலவசம் என்று சொல்வதற்கு நிகரான சொல் இது. கரை என்பது சிற்றூர்ப் பகுதிகளையும் குறிப்பதுண்டு. யாரோ ஒரு வள்ளலால் பணம் பெறாமல் அமஞ்சியாகத் தரப்பட்ட இடமே இது என்று எண்ணத் தோன்றுகிறது.

ஓர், ஒரு – சிறிய விளக்கம்:-
ஆங்கிலத்தில் a, e, i, o, u என்னும் ஐந்தும் உயிரெழுத்துகள் எனக் கொண்டு,இவ்வெழுத்துகளுள் ஒன்றை முதலெழுத்தாகக் கொண்ட சொல்லின் முன் ஒன்று என்பதைக் குறிக்க ஹய் என்று எழுத வேண்டும் (an apple). a போடக்கூடாது என்ற விதி சிறுபிள்ளைகளுக்கும் தெரியும். நம் தாய்த் தமிழிலும் இப்படி ஒரு விதியிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? எத்தனை பேர் இவ்விதியைக் கடைப்பிடித்து எழுதுகிறார்கள்?

தமிழில் பன்னிரண்டு உயிரெழுத்துகள் உள்ளன. (அ முதல் ஒள முடிய). இவ்வெழுத்துகளுள் ஒன்று ஒரு சொல்லின் முதலெழுத்தாக வந்தால் அச்சொல்லின் முன் ஒன்று எனும் எண்ணிக்கையைக் குறிக்க ஓர் பயன்படுத்த வேண்டும்.
– ஓர் அணில்
– ஓர் இரவு
– ஓர் உலகம்
– ஓர் ஏடு
– ஓர் ஐயம்
என்று காண்க.

உயிரன்றிப் பிற உயிர்மெய் முதலில் வருமானால் ஒரு சேர்க்க வேண்டும்.
(எ-டு) ஒரு வீடு, ஒரு தோட்டம், ஒரு பள்ளி.

இம்முறையை மாற்றி ஓர் வீட்டில் ஒரு அம்மா இருந்தாள் என்று எழுதுவது பிழை. நூலெழுதுவோர், பத்திரிகையாளர் பலரும் இப்பிழையைப் பொருட்படுத்துவதில்லை. தம்போக்கில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஐயா மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள் போக்கை. ஈண்டு இன்னொரு குறிப்பும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அஃறிணைப் பெயர்களோடு மட்டுமே இந்த ஓர், ஒரு (மற்றும் எண்கள் எவையும்) இணைத்தல் வேண்டும். உயர் திணையில் இப்படிப் பயன்படுத்தக் கூடாது. என்ன?விளங்கவில்லையா?
ஒரு பேராசிரியர் எனல் தவறு, பேராசிரியர் ஒருவர் எனல் சரி.
மூன்று பெண்கள் எனல் தவறு. பெண்கள் மூவர் எனல் சரி.
பஞ்சபாண்டவர் என்பது வழக்கிலிருப்பினும் பாண்டவர் ஐவர் நூற்றுவர் கன்னர் (சிலம்பு) என்பதே தமிழ் மரபு.

கிருட்டிணமூர்த்தி என்றெழுதல் சரியா? இப்படி எழுதுவது பிழையாகும். கிருஷ்ணமூர்த்தி எனும் வடமொழிப் பெயரில் உள்ள “ஷ்” என்ற எழுத்தை நீக்கிவிட்டு கிருட்டிண என்று எழுதுகிறார்கள்.
கிருட்டி என்று ஒலித்த பின் அதனோடு ணகரம் இணைத்துக் கிருட்டிண என்றொலிப்பதற்குப் பெரும் முயற்சி வேண்டியுள்ளது.
கிருட்டினமூர்த்தி என்று டண்ணகரத்திற்குப் பதில் றன்னகரம் போட்டு ஒலித்துப் பாருங்கள். இயல்பாக இனிமையாகச் சொல்ல வரும்.
தமிழ்மொழி ஒலியியல் பற்றியும் அறிந்தவர்கள் இதனை நன்கறிவர். இதற்கு வலுவூட்ட வேறொரு சொல்லை நாம் பார்க்க வேண்டும்.

நாகப்பட்டினம், சென்னைப் பட்டினம். கடற்கரையில் அமைந்த நகரங்களைப் பட்டினம் எனல் வேண்டும். பட்டணம் என்று சொல்வது பிழை. பட்டணம் நகர் என்பதைக் குறிக்கும் பொதுச் சொல். மதுரை பெரிய பட்டணம் ஆகும் என்று சொல்வது பொருந்தும். இங்கு பட்டினம் என்று “டி”யுடன் “ன” சேர்வதையும் பட்டணம் என்று “ட”வுடன் சேர்வதையும் கருதுக. ஆதலின் கிருட்டினமூர்த்தி என்றெழுதுவதே சரியானது.

சரி, இப்பெயரைத் தூய தமிழில் மொழி பெயர்த்தால் என்னவாம்?
கறுப்புக் கடவுள் என்பதாம். கிருஷ்ணம் என்றால் கறுப்பு. மூர்த்தி – கடவுள். தேய்பிறைக் காலத்தை கிருஷ்ணபட்சம் என்பதன் பொருள் புரிகிறதா?

இன்னும் மனம் இசைவு பெறவில்லையா?
கிருஷ்ணவேணி என்பதன் தமிழ்ப் பெயர் தெரியுமா? கருஞ்சடை (கிருஷ்ண – கருமை; வேணி- சடை) மீண்டும் நினைவில் கொள்ளுங்கள்.

கரியநிறம், கருமை நிறம் என்றெல்லாம் இடையினம் வரினும் கறுப்பு எனும்போது வல்லினமே இட வேண்டும். யாழ்ப்பாணம் பெரும்புலவர் நா.கதிரைவேல் பிள்ளை பேரகராதியிலிருந்து, கழகத் தமிழ்க் கையகராதி வரை எதில் வேண்டுமாயினும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

“கறுப்பும், சிவப்பும் வெகுளிப் பொருள”எனும் தொல்காப்பியச் சூத்திரம் நாமும் அறிவோம்.
ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருப்பது இயல்பே.
கறுப்பு – கரிய நிறம், சினம், வஞ்சனை என்று அகர முதலிகளில் காண்க.

தமிழ் வளரும் ……