போதும் என்று மனசு சொல்லும் வரை உண்பதை விட இன்னும் கொஞ்சம் வேண்டும் என மனசு சொல்லும் போது, உண்டது போதும் என எழுந்தால் நாம் சொல்வதை உடம்பு கேட்கும். இல்லையேல் உடல் சொல்வதை நாங்கள் கேட்கும் ஆரோக்கியமற்ற நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.
வாய்க்கு ருசியாக உணவிருக்க, இன்னும் வேண்டும் கொண்டா என்று உள்ளம் கேட்க, வயிற்றிலும் இடமிருக்க, உண்ணாமல் எழுந்து போக நானென்ன முட்டாளா என தோன்றும். அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், மீதிக் கால் வயிறு இடைவெளியே மிகச் சிறந்த உணவு முறை என வல்லுனர்கள் கூறுவதை நாம் செவிமடுத்தால், வண்டி நிரம்பும் வரை உண்ணுவது தப்பென நாம் உணர்வோம்.
இவ்வாறு உண்டு விட்டால் மட்டும் ஆரோக்கியம் கிட்டி விடுமா? இல்லை.. ஆரோக்கிய உணவு முறையைப் போல் ஆரோக்கிய உணவுகளும் ஆரோக்கிய சமையல் முறைகளும் உண்டு. அவற்றையும் பின்பற்றினாலே ஆரோக்கியம் எங்களை வந்தடையும்.
ஆரோக்கியம் இருக்கும் உணவில் சுவை இராதெனும் கருத்தும் எம்மிடையே உண்டு. இந்த மாயக் கருத்தில் நாம் சிக்கிடக் கூடாது. இதை நன்குணர்ந்த பிரெஞ்சு தேசம், மூன்று வயது வரை குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கும் உணவு முறை அக்குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைக் கூட்டுவதுடன் கட்டுப்பாடான உணவு முறைக்கு குழந்தைகளைப் பழக்கப்படுத்தியும் விடுகின்றது.
தொடக்கத்தில் உப்பு, இனிப்பு இல்லாமலும் பின்னர் அளவான உப்பு, இனிப்புடனும் இருக்கும் அவ்வுணவு முறையில், எக்காலத்திலும் தாவர எண்ணெயையைத் தவிர வேறெந்தக் எண்ணெயையும் பயன்படுத்தப்படுவதில்லை.
காலை, மதியம், பின்னேரம், இரவு என நாவேளை உணவு முறையான இதில் இந்நான்கு வேளையும் பாற்பொருளும் பழமும் உண்ண வேண்டும் என்கிறார்கள். ஆரம்பத்தில் யோக்கட்டும் பின் சீஸ்கட்டியும் கொடுக்கச் சொல்கிறது. அதே போல் தொடக்கத்தில் அவித்து அரைத்த பழமும் பின்னர் பழத்தைக் கடித்துத் தின்னவும் சொல்கிறது.
இந்த முறைக்கு பழக்கப்பட்ட குழந்தைகள் வளர்ந்ததும் தங்கள் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவை தாங்களே அறிந்து உட்கொள்ளத் தொடங்கி விடுகின்றனர்.
ஆனால் எங்களுக்குத்தான் கஷ்ட நிலை. எங்களுக்குப் பழக்கப்படுத்தப்பட்ட உணவுப் பழக்கம் வேறு மாதிரியானது. அதிலிருந்து விடுபட இயலாதாயினும், முடிந்த வரை ஆரோக்கியமான முறையில் சமைத்து உண்டு ஆரோக்கியம் பேணலாம்.