சட்டி நிறைய எண்ணெயை ஊற்றிச் சூடாக்கி, நீள் துண்டுகளாக வெட்டிய கத்தரிக்காயை அதில் போட்டு, கத்தரிக்காயிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை பொரித்தெடுத்து மண மணக்கும் குழம்பு வைத்து, வெள்ளமாப் புட்டோடு சாப்பிட்டால் சொர்க்கத்துக்கு போகிறோமோ இல்லையோ கழிவறைக்குப் பலமுறை போய் வருவோம்.
இப்படிச் சமையல் செய்யும் போது சத்தெல்லாம் இழந்து செத்த கத்தரிக்காயைத்தான் உண்போம். கூடவே ஆரோக்கியம் கெட்டு அல்லலுறுவோம். இப்படி இல்லாமல் ஆரோக்கியமான முறையில் கத்தரிக்காய்க் குழம்பு வைப்பது எப்படி..
உபயம் – தாமரைச்செல்வன்
கத்தரிக்காய் – கைப்பு
புளி – புளிப்பு
தூள் – உறைப்பு
சீனி – இனிப்பு
உப்பு – உவர்ப்பு
மஞ்சல் தூள் – துவர்ப்பு
என அறு சுவையையும் கொண்ட கத்தரிக்காய்க் குழம்பு செய்யும் முறை.
தேவையானளவு புளியைக் கரைத்து வைக்கவும்.
சிறிதளவு மரக்கறி எண்ணெயை சூடாக்கி கடுகு போடவும்.
கடுகு வெடித்ததும் சீரகம் சேர்க்கவும். கூடவே விரும்பினால் வெந்தயம் சேர்க்கவும்.
சீரகம் பொன்னிறமாகி வாசனை வெளிவரத் தொடங்கியதும் நறுக்கி வைத்த வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நசுக்கிய உள்ளி சேர்த்துப் பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
தக்காளி மசியத் துவங்கியதும் மஞ்சள் சேர்க்கவும், ஏற்கனவே இருந்த கலவையுடன் மஞ்சளும் கலந்து எண்ணெய் பிரியும் பதம் வந்ததும் புளித்தண்ணியை ஊற்றவும்.
புளித்தண்ணி கொதிக்கத் தொடங்கியதும் நீளவாக்கில் வெட்டிய கத்தரிக்காயை சேர்க்கவும். கூடவே தேவையானளவு உப்பு மிளகாய்த் தூள் சேர்க்கவும்.
புளித்தண்ணியில் கத்தரிக்காய் அவிந்து கமகமக்கத் தொடங்கியதும் அடுப்பைக் குறைத்து குழம்பைத் தடிக்க விடவும். தடித்ததும் அடுப்பை அணைக்கவும். பிறகென்ன.. உண்ணவும்