இதை எழுதியவர் சமிபாட்டுத் தொகுதி மருத்துவ நிபுணர். நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். எந்த நீளமான படைப்பானாலும் நிமிடத்தில் உள்வாங்கி உண்ட சுவையை நான்கே நான்கு அடிகளில் நயம்பட நவிலும் நவீன நாலடியார். பிடித்ததால் பதிகிறேன்.
1993
ஆர்வம் தெறிக்கும் கண்கள்
அவசரம், கற்க ஆத்திரம்
என்னையே பார்த்தேன் உன்னிடம்
என் நிறம் கறுப்பு, உதிரமோ ஒரே நிறம்
வேற்றுமை இல்லை நம்மிடம்
நான் கற்பிப்பவன் -தான்
உன்னிடமும் கற்றுக்கொண்டேன்
என்னிடம் நீ அறிவியலை
உன்னிடம் நான் இந்நாட்டு வாழ்வியலை
கையால் சோறுண்ண நீ தடுமாற- முள்
கரண்டியோடு நான் சடுகுடு ஆட
இளையராஜாவை நான் தர
எல்விஸ் பிரஸ்லி நீ தர
பண்டம் மட்டும் அல்ல
பண்பாடும் கைமாறியது
காலவெள்ளத்தில் வாழ்க்கை
திசைமாறியது
ஒரு U திருப்பம் வந்து உன் தேசத்துக்கே
மீண்டும் என் வழி மாறியது
2003
வந்த சேதி கேட்டு ஓடி வந்தாய்
இல்லை இல்லை சக்கர வண்டியில் வந்தாய்
“என்னாச்சு டெர்மாட்?”
கண்கள் ஊற்றெடுக்கக் கேட்டேன்
புன்னகை பூத்தபடி உன் வெள்ளை முகம்
கண்ணீர் உன் ஊரில் தட்டுப்பாடு
தண்ணீருக்கு மட்டுமே என்னூரில் கட்டுப்பாடு
சொன்னாய், கோரக்கதை சொன்னாய்
சைப்ரஸ் பயணம் சைத்தானாய் அமைந்த கதை
கார் கவிழ்ந்து கழுத்தெலும்பு முறிந்த நிலை
இடைவிடா பயிற்சி இரு வருடம்
எத்தனை எத்தனை தடைக்கற்கள்
எப்படி தாண்டினாய் இளைஞனே
சக்கர நாற்காலிதான் இனி கால்கள்
மாற்றி அமைத்த கார்தான் உன் சிறகுகள்
புரிந்தும் சேர்ந்த தோழி உன் மன மருந்து
புதிதாய் கற்ற கணினிதான் பொழுதுபோக்கு
புன்னகை பூத்தபடி உன் வெள்ளை முகம்
“எப்படி சாதித்தாய் டெர்மாட்?”
” உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.
காலையில் கண்ணாடிக்கு சொல்வேன்:
Think What You Can Do-
Not What You Can’t Do ”
முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை