வயாவிளான் ஞான வைரவர் ஆலய பாலஸ்தாபனம்.

456

வயவையூரின் தென்பகுதியில் குடிகொண்ட வைரவப்பெருமான் ஆலயத்தின் பாலஸ்தாபனம் 27/08/2018 அன்று நடைபெற உள்ளது. 

புனருத்தானத் திருப்பணிகள் ஆலயத்தினுள் தொடங்க முன்னர் மூலவ, உற்சவ மூர்த்திகளைத் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஓரிடத்தில் (பாலாலயத்தில்) வைக்கப்படுவதே பாலஸ்தாபனம் எனப்படுகிறது.

ஞானவைரவர் ஆலயப் பாலாகய அமைப்புப் பணிகள்.

மூலவர் உள்ளபோது மூலஸ்தானத்துக்குள் நுழைந்து புனருத்தானத் திருப்பணிகள் செய்ய இயலாது என்பதாலும், மூர்த்திகள் உள்ள போது ஸ்தூபி முதலிட்டவற்றுள் ஏறி புனருத்தானத் திருப்பணிகள் செய்ய இயலாது என்பதாலும் மூர்த்திகளைத் தற்காலிக இடத்தில் பிரதிட்டை செய்யப்படுவது ஆகம மரபு.

புனருத்தானத் திருப்பணிகள் நிறைவுற்ற பின்னர் மூர்த்திகளை அவர்கள் இடத்திலேயே பிரதிட்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தப்படும். அதன் பின் நாளாந்த பூசை புனஸ்காரங்கள் நடக்கும்.

எங்கள் வைரவப் பெருமான் ஆலயம் பல்லாண்டுகளின் பின் எங்களிடம் கிடைத்துள்ளது. வெளி வளாக திருத்தத் திருப்பணிகள் பெருமளவு முடிந்த பின்னர், ஆலய புனருத்தானத் திருப்பணிகள் ஆரம்பமாக உள்ளன. 

ஆகம மரபுப்படி பாலஸ்தாபனம் நடைபெற உள்ளது. புனருத்தானத் திருப்பணிகள் நிறைவுற்ற பின் கும்பாபிஷேகம் நடைபெறும். அதன் பின் வைரவாலய மணியோசை காதில் கேட்கும். இனிய தருணம் வயவையூரில் பூக்கும். 

எனவே பாலஸ்தாபனத்தில் கலந்துகொள்ள வசதிப்படும் அடியார்கள் அனைவரும் தவறாது பாலஸ்தாபனம் கண்டு, அன்னதானம் உண்டு மகிழ்ந்து வயவை மண்ணில் மகிழ்வு முகிழவைக்க வேண்டிய பொறுப்பை அனைவருக்கும் நினைவூட்டுகிறது வயவன் இணையம்.