மருத்துவ நிர்வாகப் பொறுப்பாளர் மித்திரனுக்கு வீரவணக்கம்.

இம் மாநிலத்தில் - எம் இனத்தின் இருப்பினை உறுதிப்படுத்தப் புறப்பட்ட இன்னுமோர் இணையில்லா மானமாவீரனின் பெருங்காதைகளில் சிறு துளி இதுவாகும்!

புத்தாயிரம் ஆண்டு (2000) ஆண்டு உதயமாகிய போது அவசரமான இந்த உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நாங்களும் புத்துயிர் பெற்றே எழுந்தோம்.

ஓயாத அலைகள் மூன்று (03) நடவடிக்கையின் மூலம் ஆனையிறவுத் தளம் முழுமையாக கைப்பற்றப்பட்டது.

அந்த வெற்றிகரமான நடவடிக்கையின் மூலம் யாழ் தென்மராட்சியின் ஒரு பகுதியும் வடமராட்சி கிழக்கும் என “வடபோர்முனை”விரிவடைந்தது.

விரிந்து பரந்து கேந்திர முக்கியத்துவம் பெற்ற வடபோர்முனையினில் ஆயிரம் ஆயிரம் வேங்கைகள் வீரமுடன் களப்பணி ஆற்றிட ஆரம்பித்திருந்தனர்.

தமிழர்தம் சிறப்புப் படையணிகளுடன் காவல்துறைப் படையணியாய், சிறப்பு எல்லைப்படையணியாய் மக்களும் எல்லைகளில் எழுச்சி பெற்று நின்றனர்.

ஆனையிறவுத் தளத்தினை இழந்த பின்னர் சீற்றம் கொண்ட ஶ்ரீலங்காப் படையினர் அன்றாடம் எம்மீது தொல்லைப்படுத்தல் தாக்குதலை தொடுத்து வண்ணமே இருந்தனர்.

அந்த தாக்குதலில் விழுப்புண் அடையும் வீரர்களுக்கு உடனடிச் சிகிச்சைகளை வழங்குவதற்காய் பளைப்பகுதியில் ஒரு களமுனை வைத்தியசாலை அமைக்கப்பட்டது.

அக்காலகட்டத்தில் எங்கள் களமுனை வைத்தியசாலை மீது எதிரி குறி வைத்து நடாத்திய எறிகணைத் தாக்குதலில் நிர்வாகப் பொறுப்பாளர் மேஜர் மித்திரன், நாகர்கோவில் களமுனை நிர்வாகப் பொறுப்பாளர் கப்டன் சுடர்மதி ஆகிய இருவரும் வீரச்சாவு அடைந்தனர்.

களமுனை வைத்தியர் அருள்/ரொசான் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.

மேஜர் மித்திரன்,கப்டன் சுடர்மதி ஆகிய இந்த இரு வேங்கைகளுடன் தாயகக்கனவுடன் வீரச்சாவினைத் தழுவிய அனைத்து வேங்கைகளுக்கும் “கரம் கூப்பி” “சிரம் தாழ்த்தி” வீரவணக்கம் செலுத்தியே நிமிர்கின்றோம். ☀️