லெப்டினன்ட் கேணல் வேணு

280

லெப்டினன்ட் கேணல் வேணு

-ம.சீலன்

விடுதலைப்போராட்டத்தோடு
மிக நெருக்கமாக ஒன்றித்திருந்த அடம்பன் அருகே உள்ளது தான் ஆண்டான்குளம் கிராமம். இயற்கையோடு இணைந்த பசுமையான இந்த மண் தான் ஆற்றலுள்ள போராளியான வேணு அண்ணனை விடுதலைக்கு தந்தது.

சிங்கள இராணுவ அடக்கு முறைக்கெதிராக போராட விரும்பிய இளைஞனான
பிரான்சிஸ் ரொபேட் சேவியர் என்ற வேணு அண்ணன் அவர்கள் 1984ல் தன்னை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்.
தமிழகத்தில் நடைபெற்ற 4வது பயிற்சிப்பாசறையில் இராணுவப் பயிற்சியை திறம்பட முடித்து ஒரு முழுமையான போராளியானார்.

இராணுவப்பயிற்சியை நிறைவு செய்த பின்னர்,
மருத்துவக்கற்கையையும் பூர்த்தி செய்து, பயிற்சி முகாமில் இருந்து வெளிவரும் போது இவர் ஒரு வைத்தியனாகவே வெளி வந்தார்.

உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்ற இவர் இராணுவப் பயிற்சிகளைப் போலவே
மருத்துவ கற்கை நெறியையும் சிறப்பாக கற்றுத்தேறி சிறந்த மருத்துவப் போராளியானார்.

மருத்துவப் போராளிகளையும், போராட்டத்துக்காக உருவாக்கவேண்டு மென்ற சிந்தனையில்,
ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் முதன் முதலில் வழங்கப்பட்ட மருத்துவ பயிற்சி நெறி இதுவாகவே இருக்க வேண்டும்.
எனவே மருத்துவப்போராளிகளுக்கான முதலாவது பயிற்சி நெறியில் பயின்று மன்னாருக்கு திரும்பிய வேணு அண்ணன் அவர்கள், மன்னார் மாவட்டத்தின் முதலாவது மருத்துவப்போராளியாக கடமையேற்றார்.

இவர் பங்குகொண்ட முதற் தாக்குதல் இவருக்கு மட்டுமல்ல, மன்னார் மாவட்டப் போராளிகள் அனைவருக்குமே மிக முக்கியமானதாகியது.
பின் வந்த நாட்களில் அந்த மாவட்டத்தின் விடுதலை வரலாறு வீரம் செறிந்ததாக எழுதப்பட்டுச் சென்றதில் இந்ந தாக்குதலும் முதன்மையானதாக, வழிகாட்டியாக இருந்தது.

போராட்டத்தின் ஆரம்ப கட்ட தாக்குதல்கள் சிங்கள காவல்துறையை தமிழர் பகுதியில் செயலிழக்கப்பண்ணுவதாகவே இருந்தது. அவ்வகையில் மன்னார்த் தீவினுள் அமைந்திருந்த இந்த மாவட்டத்தின் பிரதான பொலிஸ் நிலையத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலும் பிரசித்தமானது.

கடல்வழியாக சாதாரண படகுகளில் தீவினுள் நுழைந்து, தளபதி விக்டர் தலைமையில் அந்த தாக்குதல் நடந்தது. மூத்த உறுப்பினர்களான ராதா அண்ணை,
குமரப்பா அண்ணை போன்றோர் அணிகளை வழிநடத்த,
தளபதி விக்டரின் வியூகத்தில் முற்றாக வீழ்ந்தது, மன்னார் மாவட்டத்தின் தலைமை பொலிஸ் நிலையம். 1985 முற்பகுதியில் நடந்த இத்தாக்குதலில் ஒரே ஒரு போராளி விதையாக, தாக்குதல் வெற்றியோடு நிறைவுக்கு வந்தது.

இத்தாக்குதலின் போது காயமடைந்த போராளிகளுக்கு வைத்தியனாக வேணு அண்ணனே இருந்தார். அன்றிலிருந்து மன்னார் மாவட்டப் போராளிகளைப் பொறுத்தவரை இவரே வைத்தியர். ஆனாலும் இடையிடையே கிடைக்கும் போர்க்களங்களிலும் பங்கு கொண்டு தனது முத்திரையைப் பதித்து,
தன் போரிடும் ஆற்றலை வெளிப்படுத்த இவர் தவறவில்லை.

17-01-1986 அன்று நாயாற்று வெளியில் அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதியான லெப். கேணல் விக்டரைக் குறிவைத்து சிங்களப்படை பதுங்கி இருந்து மேற்கொண்ட தாக்குதலின் போது, தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினரை, கண்டல் சந்தியில் வழிமறித்துத் தாக்கிய குழுவில் இவரும் ஒருவராக இருந்தார். முற்றிலும் தனக்கு சாதகமான நிலையில் எதிரி இருந்த போதிலும்,
தளபதி விக்டர் அண்ணனின் வழிநடத்தலும், போராளிகளின் வீரம்செறிந்த தாக்குதலும்,
” பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்று எதிரியை தப்பி ஓடவைத்தது.
பின்வாங்கி ஓடிய இராணுவம், நீண்ட காலத்திற்கு அந்தப் பக்கத்தையே நினைக்காமலிருந்தது.
இத்தாக்குதலில் வீரவேங்கை
ரோஸ்மன் விதையாகிப்போக
வெற்றியோடு புலிகள் மீண்டனர்.
இதில் வேணு அண்ணனின் பங்கும் நிறைந்தே இருந்தது.

பரப்புக் கடந்தான், வட்டக்கண்டல் போன்ற மிகப் பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலத்த போக்குவரத்துச் சிரமங்களின் மத்தியிலேயே தமது சிகிச்சைக்காக மன்னார், அடம்பன் போன்ற வைத்தியசாலைகளுக்குச் செல்ல வேண்டும். இவரோ அந்த நிலையை மாற்றி மக்களைத் தேடி மருத்துவம் செய்யும் மருத்து வனானார். ஆட்காட்டிவெளியில் வைத்திய நிலையம் ஒன்றினை நிறுவி அப்பகுதி மக்களின் அன்புக்கு பாத்திரமானார். இரவு பகல் எந்த நேரமானாலும் பொதுமக்களுக்கோ, போராளிகளுக்கோ வேணு அண்ணைதான் வைத்தியர்.

இக்காலத்தில் அப்பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானார் வேணு அண்ணன். அவர்களோடு அவர் பழகிய விதம் மக்களை அரவணைத்துச் செல்லும் பாங்கு என்பவைதான் அதற்கான காரணங்கள். குடும்பத்தவர் எவருமே இந்த மண்ணில் இல்லாத நிலையில் அவர் மறைந்த போது, சொந்தங்கள் நிறைய உண்டு என்பதை அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களின் எண்ணிக்கை உணர்த்தியது. பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி,
வரண்ட பூமியாம் மன்னாரைத் தம் கண்ணீரால் ஈரமாக்கினர் அப்பகுதி மக்கள்.

அன்றைய மன்னார் மாவட்ட தளபதி பாணு தலைமையில் புலிகள் முள்ளிக்குளம் புளட் முகாமை வெற்றிகொண்ட பின்னர், புலிகளின் அணிகளில் ஒன்றை அப்பகுதியில் தொடர்ந்து நிறுத்தி வைக்க முடிவு செய்தார்.
மிகுந்த நெருக்கடிககள், வழங்கல்களுக்கு சிரமம்,
பின்தள உதவிகளற்ற நிலையில்,
அங்கு நிலைகொண்ட அணிகளை
வேணு அண்ணன் பொறுப்பெடுத்து வழிநடாத்தினார்.

புளட் அமைப்பின் பலம்மிக்க கோட்டையாக இருந்த அப்பகுதியை புலிகளின் நிர்வாக பகுதியாக ஆளுகை செய்ததிலும்,
அப்பகுதியில் புளட் அமைப்பினர் மீள ஒருங்கிணைவதை தடுத்து அப்பிரதேசத்தைப் பாதுகாப்பதிலும் இவர் காண்பித்த ஆளுமை அளப்பரியவை.
மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த அப்பகுதியில் மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றங்களுக்கான முயற்சிகளில் இவர் காட்டிய ஆர்வம் அக்கிராம மக்களை போராட்டத்துடன் ஆழமாக ஒன்றிணைத்தது.
அப்பகுதியில் இருந்த இஸ்லாமிய மக்களோடும் நெருக்கமான உறவைப்பேணி, போராட்டத்தின்
நியாயப்பாடுகளை அவர்களிடம் தெளிவுபடுத்தி, அந்த மக்களையும்
அரவணைத்துச் சென்றார்.

இவ்க்விதமாக, தமிழ்மக்களின் பழம் பெரும் கிராமங்களில் ஒன்றான முள்ளிக்குளத்தையும் அதனோடிணைந்த வேறுபல கிராமங்களையும், வில்பத்து காட்டின் ஒருபகுதி எல்லையையும் தனது சிறிய அணியை கொண்டு பாதுகாத்து நின்ற வேணு அண்ணன் தலைமையிலான அந்த அணியின் நடமாட்டங்களை அவதானித்த சிங்களப்படைகள், அந்த அணிமீது திட்டமிட்ட, வலிந்த பதுங்கித்தாக்குதல் ஒன்றை திட்டமிட்டு மேற்கொண்டனர்.

பிறேமதாச அரசுடன் சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த அந்த நாட்களிலேயே, ஶ்ரீலங்கா அரச சட்டத்துக்கு புறம்பானதும்
பிறேமதாசவின் பிரத்தியேக கொலைகார படையணியுமான “பச்சைப்புலிகள்” (கொள கொட்டியா) என்ற இராணுவ அணியே இத்தாக்குதலை மேற்கொண்டது. JVP அமைப்புக்கு எதிராக காத்திரமான தாக்குதல்களை செய்த இராணுவத்தின் இந்த அணி,
JVP அமைப்பைபோன்று புலிகளின் உறுதியையும் எடைபோட்டு தனது தாக்குதல் உத்தியை வகுத்திருக்க கூடும்?

07-11-1989 அன்று வில்பத்துக் காட்டில் “பச்சைப் புலிகள்” எனப்படும் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட இத்தாக்குதலை இவர் முறியடித்த விதம், அன்று சாதனைக்குரியதாக பதியப்பட்டது.
பெட்டியுடன் இணைக்கப்பட்ட உழவு இயந்திரத்தில்,
தனது 14 தோழர்களுடன் வில்பத்து காடுகளின் ஊடாக இவர் பயணமாகிக் கொண்டிருந்தார் . பல, கால்பந்தாட்ட மைதானத்தின் அளவை ஒத்த, ஒரு பெரும் வெட்டையான (வில் என்ற குறியீட்டுப்பெயரில் இது அழைக்கப்படுகிறது.
இவ்வெட்டையின் நடுப்பகுதி நீர்நிறைந்த பகுதியாக காணப்படும். வில்பத்தின் காட்டுவிலங்குகள் நீர் அருந்தும் பிரதான பகுதி மேற்குறித்த வெட்டைகளே) பிரதேசத்தினுள் உழவு இயந்திரம் நுழைந்த போது
காட்டின் ஓரமாக நிலையெடுத்து மறைந்திருந்த சிறீலங்காப் படையினர் இவர்கள் மேல் தாக்குதல் தொடுத்தனர்.

மிகவும் பாதுகாப்பான நிலைகளில் இராணுவத்தினர்.
பாதகமான நிலைகளில் போராளிகள்.
ஆனாலும் இவர் தன் அணியை ஒருங்கிணைத்து,
தான் பயணித்த உழவு இயந்திரத்தையே காப்பாக்கி நிலையெடுத்து, தம்மை தாக்கும் படையினர் மீது எதிர்த்தாக்குதல் தொடுத்தார்.

இவரது நா அந்த இக்கட்டான திடீர் அபாய சூழ்நிலையிலும் எந்த பதட்டமுமின்றி உத்தரவுகளை பிறப்பித்தது.
வெட்டவெளிக்குள் இருந்த தம் போராளிகளின் உள உரணை சிதறவிடாமல் உரமேற்றி, முற்றிலும் பாதுகாப்பான நிலைகளில் இருந்த எதிரிமீது பலமான எதிர்த்தாக்குதலை மேற்கொண்டார்.
இதுபோன்ற பாதகமான சூழ்நிலையில் இழப்புக்களை குறைப்பதற்காக,
அடையாள தாக்குதலை செய்தவாறு பின்வாங்கி செல்வதே எந்தவொரு இராணுவ அமைப்பும் பின்பற்றக்கூடிய இராணுவ உத்தி.
ஆனால் இவரோ,
தப்பியோடும், அல்லது பின்வாங்கிச்செல்லும் உத்தியை தவிர்த்து,
எதிரியை எதிர்கொள்ளும் துணிச்சலான உத்தியை கையாண்டு
சண்டையை எமக்குச் சாதகமாக மாற்றினார்.

கட்டளைகள் மட்டுமன்றி
இவர் கையிலிருந்த M16 வகை துப்பாக்கியும் எதிரியை நிலைகுலையப்பண்ணின.
அதனால் உயிரிழந்த தமது சகாவையும் விட்டு விட்டு சிறீலங்காப் படையின் அந்த “கொளகொட்டியா” சிறப்பு அணி ஓடித்தப்பியது. கப்டன் சத்தியராஜ் மற்றும் வீரவேங்கை ஆழ்வாரை நாம் இழந்த போதிலும்,
உயிரிழந்த இராணுவத்தினது உடலுடன் AK LMG உட்பட ஒரு சில ஆயுதங்களையும் கைப்பற்றி சண்டையை இவர் வென்று தந்தார்.

இதுபோன்ற திடீர் தாக்குதலை பதட்டமின்றி எதிர்கொள்ளும் அனுபவத்தை இவருக்கு வழங்கியதில் இந்தியப்படையினருடனான ஒரு முற்றுகை முன்னுதாரணமாக இருந்திருக்ககூடும்.
அது 1988. 10.10 ல் நடைபெற்ற துயரமான ஒரு நிகழ்வு.

புலிகளின் ஒரு அணிமீது
இந்தியப்படைகள் மேற்கொண்ட ஒரு பதுங்கித்தாக்குதல் அது.
இத்தாக்குதலின்போது தேசவிரோத அமைப்பொன்றும் இந்தியப்படைகளோடு இணைந்து கொண்டது.
ஆண்டியா புளியங்குளத்துக்கு அண்மையில் இந்தியப்படைகளினதும்,
தேசவிரோத அமைப்பொன்றினதும் முற்றுகைக்குள் சிக்குண்ட புலிகளின் அணியில்,
முற்றுகையை உடைத்து வெளியேறி, உயிர்தப்பிய ஓரிருவரில் வேணு அண்ணனும் கப்டன் பாஸ்கரனும் இருந்தார்கள்.
(கப்டன் பாஸ்கரன் 22.03.1991இல் சிலாவத்துறை முகாம் தாக்குதலில் விதையானார்)
மேஜர் தாடிபாலா, கப்டன் சைமன் என வரிசையாக 12 போராளிகளை இத்தாக்குதலில் இழந்தமை இவரது உள்ளத்தில் ஆழமான காயங்களை ஏற்படுத்தின.
இந்த அனுபவமே,
“பச்சைப்புலிகள்” என்ற பிறேமதாசவின் சிறப்பு இராணுவ அணியின் பலமான முற்றுகை தாக்குதலை துணிவோடு எதிர்கொண்டு வெற்றி பெறவைத்திருக்ககூடும்.

தளபதி விக்டர் அண்ணனின் காலத்திலிருந்தே களமாடி வந்த மன்னாரின் மூத்த போராளிகளுள் ஒருவரான வேணு அண்ணன்
இந்தியப்படைகளுக்கு எதிரான யுத்தத்திலும் மன்னாரில் பெரும் பங்கு வகித்தார்.
இந்திய இராணுவத்துடனான போர் நிகழ்ந்த காலப்பகுதிதான் இவரை மன்னார் மாவட்டத்தின் எதிர்காலத் தளபதியாக இனங்காட்டியது.

இயக்கத்தின் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் வல்லவனாக / முனைப்பானவராக இவர் இருந்தார். அன்றைய மன்னார் மாவட்ட தளபதி பாணு அண்ணையோடு இணைந்து மன்னார் மண்ணை விடுதலைப்பாதையில் இவர் வழிநடத்திச்சென்றார்.

1989. 05.20 அன்று தளபதி பாணு அண்ணன் தலைமையில் முள்ளிக்குளம் புளட் முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட பெரும்தாக்குதலில் தளபதி பாணு அண்ணன் அவர்கள் கழுத்தில் கடுமையான காயத்துக்கு உள்ளானதால், சிகிச்சைக்காக தமிழகம் செல்லவேண்டி ஏற்பட்டது.
அதனால்,
அதுவரை தேசியத்தலைவரோடு நின்று மணலாறு களமுனையில் இந்தியப்படைகளுக்கு எதிராக தீரமுடன் போரிட்டுக்கொண்டிருந்த சுபன் அண்ணன் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டார்.
புதிய தளபதியான சுபன் அண்ணையோடு இணைந்து
விடுதலைப்பாதையில் மன்னார் மண்ணையும் போராளிகளையும் சிறப்பாக வழிநடத்திக்கொண்டிருந்த போதே,
1990 ம் ஆண்டு முற்பகுதியில் மன்னார் மாவட்ட துணை தளபதியாக வேணு அண்ணன் தேசியத்தலைவரினால் நியமிக்கப்பட்டார்.

இக்காலப்பகுதியில் இந்தியப்படைகள் யாழ் மாவட்டத்தை விட்டு முற்றாகவெளியேறிய பின்னர் தேசியத்தலைவரின் அறிவுறுத்தலின்பேரில் மன்னார் மாவட்ட அணியொன்றை தலைமையேற்று யாழ் சென்ற இவருக்கு, கல்லுண்டாய் தொடக்கம் காரை நகர் கடற்படை முகாம் வரையான பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

அது பிறேமதாசா அரசுடனான சமாதான காலப்பகுதி என்ற போதிலும்,
இந்தியப்படைகள் ஈழத்தை விட்டு முற்றாக வெளியேறி முடிந்த பின்னர் பிறேமதாச அரசு புலிகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிராகவும் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதை முன்கூட்டியே கணித்த இயக்கம் யாழ் மாவட்டத்தை முற்றுகையிடும் எதிரியின் நோக்கத்தை எதிர்கொள்ள தமது அணிகளையும் தயார்நிலையிலேயே வைத்திருந்தது. யாழ் மாவட்டத்தில்
தனது அணிக்கு வழங்கப்பட்ட
பணியை மிக நேர்த்தியாக வேணு அண்ணன் செய்துவந்தார்.
அப்போது யாழ் மாவட்ட தளபதியாக பாணு அண்ணன் அவர்கள் இருந்தார்.

பாணு அண்ணன் ஏற்கனவே மன்னார் மாவட்டத்தளபதியாக இருந்தபோது வேணு அண்ணனுடன் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றியவர்.
எனவே
இப்போது மீண்டும் இருவரும் இணைந்து பணியாற்றும் சந்தர்ப்பம் இருவருக்குமே ஆழமான புரிந்துணர்வு மிக்கதாக அமைந்தது.

எனினும் யூன் 10 1990 ல் பிறேமதாச அரசு தமிழ் மமக்கள் மீது யுத்தத்தை திணித்தபோது, யுத்தம்
மன்னாரையும் ஆழமாக நெருக்கியதால், தன் அணியோடு மன்னார் சென்ற வேணு அண்ணன், தளபதி சுபன் அண்ணனோடு இணைந்து இராணுவத்தினருக்கு எதிராக காத்திரமான பல தாக்குதல்களை ஒருங்கிணைத்தார்.

மேஜர் வசந்த் அண்ணனை விதையாக்கி,
முதன்முதலில் “பவள்” கவசவாகனம் கைப்பற்றப்பட்ட கஜூவத்தை இராணுவ முகாம் தகர்ப்பின் பின் வில்பத்து ஊடாக எதிரி மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தடுப்புச்சமரின் போது பாரிய காயங்களுக்குள்ளாகி தமிழகம் சென்று, சிகிச்சை முடித்து, மிக குறுகிய ஓய்வோடு தாயகம் திரும்பினார். தாயகம் திரும்பிய
உடனேயே சிலாவத்துறை தாக்குதலுக்கான
முன்னாயத்தங்கள் இவர் தலைமையில் தொடங்கப்பட்டன.

பொற்கேணியில் தன் முகாமை போட்டு, தன்னோடு தன் கூடவே விதையான மேஜர் குகன் தலைமையில் அங்கே அணிகளை நிலைநிறுத்தி,
அந்த பெரும் தாக்குதலுக்கான முன்னாயத்தங்களை இவர் நேர்த்தியாக
செய்து முடித்தார்.

இவ்வாறான அந்த நாட்களில் ஒன்றில் தான் போராட்ட வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்று நிலைநாட்டப்பட்டது.

அது 17.02.1991ல் நடந்தது.
டானியேல் தலைமையில் சிறிய அணியொன்று சிலாவத்துறைக்கும் கஜூவத்தைக்குமிடையில் உள்ள இராணுவ நடமாட்டம் குறித்த தகவல்களை சேகரிக்க சென்ற ஒரு அதிகாலைப்பொழுதில், எதிரி முந்திக்கொண்டு அந்த அணிமீது தாக்குதல் தொடுக்க, இரண்டு இளம் போராளிகளை இழந்து டானியேல் துயரத்துடன் தளம் திரும்பினான்.
ஆனால் துன்பத்தை தந்தவனுக்கே அதை திருப்பி கொடு என்ற இயக்க வார்த்தைகளுக்கு ஏற்ப,
மேற்குறித்த அந்த இராணுவ அணியை தாக்கியே ஆகணும் என்று உறுதியெடுத்து
வெறும் ஐந்து நாட்களுக்குள்ளாகவே
தாக்குதலுக்கான அனைத்து ஆயத்தங்களையும்
துணைத்தளபதியாக நின்று செய்து முடித்தார்.

மாசிப்பனி மூசிப்பெய்யும் என்ற வயதானவவர்களின் கூற்று எவ்வளவு உண்மையானது என்பதை அனுபவமாய் அன்று நாங்கள் உணர்ந்துகொண்டோம்.
அந்த ஒரு முழு இராப்பொழுதையும் வெட்டையான வயல்வெளிகளில் நிலையெடுத்திருந்து,
கொட்டும்பனியில் மொத்தமாய்
நனைந்து தோய்ந்து,
குளிரோடு இரவு முழுதும் கண்விழித்து
17.02.1991, பொழுது புலர்ந்தபோது,
ஆளை ஆள் தெரியாத பனிமூட்டம் நிறைந்த அந்த அதிகாலை வேளையில் கொண்டச்சி எனும் இடத்தில்
வெறும் 20நிமிடங்களே நீடித்த அந்த துணிகர தாக்குலில் 50படையினரை ஒரே தடவையில் அழித்து, அவர்களின் அத்தனை ஆயுதங்களையும் அள்ளிவந்த அந்த தாக்குதலின் வெற்றியில் சுபன் அண்ணனோடு இணைந்து இவரது பங்கும் அளப்பரியது.

மேஜர் ராதாரவி,மேஜர் சூரி உட்பட ஐந்து வேங்கைகள் விதையாகிப் போனாலும், குறுகியகால அவகாசத்தில் நேர்த்தியாக மட்டுமன்றி வரலாறாகவும் பதிந்து நின்ற அந்த தாக்குதலின் வெற்றிக்காக சுபன் அண்ணையோடு இணைந்து
நீ செய்த பணிகள் என்றும் எம் நினைவிலுண்டு.

அக்காலத்தில் மன்னாரில் உங்கள் இருவராலும் நிகழ்த்தப்பட்ட இதுபோன்ற தாக்குதல்கள், தமது திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைமையைத் தோற்றுவித்தது சிறீலங்கா இராணுவத்தினருக்கு.

அனேகமாக 1991 ஏப்ரல் மாத நடுப்பகுதியில்,
மாவட்ட தளபதிகளின் நிர்வாக கட்டமைப்புகளில் ஒரு புதிய மாற்றத்தை தேசியத்தலைவர் ஏற்படுத்தினார்.
அதுவரை தளபதி,
துணைத்தளபதி என்றிருந்த நிர்வாக ஒழுங்குகள்,
முறையே
சிறப்புத்தளபதி,
தளபதி,
துணைத்தளபதி என்பதாக மாற்றியமைக்கப்பட்டது.
இயக்கத்தின் வளர்ச்சி,
ஆளணி,
அதிகரித்த தாக்குதல்கள்
என்பவை காரணமாக ஏற்பட்ட வேலைப்பழுவை வினைத்திறனோடு கையாளும் நோக்கத்துக்காக இவ் நிர்வாக ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது,
அதுவரை தளபதியாக இருந்த சுபன் அண்ணா சிறப்புத்தளபதியாகவும்,
துணைத்தளபதியாக இருந்த
வேணு அண்ணன் தளபதியாகவும் நியமிக்கப்பட,
இறுதிப்போர்வரை களமாடிய லக்ஸ்மன் அண்ணன் துணைத்தளபதியாக நியமிக்கப்பட்டார்.

இக்காலப்பகுதியிலேயே சிலாவத்துறை முகாம் மீதான தாக்குதலை தொடர்ந்து எதிரி பலமான பல்வேறு இராணுவ நடவடிக்கைகளை மன்னாரின் பல பகுதிகள்மீது மேற்கொண்டான்.
அவ்வாறான ஒரு முயற்சியின்போது நானாட்டான் பிரதேசத்தை கைப்பற்றிய எதிரி
அங்கே பலமான தளம் அமைத்து நிலைகொண்டான்.

ஆக்கிரமிக்கப்பட்ட அந்த நிலத்தில் எதிரியை நின்மதியாக இருக்க விடாது தொந்தரவு செய்து எதிரியின் உளவியலை உடைக்கும் நோக்கத்தோடு,
நானாட்டானுக்கும் வங்காலைக்கும் இடையிலான, அவனது விநியோக பாதைமீது தொல்லைதரும் தாக்குதல்களை செய்வது உனது உத்தியாக இருந்தது.
இதற்காக நீ தேர்ந்தெடுத்த தாக்குதல் முறை,
கண்ணிவெடி /அமுக்க வெடி என்பதாக இருந்தது.
கண்ணிவெடி புதைப்பதற்கு குட்டிமணியை மட்டும் அனுப்பிவிட்டு நீ இருந்திருக்க முடியும்.
அல்லது உன்னோடு கூடவே விதையாகிப்போன,
நீ அதிகம் விரும்பும் அணித்தலைவனான மேஜர் குகனை பணித்திருக்க முடியும்.

ஆனால் அதிக ஆபத்து மிக்க அந்த பிரதேசத்தினுள் நுழைந்து கண்ணிவெடி வைக்கும் செயலை ஒவ்வொரு தடவையும் நீயே நேரில் செய்தாய்.
ஒரு தளபதியாக இதை நீயே நேரில் செய்யவேண்டியதில்லைதான்.
ஆனால் எப்போதும் எதிரியின் நடமாட்டம் உள்ள அந்த வீதியில்
எதிரியால் நேரக்கூடிய தாக்குதலை எதிர்கொள்ளும் வாய்ப்புக்காகவே நீ ஒவ்வொரு தடவையும் நேரில் சென்றாய்.
அப்படி ஒரு வாய்ப்பை எதிரி உனக்கு தந்திருந்தால் கொளகொட்டியா இராணுவ அணிக்கு எதிராக நீ எழுதிய வரலாற்றை மீண்டும் நானாட்டான் மண்ணிலும் எழுதியிருப்பாய்.

அந்த வீதியில் கண்ணிவெடி புதைப்பது இது உனது முதலாவது முயற்சியுமல்ல.
ஏற்கனவே ஒரு கவசவாகனத்தை உனது அமுக்கவெடி சிதறப்பண்ணியிருந்தது.

ஆனாலும் இன்றையநாள் ஒரு கொடிய நாளாக எங்களுக்கு அமைந்தது.🥲

கண்ணிவெடி புதைத்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில்,
நீ உன் நேசத்துக்குரிய தோழன் மேஜர் குகன், மேஜர் சயந்தன், கப்டன் குட்டிமணியோடு இணைந்து விதையாகிப்போனாய்.

கொண்டச்சியில் இராணுவ ரோந்து அணியை துவம்சம் செய்து நீயும் சுபன் அண்ணனும் எழுதிய வரலாற்றை
இரண்டே மாதங்களில்
29.04.1991 ல் நீங்களே புதுப்பித்து புதுவரலாறாக எழுதினீர்கள்.

நீ கண்ணிவெடி புதைத்து திரிந்த இதே வீதியில்,
நீ விதையாகிப்போன இதே வஞ்சியன்குளம் மண்ணில்தான் நீயும் சுபன் அண்ணனும் இணைந்து அந்த வரலாற்று சாதனையை புரிந்தீர்கள்.

கொண்டச்சியைப்போன்றே இங்கேயும்,
வங்காலையிலிருந்து நானாட்டான் நோக்கி ரோந்து சென்ற இராணுவ அணியை,
இதே வஞ்சியங்குளத்தில்,
முற்றிலும் சாதகமற்ற ஒரு வெட்டைவெளி வயல்பிரதேசத்தில் பதுங்கியிருந்து தாக்கி, ரோந்து வந்த 60படையினரையும் 20நிமிடங்களுக்குள்ளேயே மொத்தமாய் அழித்து,
போராட்ட வரலாற்றில் ஒரே தடவையில் அதிகபடையினரை அழித்த தாக்குதலாக கொண்டச்சியில் நீங்கள் எழுதிய வரலாற்றை இங்கே மீண்டும் மாற்றி எழுதினீர்கள்.

பசீர் அண்ணன் இதற்கான தகவலை திரட்டி தாக்குதலில் முக்கிய பங்காற்ற
லக்ஸ்மன் அண்ணை இச்சண்டையை நேரடியாக வழிநடாத்தினார்.
இரண்டு வீரர்கள் மட்டும் விதையாகிப்போக,
மேலும் நான்கு போராளிகள் சிறு காயங்களுக்கு உள்ளாக , இழப்புக்கள் மிக குறைந்த
அந்த சண்டை
எதிரியின் இராணுவ தந்திரோபாயங்களையே மாற்றியமைக்க நிர்ப்பந்தித்தது.

வன்னிமாவட்ட தளபதிகளில் ஒருவராக இருந்த லெப். கேணல் கிறேசி அண்ணன் அவர்கள் மன்னார் பரப்புக்கடந்தானில் விதையான பின்னரும்,
மன்னாரில் தங்கிநின்ற வன்னிமாவட்ட அணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளையும் இணைத்துக்கொண்டு நீயும் சுபன் அண்ணையும் புரிந்த அந்த சாதனைத்தாக்குதல் காரணமாக எதிரி தமது ரோந்து நடவடிக்கைகான உத்திகளை மொத்தமாக மாற்றியமைத்தான்.
அந்த பெருவெற்றியை தந்த
அதே வஞ்சியங்குளம் மண் உன்னை, உன் பெறுமதிமிக்க தோழர்களுடன் தனதாக்கிக் கொண்டமை கொடுமையானது.

நீண்ட மன்னார் மண்ணின் களமெங்கும்
நிமிர்ந்து நடைபோட்ட மேஜர் குகனையும்,
ஆற்றலும் சிறந்த அனுபவமும் கொண்ட மூத்த மருத்துவப்போராளி மேஜர் சயந்தனும்,
சாதிக் அண்ணனுக்குப்பிறகு
வெடிபொருள் பிரிவின் பொறுப்பாளனாகி நேர்த்தியாக பணிசெய்த கப்டன் குட்டிமணியையும்,
சிறந்த தளபதி, திறமையான மருத்துவன்,
மன்னார் மக்களின் அன்புக்குப் பாத்திரமான, ஆற்றல்மிக்க உன்னையும் ஒன்றாக நாங்கள் பறிகொடுத்தோம்.

உன் இழப்பின் செய்தி எங்கள்செவிகளை தழுவியவேளையில்,
நைல்நதியே
எங்கள் கண்களில்தான் ஊற்றெடுத்துப்பாய்வதாயும்,
இமயமலை
மொத்தமாய் சரிந்து
எங்கள் இதயத்தின்மீது வீழ்ந்துவிட்டதாயும் நாங்கள் துயரத்தை அனுபவித்தோம்.

அன்று நாங்கள் அனுபவித்த பெரும்துயரம்
இன்றும் எங்கள் நினைவில் நின்று வருத்துவதை உணர்கின்றோம்.

நீ விதையாகிப்போய்
நீண்ட காலத்தின் பின்னர்
உன் ஈரநினைவுகளை சுமந்தபடி
அடிக்கடி தாய்மண்ணை வந்து தரிசித்து செல்லும் உன் தந்தையில் உனைக்கண்டோம் நேசனே.

அண்மைய வருடத்தில்
உன் தந்தையும் உன்னிடமே வந்துவிட்ட சேதி அறிந்து வருந்தினோம்.
உன்நினைவு பகிர இப்போ
எம்மருகில் எவருமில்லை
வேணு அண்ணா.

இன்று கார்ப்பட் வீதியாகிவிட்ட,
அன்று நீங்கள் எமக்காக விதையான
அந்த தெருவழியே நாங்கள் பயணிக்கும்போதெல்லாம்,,,,,,,,,,,,

“உங்களுக்காய் தான்
நாங்கள்
இங்கே விதையானோம்,
எங்களுக்காக
நீங்கள் எதைத்தான் செய்கிறீர்கள்”
என
எழுந்து நின்று நீங்கள் கேட்பதை
உணரும்போது
இதயம் வலிக்கிறது வேணு அண்ணா.

எங்கள் நிலைக்காக
எம்மை மன்னித்து விடுங்கள் மாவீரர்களே…

நரிகளும் ஆந்தைகளும் மட்டுமன்றி,
இன்னும் குருதி உறையா கரங்களுடன்,
பிணந்தின்ற கழுகுகளும்,
பேய்களும் உலாவரும்
எம் தேசம்
இருண்டே கிடக்கின்றது வெளிச்சமின்றி.

எழுந்து வாருங்கள் வீரர்களே
நம் தேசத்துக்கு ஒளியேற்ற…..
…..
வேணு அண்ணாவே,
உம்மை வணங்கித்தொழுகின்றோம் எங்கள் நேசமிக்க வீரர்களே.

சீலன். ப