மக(ரு)த்துவர் சத்யா – ஈரமும் வீரமும் நிறை களமுனை மருத்துவம்

“KANGAROOS CAN’T WALK BACKWARDS.

An unusual feature of the kangaroo is that it cannot walk backwards.”

கங்காரு மிருகம் பின்னோக்கி நடக்கும் ஆற்றல் அற்றது எனும்..

இந்த விஞ்ஞானத் தகவலை என் மகன் ஓவியனின் பொத்தகம் ஒன்றில் வாசித்துக் கொண்டிருக்கும் போது இன்னுமோர் சம்பவம் நினைவில் வந்தது.

அது ஓர் நகைச் சுவை கலந்த சம்பவம் ஆகும்.

என் மனப்பறவை இறக்கை கொண்டு பின்னோக்கிப் பறந்து புளியங்குளத்தில் உள்ள உயர்ந்த அகன்ற பாலைமரக்கொப்பு ஒன்றில் அமர்கிறது.

மழைக்கால இரவுகளில் காவல் கடமையில் ஈடுபடும் போராளிகளின் வாழ்வு இயற்கையாலும் கடினமாக்கப்பட்ட காலம் அதுவாகும்.

1997ஆம் ஆண்டு அடங்காப்பற்று மண்ணின் அடர்ந்த காட்டுப் பகுதி முன்னரங்க நிலையில் இருந்த போராளிகளில் நித்திரையைத் துறந்து காவல் இருந்தார்கள்.

சில வேளை அவர்களின் காதுகளில் “சக்கரைப்பாண்டி” என்று சொல்லப்படும் ஒரு வகைப் பூச்சி புகுந்துவிடும். (சக்கரைப்பாண்டி என்பதன் சரியான பெயர் தெரியவில்லை.)

பொதுவாகவே உண்ணி (Tick) போன்ற சில பூச்சியினங்கள் எங்கள் உடற்பாகங்களுக்குள் புகுந்தால் தானாக வெளியே வராது.

வெளியே எடுப்பதும் சில சமயம் சவாலக அமைந்துவிடும்.

செவிப்பறை மென்சவ்வு(Eardrum) கிழிவடையாமல் எடுப்பதற்காக சில வேளைகளில் மயக்கமருந்து (Field Anesthesia such as Ketamine) கொடுத்துவிட்டு வெளியே எடுத்த சம்பவங்களும் உண்டு.

அப்படியான சிக்கல் நிலைமையை ஏற்படுத்தும் ‘சக்கரைப்பாண்டிப் பூச்சி’ தொடர்பாக பேசிக்கொண்டிருக்கும் போது…💭

ஓர் நாள் நண்பர் Dr.க.சத்தியா அவர்கள் நகைச்சுவையாக பின்வருமாறு சொன்னார்.

“சக்கரைப்பாண்டி ஹாஷ் நோ ரிவேஷ் கியர்”
(Sakkaraippandy has no reverse gear)

நகைச் சுவை உணர்மிக்க இந்தக் காணரும் வீரனின் புன்னகை தவழும் வதனமதை இறுதியாகப் பார்த்து 09 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டது.

மருத்துவர் சத்தியா அவர்களின்
நினைவுகள் எங்களரும் நண்பர்களினதும்
நினைவுப் பெட்டகங்களிலும் பத்திரமாக
நிறையவே உண்டு.

பேசுங்கள் நண்பர்களே பேசுங்கள்!