நாள் : 61
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : புதல்வரைப் பெறுதல்
செய்யுள் : 1
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
இல்லறத்தின் பயன் அறம். இல்லறத்தின் பேறு மக்கட்பேறு.
காரணம் இருக்கிறது. அறத்தை தொடரத் தேவை குடும்பத்தின் வளர்ச்சி. அது மக்கட்பேறின் மூலமே கிடைக்கும். அதனால் குழந்தைகள் ஒரு வரமாகவே கருதப்படுகின்றனர்.
பதினாற் பேறுகள் என இல்லற வாழ்வின் பேறுகளைச் சொல்வார்கள்.
கலையாத கல்வியும்
குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும்
குன்றாத இளமையும்
கழுபிணி யிலாத உடலும்
சலியாத மனமும்
அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும்
மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும்
கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும்
பதினாறு பேறுகள் என்கிறார் அபிராமி பட்டர்.
இந்த பதினாறு பேறுகளில் மிக முக்கியமான பேறு மக்கட்பேறாகும்.
அதையே வள்ளுவர் சொல்கிறார். பேறுகள் வரங்கள் என சொல்லப்படும் பல உண்டு. ஒரு மனிதனுக்கு மட்டுமல்ல எந்த உயிருக்கும் மிகச் சிறந்த வரம் என்பது அதன் இனப்பெருக்கம். இனப்பெருக்கம் மூலமே உயிர்கள் உலகத்தில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்கின்றன.
மனிதனுக்கு வெறும் இனப்பெருக்கம் போதாது என்கிறார் வள்ளுவர். காரணம் என்ன?
மனிதனைக் கொல்லும் மிகப்பெரிய எதிரி மனிதன்தான். மனித இனம் அழியும் என்றால் அதற்குக் காரணம் மனிதனாகவே இருக்க முடியும்.
அதனாலேயே வெறும் மக்கட்பேறு என்று சொல்லாமல் அறிவு அறிந்த மக்கட்பேறு வேண்டும் என்கிறார்.
அறிவுள்ள சந்ததியே மிக உயர்ந்த பேறு. இது சொல்லாமல் சொல்வது அறிவற்ற சந்ததியை பெறுவது வரமல்ல என்று..