தமிழில் சந்தி இலக்கணம் – 05 (நிறைவுரை)

480

5. நிறைவுரை

இக்கட்டுரையில் சந்தி பற்றி கூறப்பட்டுள்ள கருத்துகள் முழுமையானவை என்று கூற முடியாது. ஆனால் போதுமான அளவு செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. சந்தி பற்றித் தமிழறிஞர்களிடையே ஒருமித்த கருத்து உள்ளது எனவும் கூற இயலாது. மேலும் வல்லெழுத்து மிகுந்தால் ஒரு பொருளும், மிகாவிடின் வேறொரு பொருளும் தருவதால், பொருளறிந்து சந்தியைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. கீழ் வரும் எடுத்துக்காட்டுகளை நோக்குக:

ஓதி கண்டான் (கூந்தலைக் கண்டான்)
ஓதிக் கண்டான் (படித்துக் கண்டறிந்தான்)
பாடி கண்டான் (வீரர் தங்கியுள்ள பசறையைக் கண்டான்)
பாடிக் கண்டான் (பாடல் பாடி அறிந்தான்)

பொருளுணர்ச்சி தெளிவாக விளங்க இக்காலத்தில் முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி, வியப்புக் குறி, வினாக் குறி போன்றவை பெரும் துணை புரிகின்றன. கீழ் வரும் எடுத்துக்காட்டில், காற்புள்ளி (comma) இடுவதன் வாயிலாக, சந்தி எழுத்து தவிர்க்கப்படுதைக் காணலாம்.

தாய் அழ, குழந்தை சிரிக்கும்
தாய் அழக் குழந்தை சிரிக்கும்

எனவே இடமறிந்து, பொருளறிந்து சந்தியைப் பயன்படுத்துவது இன்றியமையாதது. மேலும், ஆங்கிலத்தில் ஒரு சொல் அல்லது தொடர் பிழை உள்ளது போல் தோன்றி, அந்தப் பிழை என்ன என்று சொல்ல முடியாத நிலையில் “அது நன்றாக ஒலிக்கவில்லை (it does not sound well)” என்று செவியின் மீது பழியைப் போடுவர். தமிழிலும் சந்தி பற்றிய தடுமாற்றங்களுக்கு இது பொருந்தும். வாழ்த்துகள் – வாழ்த்துக்கள், பொருள்கள் – பொருட்கள், மேல்படி – மேற்படி, இவற்றில் எது சரி என
அறிய இலக்கணத்தைத் தேடுவதும் உண்டு, செவியின் துணையை நாடுவதும் உண்டு.

இறுதியாக ஒன்றைக் கூறி இக்கட்டுரையை நிறைவு செய்வோம். “செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப் பழக்கம்” என்பது முதுமொழி. தமிழில் நிறையச் சிந்திப்போம், படிப்போம், பேசுவோம், எழுதுவோம். சந்தி பற்றி மட்டுமல்ல, அனைத்தையும் பற்றிய தெளிவு பிறக்கும்.