நெஞ்செரிச்சலை தடுக்க..

அவனுக்கு வருத்தமே வருவதில்லையென வருத்தப்பட்டு வயிறெரிவோரை அழிக்க வேண்டுமா? உணவுப் பழக்கத்தில் ஒழுங்கைக் கடைப்பிடித்து வாழ்க்கை முறையை சரியாக நெறிப்படுத்தினாலே போதும். நலக்குறைவுக்கு நலம் குறைந்து நலிந்து அழிந்து விடும்.

உணவு பழக்கங்கள், ஆரோக்கியமற்ற உணவு முறைகள் போன்றவையே அதிகரித்து வரும் உடல்நலக் கேட்டுக்கு முதன்மையான காரணியாகும். பத்தில் எட்டுப் பேர் அசிட்டிக் மற்றும் நெஞ்செரிச்சலால் அல்லலுறுவதும் இதனாலேயே. 

மருந்து மாத்திரைகளால் இவற்றிலிருந்து விடுபடலாமனாலும் பொருத்தமான உணவுப் பழக்கம் மிகச்சிறந்த மருந்தாகும்.

சிட்றஸ் பழங்களில் உள்ள அசிட்டிம் ஐட்டங்கள் நெஞ்செரிச்சலை மேலும் அதிகமாக்கும். எனவே நெஞ்செரிச்சல் உள்ளோர் ஒரேஞ், எலுமிச்சை, திராட்சை போன்ற பழங்களைத் தவிர்க்கலாம்.

பீட்சா, பேர்கர் உள்ளிட்ட துரித உணவுகளை உண்ணக் கூடாது. கேக், சமுசா, சொக்லெட் வகைகளையும் தவிர்க்க வேண்டும். இவை அசிட்டிக்கை அதிகப்படுத்தும்.

ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உணவை உண்ணக் கூடாது. நான்கு மணி நேரத்துக்கு ஒரு தடவை குறைந்தளவில் உணவை உட்கொள்ள வேண்டும்.

எம்மில் பலருக்கு ஒரு பழக்கம் உண்டு. உண்டவுடன் உறங்குவது. இது அறவே கூடாது. உண்ட களை தொண்டர் கதை எல்லாம் ஆகவே ஆகாது. குட்டித்தூக்கம்தானே என்ற சமாதானம் எல்லாம் கணக்கில் இல்லை. உண்டவுடன் உறங்காமல் உணவு சமிபாடடைய சிறு அசைவை கொடுக்க வேண்டும்.

உடற்பயிற்சிகள், விளையாட்டுகளில் ஈடுபடல் அவசியம். ஏனெனின் பருமனானோருக்கு நெஞ்செரிச்சல் எளிதாகவும் அடிக்கடியும் உண்டாகும்.

குடிச்சு குடிச்சு அழியுறானே என உறவுகள் வயிறெரிவது ஒரு புறம் இருக்க, குடிப்போருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். எனவே மது வகைகளைக் கண்டால் கட் அண்ட் ரைட்டாக வேறு பக்கம் போய் விட வேண்டும். புகைத்தலுக்கும் தடா போட்டு விட வேண்டும்.

நெஞ்செரிச்சல் மந்தப் போக்குக்கு கோப்பி அல்லது தேனீர் அருந்தினால் நல்லாக இருக்கும் எனத் தோன்றும். ஆனால் அவை நெஞ்செரிச்சலை மேலும் கூட்டும். எனவே நோ கோப்பி.. நோ தேனீர்..

எல்லாத்துக்கும் நோ என்றால் எப்படி? ஒன்றுமே யெஸ்ஸில்லையா? உண்டே.. தண்ணீர் அதிகம் பருக வேண்டும். நேராகப் படுக்க வேண்டும். குப்புறவோ, சுருண்டோ படுக்கக் கூடாது.

நோய்க்குப் பின் தான் மருந்தும் மாத்திரையும்.. உணவு ஒழுக்கமோ நோய்க்கு முன்னும் பின்னும்.. பிழையற்ற உணவுப் பழக்கம் இருந்தால் நோய் நொடி அண்டாது. தப்பித் தவறி அண்டினாலும் உணவே மருந்தாகவும் மாறும்.