நாளொரு குறள் பொருளுடன் – 82

577

பால் : அறத்துப்பால்
அதிகாரம் : விருந்தோம்பல்
செய்யுள் :2

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

விருந்தோம்பல் தமிழரின் கலாச்சாரத்தின் ஆணிவேர்.

விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல

இதைக் கடைபிடிக்க இயலுமா?

முடியும் என்று காட்டி இருக்கிறான் தமிழ்மன்னன்.

அவ்வைக்கு நீண்ட ஆயுளைத் தரும் நெல்லிக்கனியைத் தந்த, சங்ககால தமிழ் வள்ளல் அதியமான்.

அதை அவன் உண்டிருந்தால் வாழ்ந்திருக்கலாம். அவ்வைக்கு கொடுத்தான் பலன் இருமடங்காயிற்று, இருவருமே வாழ்கிறார்கள்  நம்மனதில்.

அவ்வை அவனைப் போற்றி இருப்பதைப் பாருங்கள்..

“வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல் தொடி தடக்கை
ஆர்கலி நறவின், அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறை நுதல் பொலிந்தசென்னி
நீலமணி மிடற்று ஒருவன்போல
மன்னுல பெரும நீயே! தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறுயிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே”
(புறநானூறு – பாடல் 87, 91 – அவ்வையார்)

“அருமையான நெல்லிக்கனி அதை உண்டால் என்றும் இறவாமல் இருக்கலாம் என்று தெரிந்தும் அதை நீ உண்ணாமல் அச்செய்தியை எனக்கு சொல்லாமல் நான் என்றும்
இறவாமல் இருக்க வேண்டும் என்று எனக்கு ஈந்தனையே அதியர் கோமான் அஞ்சி! நீ
ஆலகாலவிடத்தை தன் மிடற்றில் அடக்கி உலகை உய்ய வைத்த சிவனைப் போல
சிறப்பாயாக”.

அணிலின் வால் போல மீசை கொண்ட மன்னவன்
அதியமான் நெடுமான் அஞ்சி யெனும் தென்னவன்
ஆதிநாளில் தமிழ் மண்ணில் முதல் முதலாய்
அருங் கரும்பைக் கொண்டுவந்து விளைச்சல் செய்தார்
அதன் இனிப்பைத் தமிழில் கண்ட அவனின் முன்னோர்
அதியர் குடிப்பிறந்ததாலே அதியமான் ஆனான்.
தகடூரைத் தலைநகராய்க் கொண்டு – அந்தத்
தமிழூரில் தலைநிமிர்ந்து ஆண்டான்.
திண்தோளில் வலிமைதனைத் தேக்கிக்
கண் அசைவில் பகைப்புலத்தைப் போக்கி
மண்மீது புகழ் நிலைக்க மார்பில்
புண் ஏந்தி வீழ்வதையே விரும்பி
அஞ்சியெனப் பெயர் பூண்ட போதும்
அஞ்சாத வரிப்புலியாய் மானமுடன் வாழ்ந்தான்
அவ்வையாம் கவியரசி அவனுக்காக
அணிமணிகள் தமிழால் செய்து
அகமாரப் பூட்டி மகிழ்ந்தாள் – அவன்
அறம் வியந்து திறம் புகழ்ந்தாள்.
“களம் புக எண்ணுகின்ற பகைவர் அறிக – எம்
உளம் நிறை வீரன் ஒருவன் இருக்கின்றானய்யா!
ஒரு நாளில் எட்டுத்தேர் செய்கின்ற தச்சன்
ஒரு திங்கள் உழைத்தமைத்த ஒரு தேர்க்காலுக்கொப்ப
உடல்வலியும் உரமும் பெற்றோன்
அடலேறு அதியமான்; தெளிக!” என்றே,
அவ்வை பாடிய செய்யுள் இஃதே:-

“களம்புக ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன்ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே”

அவ்வீரன் அதியமான் ஒரு நாட் காலை
அடவியிற் சென்று அலைந்து திரிந்து
விலங்குகள் மீது வேல்களைப் பொழிந்து
வேட்டையை நிகழ்த்தி விரைந்து திரும்பினான்
வழியில் மலையிடைப் பிளவொன்று கண்டு
விழியினைச் செலுத்தி வியப்பாய் நோக்கினான்
தனிமையிலே நெல்லி மரமொன்றுயர்ந்து
தன் கிளையினில் சிறு இலைகளுக்கிடையே
கனியொன்றே யொன்றைத் தாங்கி நின்றது.
இனிப்பாக இருக்குமென்றும் அதனையுண்டால்
இறப்பேதும் அணுகாதென்றும் இஃதுண்மையென்றும்
தலைப்பாகைத் துறவியொருவர் புதுமையாகப் புகன்றவுடன்
இமைப் போதும் தயங்காமல் அக்கனியைப் பறித்துக் கொண்டான்

தனைக் காக்க மன்னவனும் அக்கனியை உண்பான் என்று,
தகடூர் வீரரெல்லாம் எண்ணிக் கொண்டு
தடந்தோள் உயர்ந்திடவே தலைவன் பின் நடைபோட்டார்.

மாளிகைக்கு வந்தவுடன் நெடுமானஞ்சி
மாணிக்கத் தமிழ்பாடும் அவ்வையை அழைக்கலுற்றான்.
“மன்னவனே ஏன் அழைத்தாய் எனத் தெரியும்;
மாற்றானாம் தொண்டைமானிடம் எனைத் தூதாக அனுப்பத்தானே?”
என்று கேட்ட அவ்வை அம்மை
சென்று வரத் தயார்தான் என்றாள் – தூதில்
வென்று வருவதற்கு முன்னே – இதைத்
தின்று சுவைத்திடுக என வேண்டி,
நெல்லிக்கனியை நீட்டினான் வேந்தன் – நிலவில்
அல்லி மலர்வது போல் முகமலர்ந்தாள் அவ்வை!
சுவையான கனிதான் என்று சுவைத்துப் பார்த்து; அரசு
அவைக் கவியான அவ்வை சொன்னாள்.
“அருமையாய்க் கிடைத்திட்ட இக்கனியுண்டால்
ஆயுள் நீளுமென்று அடவியில் துறவி சொன்னார்
அடியேனின் உயிர் அதிக நாள் இருந்தென்ன பயன்?
அவ்வையின் ஆயுள் வளர்ந்தால் தமிழ் வளரும்
தகடூரின் பெயர் உள்ளளவும் நான் வாழ்வேன்
தமிழ் உள்ளளவும் வாழ்க அவ்வையே” என்றான்.
உண்மையை முனூகூட்டி உரைத்திட்டால்
உண்ணாமல் மறுத்திடுவாள் அவ்வையென்று
தான் வாழக் கருதாமல் தமிழ்த்தாய் வாழத்
தகடூரான் தந்தகனி நெல்லிக்கனி;
அதியமான் தமிழ் ஆர்வம் போற்றி
அவ்வை தந்த நன்றிக்கனி; இந்த செய்யுட்கனி!

விருந்தினருக்காக உயிரையே கொடுத்த மன்னர்கள், மக்கள் பலர் நம் வரலாற்றில் உண்டு.