கவிதை எழுதுவது எப்படி – 5 (படித்ததில் பிடித்தது)

697

கவிதை எழுதுவதில் சில வழிமுறைகளைக் கண்டிருப்பீர்கள். எனக்குத் தெரிந்து என்ன இருக்கிறதோ அதை மட்டுமே கொடுத்து வருகிறேன். அதற்கு மேலும் பல விஷயங்கள் உள்ளன.. இப்போது கவிதையில் எதுகைகள் மோனைகள் அமைத்து கொஞ்சம் அழகு படுத்தலாம்./

எதுகைகள் என்பது என்ன? இலக்கணத்தில் தொடை என்று சொல்வார்கள். பல தொடைகள் உள்ளன. இப்போதைக்கு அது தேவையில்லை. பிறிதொரு நாள் கவனித்துக் கொள்ளலாம்.. ஒரு வார்த்தையில் இரண்டாம் எழுத்து ஒன்று போல அமைந்திருந்தால் அது எதுகை எனப்படும்.. இது கவிதை அல்லது செய்யுள் படிப்பதற்கு வசதியாகவும் அழகாகவும் இருக்கும். உதாரணத்திற்கு

ஆற்று மணற்பரப்பில் – நாம்
அன்புற்ற ஞாபகங்கள்
நேற்று நிகழ்ந்தவைபோல் – என்
நெஞ்சை அழுத்துமடி – வைரமுத்து
.

ஆற்று
நேற்று
, இவ்விரு வார்த்தைகளில் இரண்டாமெழுத்து ஒன்று போல் அமைந்திருக்கிறது (ற்) அல்லவா? ஆகவே அது எதுகை எனப்படும்.. இது கவிதைகளை அழகு படுத்த…. ஷீ-நிசி கவிதைகள் பெரும்பாலும் எதுகைகள் அமைத்து காணப்படும்..

மீண்டும் வா…
மீண்டும் எனைத்
தீண்ட வா..

இம்மாதிரி வார்த்தைகளை முதலில் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். வார்த்தைகள் இல்லாமல் கரு இருப்பினும் கவிதை எழுத முடியாதல்லவா? இதற்கு எப்படி பயிற்சி எடுத்துக் கொள்வது? ஒரு வார்த்தை மனதினுள் நினைத்துக் கொள்ளுங்கள். அதனோடு தொடர்புடைய வார்த்தைகளை நீங்களாகவே சொல்லிப் பாருங்கள். உதாரணத்திற்கு

பஞ்சு” என்ற வார்த்தையை நினைத்துக் கொள்ளுங்கள்… அப்படியே கீழ்கண்டவாறு சொல்லிப் பாருங்கள்

பஞ்சு
நெஞ்சு
அஞ்சு
குஞ்சு
மஞ்சு
நஞ்சு

இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று நம் தமிழ் வார்த்தைகள் எல்லாமே க,ச,ஞ,த,ந,ப,ம,ர,வ, மற்றும் உயிரெழுத்துக்கள் ஆகிய எழுத்து வரிசைகளில் மட்டுமே தொடங்கும். ஆகவே மற்ற வார்த்தைகளோடு நினைப்பதை விட்டுவிடலாம்.. உதாரணத்திற்கு

கஞ்சு
சஞ்சு
ஞஞ்சு
தஞ்சு
நஞ்சு
பஞ்சு
மஞ்சு
ரஞ்சு
வஞ்சு

இதில் சில வார்த்தைகள் தமிழில் இருக்கிறதா என்று யோசனை வந்தால் உடனே அதை அழித்து விட்டு வேறு இடுங்கள்.

கஞ்சு – கஞ்சி
சஞ்சு – சஞ்சலம், சஞ்சு என்ற வார்த்தைக்கும் அர்த்தம் இருக்கிறது,
ஞஞ்சு – நிச்சயம் இருக்காது.
தஞ்சு – தஞ்சம்
ரஞ்சு – ரஞ்சனி, ரஞ்சி
வஞ்சு – வஞ்சம், 

இதேபோல எல்லா வரிசைகளிலும் முயற்சி செய்தால் நிச்சயம் வார்த்தைகள் கிட்டும்.. பெரும்பாலும் நமக்குத் தெரிந்த வார்த்தைகளே சிக்கும்……… இந்த பயிற்சி அவசியம்..

சரி.. வார்த்தைகள் தெரிந்துகொண்டால் எழுதிவிடமுடியுமா?

மிகச் சரியான பொருத்தம் அமைக்கவேண்டும். கவிதையில் தான் எதுகைகள் இருக்கவேண்டுமே தவிர எதுகையில் கவிதை இருக்கக் கூடாது. கவிதையோடு வார்த்தைகள் ஒட்டியிருக்கவேண்டும். தனித்து தெரியக்கூடாது.

தங்கத்தாமரை நிலவோ அவள்
அங்கத்தால் மதி களவோ?
நெஞ்சத்தே ஒரு பனியோ அவள்
வஞ்சித்தால் ஒரு பணியோ?

முதலிரண்டு அடிகளில் முதல் வார்த்தையில் (சீர்) கவனியுங்கள். அதே சமயம் நிலவோ, களவோ, பனியோ, பணியோ ஆகியவையும் சந்தங்களே! எதுகைகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.. அவை ஒரே சப்தத்தைக் கொடுக்கின்றன. மேலும் ஒரு கவிதையை எதுகைகள் கெடுத்து விடக்கூடாது. அதில் நாம் முனைப்பாக இருக்கவேண்டும். எதுகைகள் வாராவிடில் அப்படியே கவிதை எழுதலாம். அவற்றை வைத்தே எழுத வேண்டும் என்ற அவசியமில்லை. அது முகத்திற்குப் போடும் முகச் சாயம் போலத்தான்… வெறும் அழகுக்கு மட்டுமே பயன்படும்.

நீங்கள் முயற்சி செய்து அதன் பலனை எனக்குச் சொல்லுங்களேன்..

கற்பனை வராதவர்களுக்கு அடுத்த பாகம் முதல்…