ஆறாத் துயர் தந்த நண்பனின் மீளாத்துயில்.

205

மனிதத்தை நேசித்து தேசியத்தை பூசித்தவர்.
முத்தமிழை மொத்தமாக சொந்தமாக்கி
அரசியல்மேடைகளில் அதிர்வுகளை ஏற்படுத்தியவர்.

அகவையில் இளையவரானாலும் அறிவில் முதிர்ந்தவர்.
முதுகலைப்பட்டம் பெற்ற மகத்தான கல்விமான்
இவர்தான் நண்பர் சிவராசா யெகன்.

இவர்
இன்று எம்முடன் இல்லை.
ஆறாத்துயரை தந்துவிட்டு
மீளாத்துயிலில் விண்ணகம்சென்றுவிட்டார்.

தாயகத்தில் இவரோர் உழவனாக மண்ணைப் பண்படுத்தி நல்ல விளைச்சலை அறுவடை செய்ததுபோல்

நல்ல ஆசானாகவுமிருந்து மாணவர்களின் உளத்தைப் பண்படுத்தி அறிவை விதைத்து ஆற்றலுள்ள மாணவர்களை உருவாக்கியவர்.

ஆயிரமாயிரமாய் மாணவர் படையெடுத்துவந்து அவரிடம் கற்றதை நாம் அறிவோம்.

எம் மக்களின் நலனை என்றும் மனதில்
கொண்ட இவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் புள்ளிவிபர பொறுப்பதிகாரியாக இருந்தபோது

போர்க்கால சூழலில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக சிங்களவரசு தப்பான புள்ளி விபரத்தை வெளியிட அழுத்தம் கொடுத்தபோதும்

அதற்கு இணங்க மறுத்ததால் அவர்பட்ட இன்னலை யார் அறிவார்?

புலம்பெயர்ந்து பிரான்சு மண்ணிலே இவர் வாழ்ந்தபோது இனப்பற்றுடன் ஆற்றிய பணிகள் பல.

தமிழ்ச்சோலை தலைமைப்பணிமனையின் ஆசிரிய பயிற்றுனராக தன்னை இணைத்து இளைய தலைமுறை தமிழில் உச்சம்தொட
உழைத்தவர்.

பட்டறைகளில் இவர் பேசும் அழகு தமிழ் அரங்கை அலங்கரிக்கும்.

நண்பா!
உன் ஆர்ப்பாட்டமில்லா அறிவாலும் அடக்கமான பேச்சாலும் நளினமான பாவனையாலும் தன்னலமற்ற தமிழ்ப் பற்றாலும் எம் மனங்களில் நீங்கா இடம்பெற்ற நீ
இம் மண்ணுலகைவிட்டு நீங்கினாயோ?

மறக்கமுடியவில்லை.

உன் ஆத்மா இறைவன் தாழ் உறையவும் துவண்டிருக்கும் உன் உறவுகள் மீண்டெழும்
வல்லமை பெறவும் இறைவனை வேண்டுகிறோம்.

– நண்பர்கள்.