நேர்மை அற்ற நோர்வே தலைமையில் சமாதான நாடகம் மாங்கனித்தீவில் ஆடப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு நாள் தமிழீழ வானொலியின் பொறுப்பாளர் தமிழன்பன் (ஜவான்) அவர்கள் ஒருவரை கிளிநொச்சி பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
பக்குவமாகவும் மரியாதையுடனும் அழைத்துவரப்பட்ட அந்த மனிதர் சாதாரணமாக சாரத்துடன் எனது அறைக்குள் சிறிது நொண்டிக் கொண்டே வந்தார்.
சாரத்தை மெல்ல உயர்த்திக் காட்டிய போது முழங்காலில் உரசல் காயம் ஏற்பட்டிருந்தது.
“என்ன நடந்தது?” எனக் கேட்டேன்!
எம்மவர்களுடன் சுண்டிக்குளம் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு முதல் செம்பியன்பற்று, குடாரப்பு வரை மோட்டார் சைக்கிளில் சென்று சுதந்திரமாகச் சுற்றிப் பார்த்துவிட்டு வரும் போது மோட்டார் சைக்கிளில் இருந்து வீழ்ந்து அந்தக் காயம் உண்டாகியிருந்ததாகச்சொன்னார்கள்.
நோயுயிர் முறிகளுடன் (Antibiotics) ஈர்ப்புவலித் தடுப்பூசியாகிய Tetanus Toxoid உம் எழுதிவிட்டு யான் நிமிர்ந்த போது…..!
“ஆனையிறவை வெற்றி கொள்வதற்காய் நடாத்தப்பட்ட தரையிறக்கத் தாக்குதலில் அந்த அணிகளோடு குடாரப்பில் தரையிறங்கிய பிரதான மருத்துவர்களில் ஒருவர் இவர்” என ஜவான் அண்ணர் அந்த முக்கியஷ்தருக்குச் சொன்னார். சொன்னவுடன் நோவுடன் இருந்தவர் சட்டென எழுந்து எனக்கு அழுத்தமாகக்கைலாகு தந்தார்!
பத்திரிகைகளில் சில தடவைகள்
பார்த்த முகம் என்றாலும் அவர் யாரென்பதை ஊகிக்க முடியாமலே இருந்தது.
ரிக்கட்டில் மீண்டும் ஒரு முறை
பார்த்த போது இன்ப அதிர்ச்சி மின்னலென உடலெங்கும் கொடிவிட்டுப் பரவியது.
ஆம், தராக்கி என்றழைக்கப்படும் சிவராம் என்னை மீண்டுமொரு முறை அர்த்தப் புன்னகை வீசியபடியே இறுக்கமாகக் கைலாகு தந்து விடைபெற்றார்.
ஆனையிறவின் வெற்றியின் மகத்துவத்தை அந்த இராணுவ ஆய்வாளர் எப்படி ஆத்மாத்தமாகவும் ஆழமாகவும் பார்க்கின்றார் என்பதை அவரது இரண்டொரு பேச்சும் உடல்மொழியும் எனக்கும் அங்கிருந்த வைத்தியப் பணியாளர்களுக்கும் உணர்த்தியது.
திரு அன்பரசன் நடராசா அவர்கள் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டதை அவரின் மொழியிலேயே இங்கு குறிப்பிடுவது சாலவும் சிறந்தது என்பதால் கீழே இணைக்கின்றேன்.
“மாற்று இயக்கம் ஒன்றின் முக்கியபதவியில் இருந்த ஒருவர் தேசிய தலைவர் அவர்களால் ”மாமனிதர்” என கெளரவிக்கப்பட்ட வரலாற்றுக்குரியவர்.
தமிழர்கள் பெற்ற உரிமைகள் அனைத்துமே பேசிப்பெறப்பட்டவையல்ல, அடித்தே பெறப்பட்டவை என தைரியமாகச்சொன்னவர்..
சிங்கத்தின் குகைக்குள் இருந்தபடியே தமிழின விடுதலைப்போரையும், அதன் அறத்தையும் தைரியமாக நேசித்து எழுதிய ஒரு பத்திரிகையாளர்..
தமிழினத்தின் மிகச்சிறந்த போரியல் ஆய்வாளரையும்….,
“அகம்” தனில் நினைந்து
“கரம்”தனைக் கூப்பி
“சிரம்” தனை தாழ்த்தி
வென்றாக வேண்டும் என நினைந்து
ஒன்றுபட்டு நிமிர்வோம்!