கடமையே கடவுள்

இராணுவ மருத்துவர் ஒருவர் போரில் காயமுற்ற வீரர்களை அன்புடன் கவனித்து வந்தார். மிகுந்த கனிவுடனும் ஈடுபாட்டுடனும் இவர் ஆற்றிய பணியினால் வீரர்களின் காயம் விரைவில் ஆறி அவர்கள் புத்துணர்ச்சி கொள்வார்கள். மீண்டும் போருக்குப் போவார்கள்.

அப்படிப் போனவர்களில் சிலர் சண்டையில் சாவைத் தழுவ சிலர் மீண்டும் விழுப்புண் அடைவார்கள். மருத்துவரும் மனம் சுருக்காது அவர்களைக் கனிவோடு கவனிப்பார். ஆனாலும் தான் குணமாக்கிய வீரர்கள் சண்டையில் சாவடைந்து அவர்கள் வித்துடல்கள் மருத்துவ மனை வரும் போது மருத்துவர் மனம் வாடும். இப்படி இவர்கள் உயிர் விடவா தான் கஷ்டப்பட்டு இவர்களைக் கவனித்தேன் என மருத்துவர் அழுவார். 

இறப்பு இவர்களின் தலைவிதி எனில் மருந்து எதற்கு? சிகிச்சை எதற்கு என்றெல்லாம் எண்ணினார். இந்த எண்ண அழுகை இவரை மேலும் அழுத்த ஒரு கட்டத்தில் இராணுவத்தை விட்டு வெளியேறி காடு மலையென அலைந்தார்.

அவ்வாறு அலையும் போது குரு ஒருவரைக் கண்டார். அவருடன் சில காலம் தங்கினார். பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி. இவ்விரண்டுக்கும் இடையில் இருக்கும் வாழ்வு இனிமையாக இருக்க வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் தன்னாலானதைச் செய்ய வேண்டும். இறப்பு நிச்சயம்தானே என்று கடமை தவறக்கூடாது என்பதை குருவுடன் இருந்த காலத்தில் கற்றார் மருத்துவர்.

மீண்டும் தன் களப்பணிக்குத் திரும்பி முன்பை விட முழு வீச்சுடன் பணியாற்றத் தொடங்கினார்.