ஆடை நாகரிகம்

573


ஆடையைக் கொண்டு ஆளை அளவிடுவது பழக்கத்தில் இருந்தது ஒருகாலம். ஆனால் இன்றோ ஆடைக்கும் ஆளுக்கும் எவ்வித சம்மந்தமுன் இல்லையெனும் காலம் மலர்ந்துள்ளது.

ஆடையின்றி அலைந்த மனிதன் ஆசை வசப்பட்டதால் ஆடையை அணிந்தான் என்பார்கள். மாந்தப் பரிணாம மாற்றமும், அறிவியலும் நாகரிகமும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு வளரும் போது அதன் ஆரம்ப கட்டத்தில் ஆடை அணியும்  பழக்கத்தை மனிதன் பழகிக் கொண்டானெனும் அறிவியல் உண்மையும் நம்மிடையே உண்டு.

அவ்வாறு ஆடை அணியத் ஆரம்பித்தவன், காலப்போக்கில் தன் வாழிடப் பருவநிலை, இனப்பண்புகளைக் கொண்டு ஆடைகளை உருவாக்கினான். இதனால் ஆடையைக் கொண்டு ஒருவருடைய இனத்தையும் நாட்டையும் அனுமானிக்கும் காலத்தை மலர்வித்தான்.

காலச்சுழற்சியில் தொழில்நுட்பம் வேக வளர்ச்சி காண, பரந்த உலகம் வீட்டுக்குள்ளேயே சுழலத் தொடங்கியது. ஆம்,, தொலைக்காட்சி, வானொலி, புதினத்தாள், தொலைபேசி, இணையம் என தொழில்நுட்பம் வளர்வுற உலகம் வீட்டுக்குள் அடங்கியது.

பன்னாட்டு ஆடைகளை அறியத் தொடங்கினர். புதிதைக் கண்டால் விருப்பம் கொள்ளும் மனித இயல்பு கொண்ட மனிதன் பொருத்தமில்லாத ஆடைகளை அணியத் தொடங்கினான். தன் உடலமைப்பு, காலநிலை எதையும் கணக்கெடுக்காது, நாகரிகத்துக்குள் மட்டும் நுழைந்து ஆடையுலகை வடிவமைத்தான். இதில் அதிகம் நாட்டம் கொண்டது கீழைத்தேச நாடுகளேயாகும். கீழை நாடுகளின் இந்நிலையை மேலை நாடுகளும் கீழை நாட்டு வியாபாரிகளும் பயன்படுத்தத் தொடங்கினர்.

நாகரிகமெனும் போர்வையில் உடல் நலனுக்கு பங்கம் விளைவிக்க வல்ல ஆடைகளை வடிவமைத்து தங்கள் வியாபாராத்தைப் பெருக்கிக் கொண்டனர். தாம் தயாரிக்கும் ஆடைகளை அணியாதவர்கள் அநாகரீகர்களென்ற மாயையை உருவாக்கி, இன, நாட்டு அடையாளங்களுக்குள் அடங்கிக் கிடந்த மனிதனை, பண ரீதியாக துண்டாடி விட்டனர்.

இதன் விளைவாக ஆடையைக் கொண்டு ஆளை அடையாளம் காணும் காலம் காலாவதியாகி விட்டது. கடன் வாங்கியேனும் நாகரிக (?) ஆடைகளை அடையும் காலம் வந்து விட்டது. இதனால் மனித இனம் இன்னும் பல அசௌகரியங்களை சந்திக்கப் போவது திண்ணம்.