ஓ……. கீர்த்திகா…..,,
உன் செயலூக்கம்,
அர்ப்பணிப்பு, ஆளுமைத்திறமை,
தியாகம்
இவற்றிற்கு முன்னால்
நாங்களெல்லாம்
வெறும் தூசு.
ஆனால்,
இவற்றையெல்லாம் தாண்டி
போராட்டத்தின் மீது,
இயக்கத்தின்மீது,
தலைமையின்மீது
நீ கொண்டிருந்த
விசுவாசத்தை
எதனிடம் ஒப்பிடுவேன் நான்?……..
…………………………………..
நொடிப்பொழுதின் அசட்டையீனத்தால்
அல்லது
தடுமாற்றத்தால்
கொள்கை மிதிபட்டு,
வாழ்வு சிறைப்பட்டு,
கணங்கள் யுகங்களாக
கழிந்த
அந்த கொடிய நாட்கள்
என்
கண்முன் விரிகின்றன.
………………………………………..
சுவாசிக்க அவகாசம் கிடைத்த
முதல் சந்தர்ப்பத்திலேயே
எனைக்குறித்த சேதி சொல்ல
நான் முகவரி தேடியபோது,
எனைப்பெற்றோர்,
என் சகோதரர்கள்,
திக்கெட்டும் இருந்த
எனது பல உறவினர்கள்/நண்பர்கள்,
உனைப்போலவே இருந்த
பலநூறு போராளிகளையும் தாண்டி
என் மனக்கண்முன் விரிந்தது
உன்வீட்டு முகவரியே….
உரியவரிடம்
என் சேதி
உன்னால்
கொண்டுசேர்க்கப்பட்டு
விட்டதான
தகவலை
உன் அம்மாவின் மடல்
சுமந்து வந்தபோது
நான் பூரித்துப்போனேன்…
கூடவே,
நாலு வரியிலேனும்
என் நலன் குறித்தும்
நீ
விசாரித்திருப்பாய் என
கடிதம் முழுவதும் தேடினேன்.
நான் தேடிய
எனைக்குறித்த
உன் நலன்விசாரிப்புக்கள்
என்னைப்போலவே
காணாமல் போயிருந்தன.
காரணம் புரியாமல்
நான்
ஏமாற்றமடைந்தேன்.
பசியே இல்லாத நேரங்களில்
கூட
உணவளித்து
பசிபோக்க முயற்சிக்கும் நீ
இன்று
கொடும் பசியோடு இருக்கும்
போது
உணவளிக்க முயற்சிக்காமை வியப்பளித்தது.
ஆனால்,
நான் கேட்காமலேயே
இதற்கான காரணத்தை
உன் அம்மாவின்
இரண்டாவது கடிதம் கொண்டுவந்த போது,
நான் வியந்து போனேன்.
உனை நினைத்து
பெருமை கொண்டேன்.
உன் தோழமை
என்
மாபெரும் வரம் எனக்கண்டேன்.
ஆம்,
விசுவாசம் என்பது
என்னவென்பதை
பலருக்கு நீ உணர்த்தினாய்.
எனக்கோ
நீ அதை
அழகாக கற்பித்தாய்.
சாகும்வரை
தேசத்திற்காக பணிசெய்வதொன்றே
உன்னுடனான
தோழமைக்கான
நிரந்தர தகுதி
என்பதையுணர்த்தினாய்.
மற்றவர்களுக்கு
நீ
கற்பித்ததைவிட
உன் செயல்களால்
மற்றவர்கள்
உன்னிடமிருந்து
கற்றுக்கொண்டதே ஏராளம்.
இதில்
நானும் விதிவிலக்கல்லவே………..
தேசத்திற்காக நீ விதையாகிப்போனபோது
உன் வயது 21.
21 வயதென்பது
நம் சமூகத்தில்
இளசுகள்
பல்கலைக்கழகம் சென்று
தவளும் பருவமது.
ஆனால்,
21வயதிலே
பலருக்கு
நீயே
பல்கலைக்கழகமானாய்.
தங்கையே………
நீ
மகத்துவமானவள்.
நின்மதியாய் துயில்கொள்.
தங்கையே
எங்கள்
துன்ப வேளைகளில்
அருமருந்தாய்,
இருட்டான வேளைகளில்
வழிகாட்டும்
ஒளிவிளக்காய்,
சோர்வான நேரங்களில்
எம்மை நெம்பித்தள்ளும்
தன்னம்பிக்கையாய்
எப்போதும் நீ இருப்பாய்.
நீ
வணக்கத்துக்குரிய
எங்கள்
குலதெய்வங்களில்
ஒன்றாக இருக்கின்றாய்.
எங்கள் ஆன்மா
இருக்கும்வரை
உனை நாங்கள்
தொழுது நிற்போம்.