பானமையில் வாழும் தமிழ் பேசும் சிங்களவர்

அம்பாறையில் அன்றிருந்த தீர்த்தவாவி இன்று “திகவாவி” பெயர் மாற்றம் கண்டு நிற்கிறது. அஃதே அழிக்கம்பையை அடுத்து உள்ள மாந்தோட்டம் என்ற கிராமம் “தொட்டம” என ஆகிவிட்டது. 

பதுளை, பொலனறுவை மாவட்டங்களின் நிர்வாக அலகின் கீழிருந்த சிங்களக் கிராமங்களையும் பிரதேச செயலர் பிரிவுகளையும் அம்பாறை மாவட்டத்துடன் ஶ்ரீலங்கா அரசு இணைத்தது. 

கரையோரத் தமிழ்,இசுலாம் கிராமங்களுடன் கூடிய நீண்ட ஒடுங்கிய சிறிய மாவட்டமாகிய அம்பாறை அளவில்  வீங்கிப் பருத்தது. 

இந்த  துர் கைங்கரியம்(Sinister Motive) மூலம் அம்பாறையில் சிங்களவர்களை  அரசு பெரும்பான்மை ஆக்கியது.

பாராளுமன்றத்தில் அம்பாறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைக்கப்பட்ட இரகசியம் இதுதான். 

இந்தக் கதையை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு தனது கருநீல நிற வாகனத்தை செலுத்தியவாறு ஆழிப்பேரலையின் மீட்பு மற்றும் உதவிப்பணிக்குச் சென்ற குழுவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். 

வாகனம் பொத்துவில் தாண்டி சின்ன உல்லைக்கும் பெரிய உல்லைக்கும் இடையே பயணித்துக் கொண்டிருந்தது. 

“அறப்போர் அரியநாயகம்” அவர்களின் மகனான அமரர் சந்திரநேரு அவர்கள் மிக எளிமையாக எல்லோருக்கும் விளங்கும் வகையில் கதை சொன்னார்.

மாலைத்தீவுக் கப்பல் ஒன்றில் 

அதிகாரியாகப் பணியாற்றிய காலத்துக் கதைகளை எங்களின் களையைப் போக்குவதற்காக சுவாரசியமாகவும் சொன்னார். 

இப்போது வாகனம் பானமை(Panama) என்ற இடத்தில் இறக்கிவிட்டது.

அங்குள்ள மக்கள் சிங்களவர்கள் போன்ற நடை உடை பாவனையில் இருந்தாலும் தமிழில் நன்றாகக் கதைதனர். ஆழமாக கதைத்த போது அங்கு இனக்கலப்பு நடைபெற்றுள்ளமை தெரிந்தது. 

திருக்கோவில் விநாயகபுரத்திலிருந்து சென்று அங்குள்ள ஒருவரைத் திருமணம் செய்து குடியேறி வாழும் மருத்துவமாது(PHM) ஒருவர் நன்றாகக் கதைதார். 

அவர் கதைக்கும் போது “பானமையில் உள்ளவர்கள் தமிழ்பேசும் சிங்களவர்கள்” எனக் கூறி மெல்லச் சிரித்தார்