கட்டகாமத்துக் கிழவி கதிர்காமம் போன
கதை மாதிரி”…எனச்
செப்பிடும் வழக்கம் செந்தமிழரெம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உண்டு.
ஆம்,
வடக்கே யாழ்ப்பாணம் முதல் கிழக்கே அம்பாறை வரையான மக்கள்
கட்டகாமம் எனும் தொல்லூரைத் தாண்டியே கதிர்காமக் கந்தனில் திருத்தலத்திற்கு யாத்திரைக்குச் செல்வதுண்டு.
ஆடிவேல் கொண்டாடப்படும் காலத்தில் இந்த மக்கள் எல்லோருமே நீண்ட வரிசை வரிசையாக வருடா வருடம் பாதயாத்திரை செல்லும் போது கதிர்காமத்துக்கு மிக அருகில் உள்ள “#கட்டகாமம்” எனும் அந்த அம்மாவின் சொந்த ஊரை ஊடறுத்துத்தான் செல்வதுண்டு.
தேனூறும் தேவார திருவாசகப் பாடல் கலை ஓதிக் கொண்டு செல்லும் ஒவ்வொரு தடவையும் கதிர்காமக் கந்தனை தரிசிக்க வேண்டுமெனும் ஆவல் அம்மாவுக்கு ஒவ்வொரு ஆண்டில் வரும் ஆடிமாத்தில் மேலோங்குவது வழமை.
ஒவ்வொரு ஆண்டும் அடுத்த ஆண்டு கதிர்காமம் சென்று கந்தனை தொழுவேன் எனச் சபதம் செய்வார்.
ஆனால் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்குத் தன்னால் எப்போதுமே போகமுடியும் எனும் எண்ணமும் கூடவே மேலோங்கி அந்தப் பயணத்தைத் தடுத்துவிடுவதும் உண்டு.
ஆதாலினால் ஒவ்வொரு தடவையும் ஆசைப்படுவார் ஆனால் ஒரு தடவை கூடப் போனதில்லை.
ஆதலினால்,
ஆசை அருமையாகச் செய்ய வேண்டிய
வேலைகளைத் தள்ளிப்போடும் மனிதர்களை நோக்கி இந்தப் பழமொழி
மட்டக்களப்புப் பேச்சு வழக்கில் வழங்கப்படுவதுண்டு.
ஆழிப்பேரலை அல்லது சுனாமி மீட்பர் குழுமத்தில் ஒருவனாக அடியேன் மீன்பாடும் தேன்னாடாகிய மட்டக்களப்பில் தடம் பதித்த எந்தனுக்கு இந்த உவமை ஊடாக இன்னுமோர் சேதி தெரிய வந்தது.
ஆசுகவி கல்லடி வேலனின் நூலினையும் அவர் வெளியிட்ட “சுதேசநாட்டியம்” பத்திரிகையில்
ஊர்ப்பெயர்களின் வரலாறுகளை வாசித்த பின்னர் உண்டான ஆர்வத்துக்கு இந்தப் பழமொழி தீனி போட்டது.
கதிர்காமத்திற்கு அருகே அடர் அடவிகளால் சூழ்ந்த “கட்டகாமம்” எனும் அருந்தமிழ்ப் பெயர் கொண்ட ஒரு தொல்லூரும் இருந்தமை/ இருப்பதுதான் அந்தச் சங்கதி.
வலிந்து காணமல் ஆக்கப்பட்ட தமிழர்களைப் போலவே வலிந்து காணமல் ஆக்கப்பட்ட ஊர்தான் “கட்டகாமம்” ஆகும்.
அலை வந்து மெல்லெனத் தாலாட்டும் எழில் கொண்ட எங்கள் மாங்கனித்தீவில் தமிழர் எம் குடிப்பரம்பல் நாளும் நாளும்
மாறிக் கொண்டே செல்வது பெருவருத்தம் தருகின்றது.
அதே நேரம் “காமம்” என முடியும் ஊர்ப்பெயர்களையும் கீழே தருகின்றேன்.
பெருத்த ஊராகிய வயாவிளான் எனும் எமது திருவூரில் “தேகாமம்” எனும் சிற்றூர் அல்லது குறிச்சி உண்டு.
மேலும் தமிழர்தாய் நிலமெங்கும் “காமம்” என முடியும் அல்லது பிற்சேர்க்கை கொண்ட பழந்தமிழ் ஊர்களை பரவலாக அறியக்கிடக்கின்றது
கொடிகாமம்- யாழ்ப்பாணம்
வீமன்காமம் – யாழ்ப்பாணம்
தேகாமம் – யாழ்ப்பாணம்
தம்பகாமம் – பளை, கிளிநொச்சி
முதலியான்காமம் – மன்னார்
அம்பகாமம் – முல்லைத்தீவு
பனங்காமம் – முல்லைத்தீவு
தம்பலகாமம் – திருக்கோணமலை
உறுகாமம் – மட்டக்களப்பு
ஊர்காமம் – மட்டக்களப்பு
இறக்காமம் – அம்பாறை
சாகாமம் – அம்பாறை
சந்தணகாமம் (கல்லோயா) – அம்பாறை
கட்டகாமம் – மொனராகலை
கதிர்காமம் – மொனராகலை