ஒரு நிகழ்ச்சியை தனிப்படுத்திப் பார்த்து தர்ம அதர்மங்களை நிர்ணயிக்க முடியாது.
பீஷ்மர் வதம்.
————————-
சிகண்டியுடன் அனைவருமே போரிடுகின்றனர். பீஷ்மரைத் தவிர. சிகண்டி பீஷ்மரைக் கொல்வேன் எனச் சபதமிட்டு இருக்கும் ஒருவன். அப்படி இருக்க அவனுடன் போரிட இயலாது என்பது பீஷ்மரின் தர்மம் என்றால், அவர் நிராயுதபாணியாக மரணிப்பதே தர்மமாகும் அல்லவா?
சந்திரவம்சத்தின் இரண்டாவது ஆள், புதன். அவர் ஆண்தன்மையும், பெண்தன்மையும் கலந்தவர்.
அடுத்து வைவஸ்வத மனு என்பவனின் மகன் இளன். இளன் வேட்டையாடிக்கொண்டு சென்றபோது ஒரு காட்டை அடைந்தான். அந்தக் காட்டுக்கு யார் வந்தாலும் பெண்ணாக மாறும்படி ஒரு சாபம் இருந்தது. அதன்படி இளன் ‘இளை’ ஆனான். புதன் இளையை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த குழந்தை புரூரவன். ஆக சந்திர குலத்தின் ஆதியே முழுஆண் / முழுப்பெண் வமிசமல்ல. அப்படி இருக்க சிகண்டியுடன் போரிடமாட்டேன் எனப் பீஷ்மர் எப்படிச் சொல்ல இயலும்?
கண்ணன் என்ன செய்திருக்கலாம்? அர்ச்சுனனை, பீஷ்மரைக் காக்க யாரும் வராதபடிக்கு பீஷ்மர் சிகண்டியைத் தனிப்படுத்தச் சொல்லியிருக்கலாம். அப்படி நடந்திருந்தால், பீஷ்மரின் அங்கங்கள் சிகண்டியின் வாளால் துண்டிக்கப்பட்டு அவர் முண்டமாகக் கிடத்தப்பட்டிருக்கலாம்.
சிகண்டியின் எதிரே ஆயுதங்களைத் துறக்கும் பீஷ்மர், அதன் பிறகு ஆயுதம் ஏந்தும் உரிமையைத் தர்மப்படி இழக்கிறார். போரில் ஆணாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிகண்டியை எதிர்த்துப் போராடததால், அவன் அறைகூவலை ஏற்காததால், அவர் வேறு எவருடனும் போரிடக் கூடாது.
இப்படிப்பட்டக் கேவலமெல்லாம் பீஷ்மருக்கு சேரவிடாமல், அர்ச்சுனன் அம்புகள் அவரை அம்புப்படுக்கையில் படுக்க வைத்தது, அவருக்கு கிருஷ்ணன் அளித்த மரியாதை ஆகும். அதை அர்ச்சுனனின் வீரம் என்று சொல்ல இயலாதுதான். ஆனால் அதர்மம் எனச் சொல்லக்கூடாது.
குருஷேத்திர யுத்தத்தை விட மிகப் பெரிய யுத்தம் பீஷ்மரின் மனதில் நடந்தது என்பதே உண்மை.
பீஷ்மரை பொறுத்தவரை அவர் அஸ்தினாபுரத்து அரசன் உத்தரவுக்கு அடிபணிய வேண்டும் . அந்த ஒரே காரணத்தினால் அவர் துரியோதனனுக்காக போரிட்டார்.
பீஷ்மரின் மரண இரகசியம் ஒன்றும் அவ்வளவு இரகசியமல்ல. சிகண்டிக்குத் தெரிந்ததுதான். கண்ணனுக்குத் தெரிந்ததுதான். சிகண்டி போருக்கு வருகிறான் என்று தெரிந்தவுடன் துரோணர் அசுவத்தாமன், கிருபர், சல்லியன், துச்சாதனன், துரியோதனன், பகதத்தன், கிருதவர்மன், பூரிசிரவசு, விகர்ணன், சுசர்மன இப்படி துரியோதனின் படையில் இருந்த எவரும் அர்ச்சுனன் பீஷ்மரை நெருங்குவதிலிருந்து தடுத்திருக்கலாம். தர்மனைச் சிறைபிடிக்க அர்ச்சுனனை விலக்கியது போல் பீஷ்மரின் மரணமான சிகண்டியையும், துரோணரின் மரணமான த்விட்டத்வீமனையும் குறிவைத்து யுத்தம் நடத்த ஆரம்பித்திருக்கலாம். அதனை துரியோதனன் செய்யவில்லை.
தர்ம சங்கடம் என்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்டால் இதை அழகாக உணர்ந்து கொள்ளலாம்.
இதற்கென ஒரு கிளைக்கதையுண்டு.. மகாபாரதப் போரின் முன்பு திரௌபதியை பீஷ்மர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார் கிருஷ்ணர். மழைபெய்திருக்கிறது. கிருஷ்ணன் திரௌபதியின் காலணிகளைக் கழட்டச் சொல்லி தன் மார்போடு அணைத்து வைத்துக் கொண்டு, உறங்க்கிக் கொண்டிருக்கும் பீஷ்மரின் கால்களைச் சிறிதும் சத்தம் செய்யாமல் தொட்டு வணங்கச் சொல்கிறார். திரௌபதியும் அதேபோல் செய்ய, திடுக்கிட்டு எழுந்த பீஷ்மர் தீர்க்கசுமங்கலி பவ என ஆசிர்வாதம் செய்கிறார். பின்னர்தான் அது திரௌபதி எனத் தெரிகிறது. பார்த்தால் மூலையில் சேறும் சகதியும் அப்பிய கிருஷ்ணன்.
கிருஷ்ணா, என் வாக்கு தர்மப்படி நான் துரியோதனனை வெல்ல வைக்க வேண்டும். இப்போது சொன்ன வாக்கின்படி பாண்டவர் அனைவரும் நெடு நாள் வாழ வைக்க வேண்டும். இரண்டில் நான் எந்த தர்மத்தைக் காப்பாற்றினாலும் இன்னொன்றை உடைத்தே ஆகவேண்டும். என்னை இப்படித் தர்ம சங்கடத்தில் மாட்டவிட்டு விட்டாயே… நீயும் இதே போல் உன் தர்மத்தை உடைக்க வேண்டியதாக ஆகட்டும் என்கிறார்.
9 ஆம் நாள் யுத்தத்தின் போது, அர்ச்சுனன் ஒரு தயக்கத்துடனேயே பீஷ்மருடன் போரிடுவதைப் பார்த்த பார்த்தசாரதி பார்த்தனிடம் உனக்குப் பதினெட்டு அத்தியாயமாக நான் உபதேசித்த கீதை வீணானது. இனியும் பீஷ்மனை நான் விடப்போவதில்லை, நானே அவரைக் கொல்கிறேன் என இறங்க்கி கையில் சுதர்சனமேந்திப் பாய்கிறார். ஆயுதம் ஏந்த மாட்டேன் என்ற அவரது வாக்கை அவர் உடைக்கிறார். பீஷ்மரும் கைகளைக் கூப்பி யாரோ ஒரு பெண் / நபும்சகன் கையால் சாவதை விட உன் கையால் என்னக் கொன்று விடு கிருஷ்ணா எனக் கைகூப்புகிறார். அவருக்குச் சட்டென்று ஞானம் பிறக்கிறது. தர்மம்தான் முக்கியம். தன்னுடைய வாக்கு அல்ல. இறைவனான கிருஷ்ணனே தர்மத்திற்காக தன் சுயவாக்கை உடைக்கிறான். நான் என்பதைப் பெரியதாக நான் நினைப்பதால்தான் என் வாக்கு என்ற அகங்காரத்தினால்தான் இத்தனை மோசங்கள் என்பதைப் புரிந்து கொள்கிறார். என் வாக்கு என்பதை விட தர்மம்தான் முக்கியம் என்கிற ஞானம் வருகிறது. இரு தர்மங்கள் ஒன்றிற்கொன்று எதிராகும்பொழுது பலருக்கும் நன்மைதரும் பொதுதர்மத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஞானம் உண்டாகிறது..
இதற்குப் பின் தான் யுதிஷ்டிரனை பீஷ்மரிடம் அனுப்புகிறான் கண்ணன். பீஷ்மரின் மனது தெளிந்து நீரோடையாய் இருக்கிறது. உங்களை எப்படிச் சாய்ப்பது என்ற கேள்விக்குப் பதில் அளிக்கிறார்.
அவரது மனதில் அது துரோகமாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவருக்குத் தெளிவு பிறந்துவிட்டது. தர்ம சங்கடம் உண்டாகவில்லை. அந்த இடத்தில் எது தர்மமோ அதைச் செய்தார்.
துரியோதனனுக்கு வேண்டுமானால் பீஷ்மர் செய்தது நம்பிக்கைத் துரோகமாகத் தோன்றலாம். ஆனால் தர்மத்தின் தெளிவு பெற்றதனால்தான் பீஷ்மர் தருமனுக்கு சிகண்டியுடன் போரிட மாட்டேன் என்பதைச் சொன்னார். போரில் மட்டும்தான் தர்மன் எதிரி, பாசறையில் பேரன்தான். அவனுக்கு எதையும் செய்யும் உரிமை பீஷ்மருக்கு உண்டு.
ஆனால் சிகண்டி அர்ச்சுனன் தேரில் உடன் வரவேண்டும் என பீஷ்மர் சொல்லவில்லை. அது கிருஷ்ணனின் திட்டம். சிகண்டியை அஸ்வத்தாமனோ, துரோணரோ, கிருபரோ சல்லியனோ மடக்கி விடாமல் இருக்க செய்த திட்டம் அது.
பீஷ்மரின் தெளிவுதான் அவரை விஷ்ணு சகஸ்ர நாமம் எழுத வைத்தது.
பீஷ்மர் கிருஷ்ணனை மரியாதையான இறப்பைக் கொடு எனக் கேட்டார். அந்த இறப்பினைக் கிருஷ்ணன் அளித்தார்.
இது பீஷ்மர் விரும்பிய மரணம் என்பதால் இதை அதர்மத்தில் சேர்க்கவே இயலாது.
-தொடரும்