மூடர் கூடாரத்தின் இறுதி மூச்சு

425

கருவறைக்குள் மூலவரை வைத்திருக்கும் கோவிலும் தாயே. தாய் மடி தேடி வரும் அனைவரையும் அணைக்க வேண்டியது கோவிலின் பொறுப்பு. ஆனால் நடப்பது என்ன?

குறிப்பிட்ட சாதியினர்தான் கர்ப்பக்கிரகத்துக்குள் போகலாம். தெய்வத்தைத் தொட்டுத் தடவிக் குளிப்பாட்டிப் பூசிப் புனஸ்கரிக்கலாம். நைவேத்தியம் படைக்கலாம்.

இன்னும் சில சாதியினர் கர்ப்பக்கிரகம் தவிர்ந்த ஏனைய கோவில் உள்வளாகத்தில் நுழைந்து கடவுளைத் தரிசிக்கலாம்.

குறிப்பிட்ட சாதியினரால் பிற்படுத்தப்பட்ட சாதியினர் கோவிலுக்குள் நுழைய முடியாது. வெளி மண்டபத்திலும் வெளிவளாகத்திலும் தவங்கிடக்க வேண்டும்.

எல்லாருக்கும் பொதுவான கடவுளைக் கும்பிட இப்படி ஒரு கீழான கட்டுப்பாட்டை விதித்த குலத்தார்தான் என்னைப் பொறுத்தவரை இழிகுலத்தார். அவர்கள்தான் சமூகத்தில்குருந்து பிற்படுத்தப்பட வேண்டியவர்கள்.

இப்படிக் கோவிலுக்குள் உள்நுழைய விடாது இறைவனுக்கும் அவனுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இடைவெளியினூடுதான் வேறு மதங்கள் புகுந்தன.

கடவுள் விடயத்தில் இவர்கள்தான், இவர்கள் செய்த வஞ்சனைதான் இவர்களால் பிற்படுத்தப்பட்ட மக்கள் வேறு மதத்தைத் தழுவக் காரணம் என்பதை அறியாமல் மதம் மாறியவர்கள் மீதும் மதம் மாற்றியவர்கள் மீதும் வெஞ்சினம் கொள்வது வடிகட்டிய மூடர்தனம்.

மதம் காக்கிறோம்; புனிதம் பேணுகின்றோம் என்று கூவும் இவர்கள் இப்போது இன்னொரு முகத்தோல் பூணிவிட்டார்கள்.

நாள் முழுக்க கருவறையில் இருக்கும் மூலவர்,  சாதிச்சுவரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தன்னைத் தேடி வந்த பக்தர்களைக் காண உற்சவ மூர்த்தியாக ஊர்வலம் வருவதுதான் தேரும் திருவிழாவும்.

தேர் வடத்தைத் தொடும் ஒவ்வொருத்தனும் கடவுளைத் தொட்டது போல பரவசம் அடைவான். அந்தக் குறைந்த பட்ச சந்தோஷத்தைக் கூட கொடுக்கக் கூட விரும்பவில்லை இந்த மோட்டுக் குடியினர்.

தாயகத்தில் தென்மராட்சியில்  ஆலயம் ஒன்றில், உழவு இயந்திரம் கொண்டு தேர் இழுக்கப்பட்டுள்ளது. கண்டவன் எல்லாம் வடம் பிடிக்கிறான்; அதனால் புனிதம் கெடுகிறது எனும் மன அழுக்காளர்களின் முடிவு  எனக் களத்தில்  தகவல் கசிவு. மா மேதைகளே.. என்னே ஒரு பேதைமைத்தனம்.

இதன் மூலம் இவர்கள் தேரை இழுத்துத் தெருவில் விட்டதோடு, கடவுளைக் காலால் மிதிக்கின்றார்கள். மட்டுமல்லாமல் இந்துமத காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் இவர்களே இந்த மதம் உலகை விட்டு மறைய முதல் வினையாற்றி உள்ளார்கள்..