அறிவியல் மைல்கல் – தாவரவியலின் தந்தை

470

அறிஞர் அரிஸ்டாட்டில் பிளாட்டோவின் சீடர் என்றால் தியோப்ராஸ்டஸ் அரிஸ்டாட்டிலின் சீடர். குரு வம்சத்தில் பிளாட்டோவின் பேரர். குரு அரிஸ்டாட்டிலும், சீடர் தியோப்ராஸ்டஸம் சேர்ந்து ஏதென்ஸின் புகழ்பெற்ற லைசியம் தத்துவக் கல்லூரியை நிறுவினார்கள்.

சீடரே கல்லூரித் தலைவராக பல காலம் விளங்கினார். திறமைகள் சில நேரம் இருக்கும் இடத்தாலே வெளிக்கொணரப்படுகின்றன – குன்றின் உச்சிக்கு போன ஜோதி போல. லைசியம் கல்லூரித் தலைவராக தியோப்ராஸ்டஸ் பணியாற்றிய காலத்தில் இரு முக்கிய நூல்களை வெளியிட்டார்:
1) தாவரங்களின் இயற்கை வரலாறு
2) தாவரங்களின் வளர்ச்சிக்கான காரணங்கள்

அறிஞர் வந்தார் – அறிவியல் மைல்கல் -03

இந்த இரண்டும் அடுத்து 1500 ஆண்டுகளுக்கு தாவரவியலின் அசைக்க முடியாத மேற்கோள் நூல்களாகத் திகழ்ந்தன. இன்று பதிப்பித்து, நாளை பரணில் தூங்கும் நூல்களை எழுதியவர்களுக்கெல்லாம் இந்த சாதனை – ஓர் அமில ஊற்று! ‘கர்வப்படாதே சகோதரா ‘ என்று அறிவுரை சொல்லும் கானா பாட்டு!!

15 நூற்றாண்டுகள் கடந்த பின்பும் இவை காஸாவின் தியோடர் என்பவரால் ஆராதனையோடு மொழி பெயர்க்கப்பட்டன. வாசகர் வட்டம் இன்னும் அதிகரித்து, காலத்தை வென்று சாதனை படைத்தன.

இந்த இருநூல்களிலும் தாவரவியலின் அத்தனை அடிப்படைகளும்அழகாக அலசப்பட்டிருந்தன. 500க்கும் மேற்பட்ட தாவரங்களின் அடையாளங்கள்.. பொருத்தமாய் அன்றாட கிரேக்க சொலவடைகளில் இருந்து அவர் சூட்டிய பெயர்கள்.. செடிகொடிகளின் அங்க அமைவுகள், உள்கட்டமைப்பு, விதைகளின் வீரிய முளைப்பு வெட்டி ஒட்டி வளர்த்தலின் சூட்சுமம் விவசாயம், மகசூல் செடிகளைத் தாக்கும் நோய்கள் மனித நோய்களுக்கு மருந்தான செடிகள்..

வானத்தைப் பார்த்தேன்


இப்படி இந்த அறிவியல் பிரிவின் அகல-நீளங்களை அடையாளம் காட்டி இருந்தார் தியோப்ராஸ்டஸ். பனைமரங்களின் பூக்களைக் கண்டு தாவரங்களிலும் ஆண்-பெண் உண்டு என அன்றே சொன்னவர் இவர். அதை ஆராய்ச்சி மூலம் நிருபணம் செய்தவர் 1700 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த ரூடோல்ப் காமாரியஸ் என்பவர். ஆம் — கவனித்து பதிவதே அறிவியலின் ஆரம்பம். ஆராய்ச்சி, நிரூபணங்கள் இவை மிகப் பின்னால் வரும்; வராமலும் போகக்கூடும்.

கவனி..கவனி.. கவனமாய் எதையும் கவனி.. இந்தத் தாரகமந்திரத்தால் குருவின் கடற்குள அறிவூற்று போலவே சீடருக்கும் லைசியக் கல்லூரியின் தோட்டம் களமாய் அமைந்தது. உலகின் முதல் பொட்டானிக்கல் தோட்டம்?

சீராட்டி வளர்த்த செடிகளின் ஞானம் இந்தத் தோட்டம் தந்தது. மற்றவை சக சீடர் அலெக்ஸாண்டர் செ(வெ)ன்ற போர்முனைகளுக்குச் சென்றுவந்த வீரர்கள் தந்தது. அருகில் இருந்ததையும், அருகாமையில் இருந்து தேடி வந்ததையும் ஒருங்கே ஆராய்ந்து தியோப்ராஸ்டஸ் எழுதிய இந்த அறிவுக்காவியங்கள் காலம் நமக்கு அவர் மூலம் அளித்த பொக்கிஷ ஆரம்பங்கள். அவர் ஆரம்பித்த தாவர பரம்பரைக் கிளை (டாக்ஸானமி) இன்று எத்தனை எத்தனை பரந்து விரிந்து …

அதானால்தான் 18ம் நூற்றாண்டின் டாக்ஸானமி ஜாம்பவான் கரோலஸ் லின்னேயஸ் நம் தியோப்ரஸ்டஸை , ‘தாவரவியலின் தந்தை’ எனப் பொருத்தமாய் புகழாரம் சூட்டி அழைத்தார்.