பசிக்கு உணவு

ஒரு தெருவில் நாயும் பூனையும் சந்திந்த்துக் கொண்டன. நல விசாரிப்புகளுப்பின் நாய் பூனையைப் பார்த்துக் கேட்டது “ பூனையாரே! என்ன இந்தப் பக்கம்?”. அதற்கு, பக்கத்து தெருவில் ஒரு திருமணம் நடக்கிறது; அங்கே போனால் பந்தியிலிருந்து எடுத்த இலைகளில் இருக்கும் உணவை உண்ணலாம்; அதுதான் போகிறேன் என்றது பூனை. நீயும் வா… நாவுக்கு ருசியாகச் சாப்பிடலாம் என்றும் அழைத்தது.

நாய்க்குக் கோபம் வந்தது. எச்சில் உணவை உண்ண என்னை அழைக்கிறாயா என்று கத்தியது. என் எஜமான் எனக்கு மரியாதையாக தட்டில் உணவு வைத்திருப்பார். நான் போய் உண்கிறேன் என்று சொன்ன நாய் பூனைக்கு போய் வருகிறேன் என்றுகூடச் சொல்லாமல் போனது.

வீட்டை அடைந்ததும் தன் இருப்பிடத்திலிருந்த தட்டை ஆவலுடன் பார்த்தது. தட்டு வெறுமையாக இருந்தது. வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. எஜமான் வெளியே சென்று விட்டார் போலும்.. சற்று நேரத்தில் வந்து விடுவார்.. வயிறாறச் சாப்பிடலாம் என்று ஆசையுடன் காத்திருந்தது நாய்.

நேரம்தான் போனதே தவிர எஜமானைக் காணவில்லை. பசியோ அதிகமானது. பக்கத்துத் தெருக் கல்யாணச் சாப்பாட்டு மணம் வேறு பசியை கூட்ட நாயின் வயிற்றை பசி விராண்டியது. உயிர் போகும் அளவுக்கு கொலைப்பசி கிளம்பியதும் நாய் பக்கத்துத் தெருவுக்கு ஓட்டம் பிடித்தது.

திருமண மண்டபத்தின் பின்னால் இலைகள் குவிந்திருந்தன. சில இலைகளில் உணவுகள் இருந்தன. அவ்வுணவை நாயார் உண்ணத் தொடங்கினார். ஏற்கனவே கொலைப்பசி.. இதில் உணவின் சுவை வேறு இன்னும் உண்ணச் சொன்னது. நாயார் வயிறு புடைக்க உண்டார்.

உண்டு விட்டு வீட்டுக்கு திரும்பலாம் என்று எண்ணி நிமிர்ந்தால் பூனையார் புன்னகைத்தபடி நின்றார். பூனையாரின் முகத்தை பார்க்க முடியாத நாயார் தலை குனிந்தார். பூனையார் கம்பீரமான குரலில் சொன்னார்.. நாயாரே… வெட்கம் வேண்டாம்.. பசியின் கொடுமை நீ அறிந்திருக்கவில்லை.. அதனால் உணவின் அருமை உனக்குத் தெரியவில்லை.. இப்போது இரண்டையும் நீ அனுபவித்து அறிந்து கொண்டாய். கற்ற மகிழ்வுடன் நிமிர்ந்து நட.. எச்சில் உணவு, ருசியில்லாத உணவு என்று பழிப்போர் நெளியும் வண்ணம் ராஜ நடை போடு..

இதைக் கேட்டதும் நாயார் பூனையாரின் தோள்களில் கை போட்டபடி கெத்தோடு நடக்கத் துவங்கினார்.