மானிடம்

649

“அரிது அரிது மானிடப் பிறவி அரிது”. எவ்வளவு அற்புதமான வரிகள். இறைவனின் படைப்புக்களில் மிகவும் சிறந்த படைப்பு. ஆறாம் அறிவு கொண்டவர். தாயின் வயிற்றில் கருவாகி “உருவம் பெற்றுப்” பத்து மாதங்களின் பின் அழகான பரந்த பூமியில் இறைவனின் குழந்தையாக பிறக்கின்றோம்.

அழுவதைத் தவிர எதுவும் அறியாதவராக இருந்து; அம்மாவினால் “தந்தை” முதல்கொண்டு பல உறவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு; ஒவ்வொரு நாளும் பல உருவங்கள், குரல்களைக் கேட்டு பாச மழையில் இன்புறுகிறோம்.

சிரிப்பு, அன்பு, பாசம், அழுகை என நாட்கள் போக தவழ்ந்து, நடந்து, கதைத்து, நண்பர்கள், உறவுகள், என ஆடிப் பாடி மகிழ்ந்து வாழ்கிறோம்.

கல்வி அறிவைப் பெற பள்ளி செல்கிறோம்; எமது வாழ்க்கைப் பயணத்தை அங்கிருந்து ஆரம்பிக்கிறோம். கற்றல் என்னும் பொறுப்பு வந்தடைகிறது. சக தோழர்களுடன் எத்தனையோ விடயங்களை கதைத்து, செய்து, விளையாடி, படித்து மகிழ்கிறோம். இது போன்று எத்தனையோ ஆயிரம் சம்பவங்கள். பிறருக்கு தீங்கில்லா குழப்படிகள் செய்ய, அவற்றுக்கு கண்டிக்கப்பட்டு அன்பாக வளர்க்கப்படுகிறோம். குருவினால் கற்பிக்கப்பட்டு பல வகையான ஆற்றலை பெறுகிறோம்.

விடலைப் பருவம் அடையும் போது எமது சிந்தனை, செயல்களில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. பலநல்லது, கெட்டவைகளை அறிகிறோம்; பாக்கிறோம்; பழகிறோம். 
போட்டி, பொறாமை, எரிச்சல், பகை, அன்பு, பாசம், நீதி, நியாயம், ஆசை, கல்வி , அறிவு மற்றும் பற்பல திறமைகள், சிந்தனைகள் என பலவித குணாதிசயங்கள் கொண்டு அடுத்த கட்டம் நகர்கிறோம்.

அடுத்த கட்டத்துக்கு நகரும் நாங்கள், மண் , பொன், பணம், பெண், புகழ், பதவி, கௌரவம், தொண்டு, துறவு, இன்னும் பலவற்றை நாடுகிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்களுடன் வாழ்கிறோம். பிறந்தவர் இறப்பதில்லை என்பதுபோல் நடந்து கொள்கிறோம். தங்கள் அறிவைக் கொண்டு நல்லது, கெட்டது என அனைத்தையும் செய்கிறார்கள். யாராவது ஒரு மனிதர் தான் இறவா வரம் வாங்கி வந்துள்ளேன்; எதையும் செய்வேன் என சொல்ல முடியுமா? இதுவரை இறப்பில்லாதவர் எவருமில்லை. இதை தெரிந்தும் கற்பனை செய்து பாக்க முடியாத அளவு செயல்களை செய்கிறோம் ஏன்? பதில் இறைவனிடம்தான் உள்ளது. எப்போது? எங்கே? எப்படி? யாருக்கு? பிறப்போம் என தெரியாது. அதேபோல் எப்போது? எங்கே? எப்படி? இறப்போம் என எவருக்கும் தெரியாது.

பிறந்து, இறக்கும் இடைப்பட்ட காலத்தில் நல்ல மனிதர்களாக வாழ்ந்து, மனிதப் பிறப்பின் பயனை அடைவோமாக.

இது ஒரு முன்னுரை. மனிதர்கள் குறித்து பல தொடர்கள் வரும் என்பதை அன்புடன் தெரியப்படுத்துகிறேன்.

அன்புடன்.வ.பொ.சு.
—மாரிட்டி மண்ணின் மைந்தன்