நாளொரு குறள் 11

287

நாள் : 11 
பால் : அறத்துப்பால் 
அதிகாரம் : வான் சிறப்பு 
செய்யுள் : 1 

வானின் றுலகம் வழங்கி வருதலாற்
றானமிழ்த மென்றுணரற் பாற்று.
 

அமிழ்தத்தின் குணம் என்ன? 

வானில் இருப்பது. அழியாத்தன்மையைத் தருவது. 

மழையும் அப்படித்தான். வானிலிருந்து வருகிறது. உலகின் உயிர்கள் அத்தனையையும் அழியாமல் பெருகவைத்துக் காக்கிறது. 

இதனால் மழையே அமிர்தமென உணர்ந்து கொள்ள வேண்டும். 

மழையினாலேயே உலகில் உயிர்கள் நீடித்திருக்கின்றன. உயிர் அழிவின் முதல் அறிகுறி மழையின்மையாகவே இருக்கும். மழை இருக்கும் வரை உலகம் உயிர்களால் நிரம்பியிருக்கும். 

இன்றும் அறிவியல் நிலவிலும் செவ்வாயிலும் இன்னும் பிற கோள்களில் உயிர்களைத் தேட நீரைத் தேடுகிறது. 2000 வருடங்களுக்கு முன்னரே உயிருக்கும் நீருக்கும் இருக்கும் பிணைப்பை வள்ளுவன் சொல்லி விட்டான்.