அனைவருக்கும் இனிய புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள். வயவன் இணையம் ஆண்டு ஒன்றைக் கடந்து தன் பயணத்தைத் தொடர்கிறது.
என்ன நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நோக்கி நிதானமாகப் பயணித்துக்கொண்டிருக்கிறது.
அதே நேரம் இளைப்பாறும் இடங்களிலும் ஏதோ ஒன்றை உருவாக்கிச் செல்ல வயவன் இணையம் தவறவில்லை.
கட்டமைக்கப்பட்ட ஒழுங்கின் கீழ் வயவையூரின் மறுமலர்வு முன்னெடுக்கப்பட்டு வருவதால், வயவன் இணையத்தின் பார்வை தமிழர் தாயகங்கள் நோக்கி திரும்பியது.
சொல்லிக்கொள்ளும்படி ஒரு சில வாழ்வாதார உதவிகளைச் சொல்லாமல் செய்த வயவன் இணையம் இந்த ஆண்டு இன்னொரு தன்னார்வத் தொண்டாளர் குலாமுடன் கை கோர்த்து வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கத் அணியமாகி உள்ளது. அத்திட்டம் தளிர் விட்டதும் வாசக அன்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.
உள்ளூரில் செய்ய ஏதும் இல்லாமல் வெளியூருக்குச் செய்கிறார்கள் என்ற எண்ணம் மேலிடக் கூடும். ஊருக்குச் செய்ய வேண்டியதொன்றும் உண்டு.
ஆம்.. இலங்கையின் முதல் புதினப்பத்திரிகையாம் சுதேச நாட்டியம். எமது வயவையூரிலிருந்தே வெளியாகியது. அதே போல் யாழ்ப்பாண வரலாற்றைப் பதிவு செய்த யாழ்ப்பாண வைபவ கெளமுதி வயவை மண்ணில் முகிழ்ந்த முத்தே.
அத்தகு பெருமை மிகு வயவையூர், தொழிலும், கமமும், கலையும் தமிழும் செழித்து வளர்ந்த எங்கள் வயவை மண், காலச்சாலையில் தன் பாதச்சுவடுகளை அழுத்தமாகப் பதித்த செம்மண், இப்போ மீண்டும் தன் பாதங்களைப் பதிக்க வேண்டிய தருணத்திலும் உள்ளது.
எனவே, பழைய பெருமையைப் புதுப்பிக்கும் பக்கமும் வயவன் இணையம் திரும்ப விரும்புகிறது.
வயவர்கள் அனைவரும் ஒத்துழைக்காமல் இது சாத்தியமில்லை. ஒவ்வொரு வயவனும் வயவையூர் பற்றிய தம் மனவோட்டத்தை எழுத்தாகவோ, ஒலிப்பதிவு செய்தோ எமக்கனுப்பினால், அவற்றைத் தொகுத்து நூலாக்கி ஆவணப்படுத்தும் பணியை வயவன் இணையம் முன்னெடுக்க முன்வந்துள்ளது.
எங்கள் வரலாறை நாங்கள் பதிவு செய்யாததன் விளைவையும், எங்கள் வரலாற்றை வேற்றினம் பதிவு செய்ய இடங்கொடுத்து, எம் வரலாறு சிதைந்த சித்திரவதையும் இன்றளவும் நாங்கள் அனுபவித்து வருகிறோம்.
யாழ்ப்பாண வைபவ மாலையின் பின்னான வயவையுன் வரலாற்றை இப்போதே பதிவு செய்ய வேண்டும். இன்னும் சில ஆண்டுகள் கடந்தால் எமதூரின் வரலாற்றுப் பக்கங்கள் கொஞ்சம் காணாமல் போய்விடும்.
எனவே அனைவருன் ஒன்றிணைந்து எமதூரின் வரலாற்றைப் பதிவு செய்வோம் வாருங்கள்.