பொங்கலும் பலகாரங்களும் உண்டுவிட்டு, கொண்டாட்டக் களைப்புத் தீர இளைப்பாறிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், சொந்தங்களும், நண்பர்களும், அன்பர்களும் வாழ்த்துகளை வழங்கிய வண்ணம் இருப்பர்.
“பொங்கல் வாழ்த்து”, “புத்தாண்டு வாழ்த்து”, “தமிழர் திருநாள் வாழ்த்து” என மூவகைகளை வாழ்த்துகள் எம்மை வந்தடைந்திருக்கும்.
காலங்காலமாகப் பொங்கிப் படைத்து செய்நன்றி பாராட்டும் பண்பாட்டு விழுமியத்தில் திளைத்தவர்கள் பொங்கலை வாழ்த்தாக்குகின்றனர்.
அது வெறும் பொங்கல் விழாவல்ல.. தமிழர் புத்தாண்டுப் பிறப்பும் அன்றுதான் என்று சங்கப்படைப்புகள், கல்வெட்டுகள், ஆய்வுகள் மூலம் தமிழாய்வாளர்கள் உறுதிப்படுத்தியதை ஏற்றுக் கொண்டவர்கள் புத்தாண்டையும் வாழ்த்துடன் கலந்து வழங்குகின்றனர்.
பொங்கலாகவும் புத்தாண்டாகவும் கொண்டாடுவோம் என்போரும், எதுக்கு வம்பு.. ஒரு முடிவுக்கு வரும் வரை சமாளிப்போம் என்போரும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் என்கிறார்கள்.
மகிழ்வைத் தருவது வாழ்த்தின் குணம் என்றாலும் இந்நாளில் இம்மூவகை வாழ்த்துகளையும் பெறும் போது நெஞ்சு கனமாகிறது.
தமிழ் சார் கொண்டாட்டம் ஒன்றில் தமிழர்கள் கருத்தொன்றாக இருக்க முடியவில்லையே.. எனும் வருத்தம் பொங்கல் முடிந்த பின் மிஞ்சுகிறது.
விருந்தோம்பிச் சுற்றம்தழாலும் பண்பாட்டைப் பேண பண்டிகைக் கொண்டாடங்கள் தேவை எனும் தமிழ்ப் பண்பாட்டு மரபு முக்கிய பண்டிகைக் கொண்டாட்டதின் போது தன் வலுவை இழக்கிறதே எனும் போதும் தமிழர் அரசின் தேவையை உணர முடிகிறது..