மாங்கனித்தீவில் முதலாவது மருத்துவக் கல்லூரியை நிறுவியவர்.
நிறுவியதுடன் நின்றுவிடாது தானே மருத்துவ விஞ்ஞானத்தையும் விரித்துரைத்தவர்.
யாழ் வட்டுக்கோட்டையில் அந்தக் காலத்தில் இருந்த வளங்களைக் கொண்டு ‘கொட்டகை’ ஒன்றில் மருத்துவக் கல்லூரியினை அமைத்தார்.
வேதனைகளை வெல்லும் சாதனைதனை எம்மவருக்குக் கற்பிக்க சோதனைகள் பல கடந்து தமிழ்மண்ணில் நடந்தார்.
பாட்டிவைத்தியம்,கைவைத்தியம், பச்சிலை வைத்தியம், சித்தவைத்தியம், பரியாரிமாரின் பாரம்பரியவைத்தியம் போன்றன எம் மண்ணில் கோலோச்சிய காலத்தில் புதுமை புகுத்தியவர் டாக்டர் கிரீன் சாமுவேல்.
அவர் எம் யாழ் மண்ணில் தன் பொற்தடம் பதித்த 18 ஆம் நூற்றாண்டு காலத்தில், பரம்பரை பரம்பரையாக வந்த வைத்திய முறைகளும் குருகுலக்கல்வி, திண்ணைப்பள்ளிகள் மூலமும் தொடரப்பட்டுக் கொண்டிருந்தன.
தமிழ்ச் சித்தர்களால் அருளப்பட்ட சித்த வைத்தியம் போன்றவை போதிக்கப்பட்ட தமிழ் மண்ணில் ஆங்கில மருத்துவக் கல்லூரியை நிறுவிய மருத்துவர் இவர்.
நோய்கள் ஆண்டவன் மனிதர்கள் மீது பெருங்கோபம் {Wrath of God} கொள்வதால் வருவதாக நம்பிக்கை கொண்டிருந்த காலத்தில் அந்த மூட நம்பிக்கையைத் தனியொருவனாக நின்று தகர்த்தவர்.
வட்டுக்கோட்டையில் இவர் அமைத்த மருத்துவக் கல்லூரி இன்று இல்லையெனினும் அவர் ஏற்றிய பேரொளி மருத்துவ ஞானவொளிதனை வீசிக் கொண்டே இருக்கிறது.
அமெரிக்க மிஷனரியின்(American Ceylon Mission)நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தமிழ் மண்ணில் தடம் பதித்த இவர் ஆழமான தடத்தை எம் வரலாற்றுப் பெருவெளியில் விட்டுச் சென்று உள்ளார்.
எம் முந்தையருக்கு தாய்மொழியில் மருத்துவம் கற்பிக்கும் நோக்கில் தமிழை ஐயம் திரிபறக் கற்றார்.
தமிழை இலக்கண நுட்பங்களுடன் கற்றவருக்கு மீண்டும் ஒரு சவால் காத்திருந்தது.
மருத்துவக் கலைச்சொற்கள் தமிழில் குறைவாகக் காணப்பட்டதால் அவற்றையும் உருவாக்க வேண்டியிருந்தது.
கலைச்சொற்கள் உருவாக்கப்பட்ட சமகாலத்தில் மருத்துவ விஞ்ஞானப் பொத்தகங்களை தமிழாக்கம் செய்தார்.
விமானி ஒருவன் விமான ஓடுபாதையையும் தானே அமைத்து விமானத்தையும் செய்து விண் ஏகுவது போன்றதோர் செயற்கரிய செயலினைப் போலவே அமெரிக்காவில் அவதரித்த அந்த உத்தமரின் அருஞ்செயல் எம் மண்ணில் இருந்ததெனலாம்.
மாங்கனித்தீவின் மூவின மக்களுக்கும் மகத்தான சேவை புரிந்து பிறவி பயனை அடைந்துள்ளார் எனக் கூறின் மிகையாகாது.
பெரும் சிரமங்கள் கடந்தும் இன்றும் மானிப்பாயில் அவர் அமைத்த கீரீன் வைத்தியசாலையை இயங்கி வருகிறது.