ஏணை – பனிப் புலத்தில் ஈழத்தமிழர்

644

“ ஒரு திரையிடலுக்குப் பின்னர் அரங்கை விட்டு வெளியேற மனமின்றி அந்தப் படைப்பைக் குறித்துப் பார்வையாளர்கள் ஆங்காங்கே கூடிப்பேசி அசைபோட்டுப் கொண்டு நிற்கிறார்கள் என்றால் அந்தப்படைப்பு பார்வையாளர்களை ஏதோ ஒரு வகையில் பாதித்திருக்கிறது என்றுதான் அர்த்தம், அதனை ஒரு வகையில் அதன் வெற்றியாகவும் கொள்ளலாம்” இப்படித்தான் அஜந்தனின் இயக்கத்தில் பிரான்சில் இருந்து வெளியாகியிருக்கும் ‘ஏணை’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியினை நாம் பார்வையிட்டபின்னர் கலைத்துறை அனுபவம் மிக்க பரா அண்ணர் என்னிடம் சொன்னார்.

புலம் பெயர் நம்வாழ்வைப் பேசுகின்ற, நம் கடந்தகால வாழ்வின் நினைவுகளைக் கிளறிவிடுகின்ற அட! இது நம்ம கதை என்று பார்வையாளனை அவன் வாழ்வோடு பிணைத்துவிடுகின்ற படமொன்றை இன்று பார்த்தேன். நமது வாழ்வனுபவமாகவோ போகிற போக்கில் நாம் காண்கின்ற விடயங்களை திரையில் காட்சிகளாக விரிந்தன. பார்வையாளர்களின் வாழ்வோடு ஏதோவொரு வகையில் தொடர்பும் நெருக்கமும் இருந்ததனால் திரைப்படம் என்பதை மறந்து பாத்திரங்களோடும் சம்பவங்ளோடும் தம்மை இணைத்துப் பார்வையார்கள் ஒன்றிப்போயினர்.

வீடும், நாடும் உறவும் இழந்து உயிர்ப்பிச்சை தேடி அந்நிய நாட்டில் அடைக்லம் தேடி, முந்தி ஓடிவந்தவன் பிந்தி வந்த தன் இனத்தானேயே ‘விசா இல்லாத அகதி ‘ என அவமானப்படுத்தும் போது, தன் இனத்தாலேயே சுரண்டப்படும் போது குண்டடியில் உயிர்பிழைத்து வந்தவன் சொல்லடியில் மீண்டும் வதைப்படுகின்றான். அட இவ்வளவு மோசமாகவா நாம் இருக்கின்றோம்? சாட்டையால் விளாசுவதுபோன்ற கதையோடு இயக்குனர் அஜந்தன்!
இது கனவுகளை விதைக்கிற படம் அல்ல, இதுதான் உன் வாழ்க்கை எனப் புலம்பெயர் தமிழனுக்கு உணர்த்துகின்ற எதார்த்த படம்!

பாத்திரத்தேர்வும் தொய்வில்லாமல் கதைசொன்ன பாங்கும், இது நம்வர் கதை என்ற உணர்வும் சில குறைகளையும் பொறுத்துக் கொள்ளும் மனநிலையை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.

மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் இனிமையான இரண்டுபாடல்கள், கவிதைபோலக் காதலுமுண்டு. பாவங்களை அலாதியாக வெளிப்படுத்துகின்ற அழகான நாயகி ஒருவரும் ஈழத்துச் சினிமாவுக்குக் கிடைத்திருக்கிறார்.

புலம்பெயர்ந்த பல்வேறு நெருக்குதல் மிக்க வாழ்வில் ஒருகதையை திரைப்படமாக வெளிக்கொண்டுவருவதற்குப் பின்னால் பல சவால்களும் வலிகளும் உண்டென்பதை நாமறிவோம்! ஆயினும் எல்லையற்ற திரைத்துறை ஆர்வம் கடின உழைப்பினால் இவ்வாறான படைப்புகளை நம்மவர்கள் கொண்டுவருகின்றனர். அவற்றை வளர்த்தெடுப்பது நமது கடமை!

ஏணை திரைப்படம் நம் நினைவுகளைத் தாலாட்டும்! ஈழத்திரைக்கொரு பொன்குஞ்சு!

-மோகனதாசன் வினாசித்தம்பி-