வயவைக்குப் பெருமை சேர்த்த பிரான்சு வாழ் தமிழன்

441

பிரான்சு மண்ணில் வேறு மண்ணிலிருந்து வந்தவர்களின் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டு போவதாக ஒரு மனவோட்டம் உண்டு. அதனை மெய்ப்பிப்பது போல உதை பந்தாட்ட உலகக் கிண்ணம் வெல்லக் காரணமானவர்கள் வேறு நாடுகளிலிருந்து பிரான்சில் குடியேறியோரே.

அதே போல் இம்மாதம் வெளியான உயர் தரத் தேர்வுப் பெறுபேறுகளின் படி பல்கலைக்கழகம் தேர்வானோரில் தமிழர்கள் ஆதிக்கம் வழக்கம் போல அதிகமாக உள்ளது. ஆண்டு தோறும் கல்வி மேம்பாட்டில் தமிழரின் உயர்வு வீதம் அதிகரித்துச் செல்வதாகவும் புள்ளி விபரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இதை எண்ணி தமிழனாகப் பெருமை கொள்ளும் அதே வேளை வயவையூரானாகப் பெருமை கொள்ளத்தக்க விடயம் ஒன்று இவ்வாண்டு நடந்தேறியுள்ளது.

வயாவிளான் தெற்கு வரப்புலத்தில் வேர்கொண்டு பிரான்சில் வாசனை செய்யும் கல்விமகன் இவ்வாண்டு உயர் தரத் தேர்வில் பிரான்சு மட்டத்தில் சிறப்பான பெறுபேறைப் பெற்று, பிரான்சு சனாதிபதியினால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

வயாவிளானைச் சேர்ந்தவர் இத்தகு சிறப்பினைப் பெற்றுள்ளார் என்ற மகிழ்வுடன் மனதார அவரை வாழ்த்துவோம். மண் பயனுற அவர் பயணம் அமைய வேண்டுமென வேண்டுவோம்.