கவிதை எழுதுவது எப்படி – 06 (படித்ததில் பிடித்தது)

626

எனக்குத் தெரிந்த நண்பர் ரொம்ப பிரயத்தனப்பட்டு கவிதை எழுத முற்பட்டார். ஆனால் அவரால் முடியவில்லை.. அவருக்கு கற்பனையே தோன்றவில்லை.. அவரிடம் ஒரு மரத்தைப் பார்த்து என்ன தெரிகிறது என்று கேட்டால், மரம், கிளைகள், மலர்கள், இலைகள் ஆகியவை மட்டுமே தெரிகிறது என்கிறார்… கவிஞன் என்பவன் எல்லாவற்றையும் கற்பனை செய்தாகவேண்டுமா? இல்லை. வார்த்தைகளை அடக்கி எழுதத் தெரிந்தவன் கவிஞன்.. அவ்வளவே.. பிறகு நான் சொன்னேன். அந்த மரத்தில் காம்பொடிந்து இலைகள் விழுகின்றன, மலர்களின் சோம்பல் முறிந்து புத்துணர்ச்சி தருகின்றன. வண்டுகளின் காதலில் தேன் ஒழுகிக் கொண்டிருக்கின்றன. காற்றோடு கலந்து காதால் அறியா ஒரு பாடலை அந்த மரமே பாடிக் கொண்டிருக்கிறது என்று….. என்னை விட நல்ல கவிஞன் அதை இன்னும் கவனித்திருக்கக் கூடுமல்லவா…

சரி. இப்படிப்பட்டவர்களை எப்படி தயார்படுத்துவது? கவிதைக்குள் அலங்காரப்படுத்தத் தெரியாதவரை எப்படி உபயோகப்படுத்தலாம். அவர் கண்ட காட்சியைக் கவிதைப்படுத்தச் சொல்லலாமே! உங்களுக்கு எதுவுமே தோணாவிடில் நீங்கள் காண்பவற்றை காட்சிப்படுத்தி கவிதைபடுத்துங்கள்… அது முதல் அடியாக இருக்கும்…

எங்கள் வீட்டுப் பகுதியில் இரவு ஒரு ஆவி நடமாடுவதாக வதந்தி பரவியது. எனக்குத் தெரிந்து ஒன்றுமே இல்லை. வெறும் நாய்கள் தான் குலைத்துக் கொண்டு இருக்கும். இதை எப்படி கவிதை ஆக்கலாம்? அந்த இடத்தில் என்ன என்ன தோன்றியது.??

இரவு நேரத்தில் ஆவிகள்
உலாவுகின்றன
நாய்கள் குலைக்கின்றன,
மக்கள் பீதியில் இருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒரு கவிதையா என்று கேலியாக பேசவேண்டாம்.. ஏனெனில் இது முதல் அடி இது ஒரு காட்சி,. அவ்வளவே. இதில் கரு இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் அந்த காட்சியை மக்கள் நினைக்கும் வகையில் செய்யவேண்டும். அதில் தான் கவிஞனின் திறமை இருக்கிறது, மேலும் அந்த காட்சியில் என்னென்ன இருக்கின்றது?

இரவு நேரத்தில் ஆவிகள்
உலாவிறதாம்.
ஊருக்குள் வதந்தி
நாய்கள் மட்டுமே நடமாடுகின்றன.
மக்கள் எவரும் தலை காட்டவில்லை
ஒரே பீதி.

மேலும் அந்த காட்சியில் வேறு எது இருந்தாலும் இடலாம்… பெரும்பாலும் கவிதையை சுருக்குவதில் நம் கவனம் இருக்கவேண்டும்.. தரம் கெடக்கூடாது…. சற்றே மாற்றியமைத்துப் பார்ப்போமா?

இரவு நேரத்தில்
ஆவிகள் உலாவுவதால்
நாய்கள் குலைக்கின்றன.
ஊர் அடங்கியிருக்கிறது.

இன்னும் கவிதை வடிவம் தரவில்லை. எனினும் கருவை சுற்றீ வார்த்தைகளை சுருக்கிவிட்டோம்… ஏதேனும் கருத்து சொல்லுவதைப் போல இருக்க வேண்டும். அதேசமயம் “நாய்கள் குலைக்கின்றன” என்பது பழைய வாக்கியம். சற்று மாற்றியமைத்தால் ” நாய்கள் ஓலமிடுகின்றன ” என்று வரும்… அதைப் பொருத்திப் பார்த்தால்,

இரவு நேர
ஆவிகளின் உலாவலில்
ஊர் அடங்கிப் போகிறது
அங்கங்கே நாய்களின்
ஓலங்கள் மட்டும்
அடங்குவதேயில்லை. 

இது உங்களுக்கு கவிதையாகத் தெரிந்தால் நீங்கள் எழுதுங்கள். ஒருவிஷயம் கவனிக்கவேண்டும். இதில் ஆவிகள் உலாவுவதை நியாயப்படுத்துவதாகத் தெரியும். ஆனால் நாய்கள் ஓலங்கள் மூலம் அவை பொய் என்ற மறைமுக செய்தி அடங்கியிருப்பதை உணரவேண்டும்.

கண்ணால் கண்டவற்றை கவிதை படுத்துங்கள்… கற்பனை அவசியமில்லை.. இதற்கு மேலும் உதாரணங்கள் அடுத்த பாகத்தில்.. இன்னொருவரின் கவிதையோடு