தமிழில் சந்தி இலக்கணம் – 2 – தமிழ் எழுத்துக்களும் அதன் வகைகளும்:

1234

முதல் பாகம் படிக்க இங்கே அழுத்தவும் 

உயிரெழுத்துக்கள்: 12 (குறில் 5 + நெடில் 7), மெய்யெழுத்துக்கள்: 18 (வல்லினம் – 6,மெல்லினம் – 6, இடையினம் – 6) எனத் தமிழில் முப்பது முதலெழுத்துக்கள் உள்ளன. இவையன்றி ஒவ்வொரு மெய்யெழுத்தும் உயிருடன் இணைந்து 12 வருக்க எழுத்துக்களை உருவாக்கும்; இவை உயிர்மெய் எனப்படும்; எனவே 18 மெய்யும் 12 உயிர்களுடன் இணைந்து 216 உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகின்றன; இவை வரிவடிவங்களேயன்றி முதலெழுத்துக்கள் அல்ல. அடுத்து ஆய்த எழுத்து என்ற (ஃ) முப்பாற்புள்ளி ஒன்றும் உண்டு. உயிர்மெய்யும், ஆய்தமும் சார்பெழுத்துகள் எனப்படும். இவையனைத்தும் நாம் அறிந்தவையே.

2.1. மொழி முதல் மற்றும் மொழி இறுதி எழுத்துக்கள்:
ஒரு சொல்லின் முதலில் வரும் எழுத்து மொழி முதல் எழுத்தாகும்; கடைசியில் வரும் எழுத்து மொழி இறுதி அல்லது ஈற்றெழுத்தாகும். கீழ்க்கண்ட சொற்களை நோக்குக:
அவன் என்னும் சொல்லில் மொழி முதல் எழுத்து அ, மொழி இறுதி எழுத்து அல்லது ஈற்றெழுத்து ன். பலகை என்னும் சொல்லில் மொழி முதல் எழுத்து ப், மொழி இறுதிஎழுத்து ஐ.

[பலகை என்ற சொல்லில் முதலெழுத்தாக வரும் ப என்பது ப் என்னும் மெய்யெழுத்தும் அ என்னும் உயிர் எழுத்தும் சேர்ந்த உயிர்மெய் ஆகும்; (அதாவது ப = ப் + அ) எனவே மொழி முதல் எழுத்து ப் என்னும் மெய்யெழுத்தே. அதேபோன்று கை என்னும் எழுத்து க் என்னும் மெய்யும் ஐ என்னும் உயிரும் சேர்ந்த உயிர்மெய் ஆகும் (அதாவது கை = க்+ஐ); எனவே மொழி இறுதி எழுத்து ஐ என்னும் உயிரெழுத்தே.]

கனல் என்னும் சொல்லில் மொழி முதல் எழுத்து க், மொழி இறுதி எழுத்து அல்லது ஈற்றெழுத்து ல். அவளா என்னும் சொல்லில் மொழி முதல் எழுத்து அ, ஈற்றெழுத்து ஆ இப்போது சொல்லுக்கு முதலிலும், ஈற்றிலும் வரும் மொழி முதல் எழுத்து மற்றும் மொழி இறுதி எழுத்துகளை எவ்வாறு காண்பது என்பது விளங்குகிறதல்லவா? சுருங்கக் கூறினால் மொழிக்கு முதலிலும், ஈற்றிலும் வரும் எழுத்து முதலெழுத்தாக (அதாவது உயிர் அல்லது மெய்) மட்டுமே இருக்கும்; ஆனால் மொழி முதல் எழுத்தாக மெய் எழுத்து தனித்து வருவதில்லை; உயிருடன் இணைந்து உயிர் மெய்யாக மட்டுமே வரும்;

எடுத்துக்காட்டாக ப்ரம்மா என்பது பிரம்மா என்றே எழுதப்படும்.

2.1.1. மொழி முதல் எழுத்துக்கள்
1. அ முதல் ஔ வரையிலான 12 எழுத்துக்களும் மொழிக்கு முதலில் வரும்.
(எடுத்துக்காட்டுகள்: அம்மா, ஆணி, இன்பம், ஈகை, உணவு, ஊர், எட்டு, ஏற்றம், ஐவர், ஒலி, ஓடு, ஔவை என்பன போன்று).

2. க், ச், த், ப், கிய 4 வல்லின எழுத்துக்களும் உயிருடன் இணைந்து மொழிக்கு முதலில் வரும். (எ-டு கடல், சிறகு, தென்றல், பொழுது, காற்று, சீற்றம், துணி, பெண்மை ஆகியன போன்று).

3. ந், ம், ஞ், என்னும் மெல்லின மெய்யெழுத்துக்கள் உயிருடன் இணைந்து மொழிக்கு முதலில் வரும் (எ-டு நான், மலை, ஞாயிறு, மொழி, நன்மை என்பவை போன்று).

4. வ், ய் என்னும் இடையின மெய்கள் உயிருடன் இணைந்து உயிர் மெய்யாக சொல்லுக்கு முதலில் வரும். (எ-டு வீடு, யானை போன்று)

2.1.2. மொழி இறுதி எழுத்துக்கள்அல்லது மொழி ஈற்றெழுத்துக்கள்
1. எ, ஒ தவிர்த்து ஏனைய 10 உயிர்களும் மெய்யோடு சேர்ந்து உயிர் மெய்களாக சொல்லின் இறுதியில் வரும் (எ-டு பல, பலா, மணி, தீ, படகு, அவனே, புதுமை, அவளோ, வௌ என்பன போன்று)

2. ஞ், ண், ந், ம், ன், ஆகிய 5 மெல்லின மெய்களும், ய், ர், ல், வ், ழ், ள், ஆகிய 6 இடையின மெய்களும், க 11 மெய்யெழுத்துக்கள் மொழியின் ஈற்றில் வரும் (எ-டு
உரிஞ், கண், பொருந், ம், மென், வாய், கார், ல், தெவ், தமிழ், கள் என்பன போன்று)