மது எனும் அரக்கன்

677

மது .. இதனால் எவ்வளவு குடும்பங்கள், மனிதர்கள் அழிக்கப்பட்டுள்ளனர்; அழிக்கப்படுகிறார்கள். சமுதாயம் சீரழிகிறது. அழிக்கப்படுகிறது. மதுவைக் குடித்தால் சோகம், கவலை போகும்; உடல் சோர்வு நீங்கி மனம் ஆனந்தம் அடையும் எனச் சொல்வர். தானாகச் சிந்தித்து செயல்படும் மனிதனை தெளிவாக சிந்தித்து செயல்படவிடாமல் தன் கட்டுப்பாட்டுக்குள் இயக்குவதுதான் மது.

இயத்திரம் போல் மதுவினால் எவ்வித கேடும் இன்றி இன்பத்தையே அனுபவித்து வாழ்கிறேன் என ஒரு மனிதன் சொல்ல முடியுமா. உலகத்தில் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் கூட மதுவுக்கு பழக்கப்பட்டு தன் நிலை மறந்து அநாகரிகமாக நடந்து கொள்கின்றார்கள்.

ஒரு குடும்பம் என எடுத்துக் கொண்டால் அதிலும் வறுமையே அன்றடம் வாழ்க்கையாகக் கொண்ட குடும்பத்தில் மதுவுக்கு பழக்கப்பட்ட குடும்பத் தலைவன் தன் பொறுப்பு மறந்து தன் குடும்பத்தை அவமானம், சோகம், கவலை, வறுமை போன்றவற்றில் தள்ளி தன்னையும் அழித்துக்கொள்கிறான்.

தினம் தினம் உழைத்து வாழும் குடும்பங்களில் மதுவினால் ஏற்படும் சோகத்தை எத்தனை பக்கம் ஆனாலும் எழுதி முடிக்க முடியாது. அதை அனுபவித்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கதையோ எத்தனையோ கோடிகள். குடும்பத்தை இழந்தோர்; தாய் தந்தையை இழந்தோர்; சகோதர, சகோதரிகளை இழந்தோர்; பிள்ளைகளை இழந்தோர்; மாமா, மாமி, பெரியப்பா, பெரியம்மா; சித்தப்பா, சித்தி, உறவுகள், சொந்தங்களை இழந்தோர் மது அரக்கன் உலகுக்குத் தந்த சாபங்கள்.

அவமானங்கள், சோகங்கள், கவலைகள், துன்பங்கள், அழிவுகள், இழப்புக்கள், இறப்புக்கள் தான் மதுவுக்கு அடிமையானோருக்கு மிஞ்சுகின்றன. முந்தைய காலங்களில் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு வந்தோர்,தீய பழக்கங்கள் உடையோர் தான் மதுவை குடித்தனர். இன்றைய விஞ்ஞான, பொருளாதார வளர்ச்சியில் சிறுவர்கள், பெரியவர்கள், நல்லவன், கெட்டவன் என்ற எந்த வேறுபாடே இல்லை.

அக்கிரமம், அநியாயம், அநாகரிகம், சமுதாயத் சீர்கேடுகள் தலை விரித்தாடுகின்றன. மானம், பண்புகள், கௌரவம், பாவம், புண்ணியம் எதைப்பற்றியும் கவலை இல்லை. மனிதனின் அத்தியாவசிய பொருளாகிவிட்டது மது.

மக்களுக்காக ஒரு அரசு இருக்குமானால் மதுவை ஒழித்து மக்களைக் காக்கும். அரசுகளே குடிக்க மக்களை ஊக்கிவிக்கிறது. மதுவை விற்று தன் மக்களை அழித்து உழைக்கும் கேவலத்தை நிறுத்தி அதை ஒழித்து தன் மக்கள் நல்ல வாழ்க்கை வாழவேண்டுமென அரசுகள் விரும்பினால் நிச்சயமாக நடக்கும். மதுவுக்கு செலவழிக்கும் பணத்தைக்கொண்டு மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். அதன் மூலம் அரசுக்கும் வருமானம் வரும்.

வ.பொ.சு–வயாவிளான் பொன்னம்பலம் சுகந்தன்