வடக்கின் மாங்கனிகள் வைக்கோல் இடப்பட்ட ‘காட்போட்’ பெட்டிகளில் பக்குவமாய் ஏறி தெற்கு நோக்கிப் பயணங்கள் போகும்.
சிறுகச் சிறுக சிங்களம் கதைக்கத் தெரிந்த தந்திரி ஒருவர் மாங்கனிகளின் அந்தப் பயணங்களுக்குத் துணை இருப்பார்.
இலங்கைப் போக்கு வரத்துச் சபை(இ.போ.ச)யின் பாதி இறந்து உக்கிப்போன வசுவண்டியிலோ
தண்டவாளத்துடன் தரையே அதிர பயணிக்கும் புகைவண்டியிலோ முட்டி மோதி ஏறிக்கொள்வார்.
உடலுடன் உள்ளமும் உடைந்தாலும் அரைகுறைச் சிங்களத்தினை தட்டுத் தடுமாறி பேசத் தெரிந்த அந்த தந்திரி உசிரே போனாலும் மாங்கனிகளை நசியவிடவே மாட்டார்.
கனிந்த கறுத்தக் கொழும்பான்
மாங்கனிகள்தான் சிங்கள
மந்திரிமாரின் நோனாக்களின்
மனங்களைக் கனிய வைக்கும்.
முக்கனிகளில் முதன்மையான கனியுடன் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கின் செம்பாட்டில் விளைந்த சின்ன வெங்காயமும் காற்றோட்டமான சாக்கில் ஏறிப் பயணம் போகும்.
மாங்கனியும் சின்னவெங்காமும்
மந்திரிமாரின் வீடுகளில் மந்திரம் செய்யும்.
மந்திரி வீடு சென்ற தந்திரியிடம் இந்த இரண்டினையும் விடவும் மேலான மந்திரம் ஒன்றும் உள்ளுறைந்திருக்கும்.
ஆனையிறவுத் தடைமுகாம்,மதவாச்சியின் கள்ளன்காடன்களிடம் தண்ணிகாட்டி மந்திரக்கோல் ஒன்றினை வைத்திருப்பார்.
ஆம்,அதுவரை உள்ளாடையில் உள்ளுறைந்த பணச்சுருளை மந்திரக்கோல் ஆக்குவார்.
சிங்கள மொழிச்சட்டமும்(Sinhala Only Act -1956) தமிழ் பேசும் மாணவர்கள் மீதான கல்வித் தரப்படுத்தலும்(Policy of standardization -1972) இருமுனை கொண்ட வாளாக மாறி மாங்கனித்தீவில் தமிழர் வாழ்வை குளற குளற குத்திக் குதறியது.
அரசாங்கத்தில் சிறு தொழில்களை தமிழன் பெறுவதற்கே சிங்கள மந்திரிகளின் கால்களை கழுவ வேண்டியிருந்த போது இவைகள்தான் காக்கா பிடிப்பதற்கு துணை நின்றவை.
“கோழி மேய்த்தாலும் அரசாங்கத்தில் மேய்க்க வேண்டும்” என்ற கேவலமான கோட்பாடு கோலோச்சிய 80களுக்கு முந்திய காலமது.
ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனத்தவர்
சிறுதொழில் பெறுவதற்கே பாரச் சிலுவை சுமந்தனர்.
அந்த எண்பது(80s)களில் அரச உயர் பதவிகளையே தூக்கி எறிந்துவிட்டு தீவிர பொது வாழ்வில் ஈடுபட்டவர்களும் உண்டு.
அவர்களின் வீரக்காதையுடன் மறுமடலில் உங்களுடன் கலப்பேன்.
– அன்புடன் அறத்தலைவன்-