ஆயிரம் பொய் சொல்லி என்றாலும் கல்யாணம் பண்ண வேண்டும் என்று பழமொழி உண்டு என்பர். வாழ்வதற்காக செய்யும் கல்யாணத்தை பொய் சொல்லிச் செய்யச் சொல்லி இருப்பார்களா நம் முன்னோர்கள். அப்படிப் பொய் சொல்லிக் கல்யாணம் செய்த குடும்பத்தில், உண்மை தெரிய வரும் போது சந்தோஷம் நிலைக்குமா? வாழ்க்கைதான் ருசிக்குமா? இல்லவே இல்லை. இந்தப் பழமொழி மருவி இருக்க வேண்டும்.
“ஆயிரம் பேருக்குப் போய்ச் சொல்லிக் கல்யாணம் செய்” என்பது சரியாக இருக்கக் கூடும். பதிவுத் திருமணம் இல்லாத காலத்தில் சாட்சிக்கு ஆயிரம் பேர் வேண்டும் என்றிருக்கலாம். ஆயிரம் பேருடைய ஆசிகள், வாழ்த்துகளுடன் வாழ்க்கையை தொடங்கச் சொல்லி இருக்கலாம். “ மனஸ்தாபப்பட்டு விலகி இருக்கும் சொந்தங்களுக்கு “ ஆயிரம்தான் இருந்தாலும் போய்ச் சொல்லி கல்யாணம் செய்” என்றுகூட அர்த்தம் இருக்கலாம்.
எது எப்படியோ? ஆயிரம் பொய் சொல்லிக் கல்யாணம் என்பது தவறாகக் கொள்ளப்பட்ட பொருள் என்பது மட்டும் உறுதி.